search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்
    X

    பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்

    திண்டுக்கல்லில் பா.ஜ.க. அலுவலகம் மற்றும் நிர்வாகியின் கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் தனிப்படை போலீசார் திணறி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்- கரூர் சாலையில் உள்ள மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர். அதே நாள் பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினரான போஸ் என்பவருக்கு சொந்தமான காரும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இந்த 2 சம்பவங்களிலும் மண்எண்ணை கலந்த பெட்ரோல் குண்டு பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.

    முன்னதாக கடந்த 16-ந் தேதி இந்து மக்கள் கட்சியின் தென்மண்டல தலைவர் தர்மா என்பவரின் காரும் அதிகாலையில் தீ வைத்து கொளுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகியான சங்கர்கணேஷ் என்பவர் ஒரு கும்பலால் வெட்டி தாக்கப்பட்டார்.

    திண்டுக்கல் நகரில் கடந்த 15 நாட்களாக நடந்து வரும் இதுபோன்ற சம்பவம் மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்துக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு இச்சம் பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சென்றார்.

    இதனையடுத்து நேற்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரராவ் ஆகியோர் பார்வையிட்டனர். தனிப்படை போலீசார் குற்றவாளிகளை பிடிப்பதில் மும்முரமாக ஈடுபட வில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இச் சம்பவங்களுக்கு இடையில் மாவட்ட பா.ஜ.க. கட்சி அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் இருந்த தபால் அலுவலக பின் கோடு எண்ணை வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கடித்தின் அனுப்புனர் முகவரியில் தெப்பக்குளம் என குறிப்பிடப்பட்டிருந்தது. பின்கோடு எண் 620002 என இருந்தது. எனவே திருச்சி தெப்பக்குளம் பகுதியில் இருந்து வந்ததா? எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இது தவிர பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகளிடம் வந்த தொலைபேசி மிரட்டல் எண்கள் குறித்தும் தனிப்படை போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே கோவை சசிக்குமார் கொலை வழக்கைபோல இந்த வழக்கும் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மீது தாக்குதல் மற்றும் பா.ஜ.க. அலுவலகத்திற்கு குண்டு வீச்சு போன்ற சம்பவங்களை கண்டித்து திண்டுக்கல்லில் இன்று கடை அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாவும் இதற்கு வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர். ஆனால் இன்று கடைகள் வழக்கம்போல் திறந்திருந்தன. அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க பள்ளிவாசல்கள் மற்றும் கோவில்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×