search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை மாநகராட்சி தேர்தல்: அ.தி.மு.க. சார்பில் மருத்துவ கல்லூரி மாணவி கவுன்சிலர் பதவிக்கு போட்டி
    X

    சென்னை மாநகராட்சி தேர்தல்: அ.தி.மு.க. சார்பில் மருத்துவ கல்லூரி மாணவி கவுன்சிலர் பதவிக்கு போட்டி

    சென்னை மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மருத்துவ கல்லூரி மாணவி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
    சென்னை:

    சென்னை மாநகராட்சிக்கான தேர்தல் அக்டோபர் மாதம் 19-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடும் 200 அ.தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியலை முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார்.

    தற்போது கவுன்சிலர்களாக உள்ள 42 பேருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 158 பேர் புதிதாக நிறுத்தப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. வேட்பாளர்களில் 2 என்ஜினீயர்கள், 2 ஆசிரியர்கள், 9 வக்கீல்கள், 56 பட்டதாரிகள் இடம் பெற்றுள்ளனர். இதில் பல் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவரும் இடம் பெற்றுள்ளார்.

    அவரது பெயர் கே.கல்பனா. தனியார் பல் மருத்துவக்கல்லூரியில் 4-ம் ஆண்டு தற்போது படித்து வருகிறார். கொடுங்கையூர் சின்னாண்டிமடம் கடும்பாடி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகள் ஆவார்.

    இந்த தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதால் மாநகராட்சி வார்டுகளில் பெரும்பாலானவை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 34-வது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

    மருத்துவ கல்லூரியில் படித்து வரும் மாணவியான கல்பனாவிற்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. 22 வயதாகும் கல்பனாவிற்கு அரசியல் பிரவேசம் புதிதாகும். சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு அளித்த முதல்-அமைச்சர் அம்மாவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு வெற்றி மலரை முதல்வரின் காலடியில் சமர்ப்பிப்பேன் என்று தெரிவித்தார்.
    மேலும் அவர் கூறியதாவது:-

    34-வார்டில் மக்கள் பணியாற்ற எனக்கு முதல்வர் வாய்ப்பு தந்து இருக்கிறார்கள். இதனை நான் சமுதாய பணியாக கருதி தேர்தல் களத்தில் இறங்குகிறேன். வீடு வீடாக சென்று முதல்வர் அம்மாவின் மகத்தான சாதனை திட்டங்களை எடுத்துக்கூறி ஓட்டு கேட்பேன்.

    இந்த வார்டில் மக்களின் அடிப்படை சுகாதார பணிகள், குடிநீர், சாலை வசதி மற்றும் பூங்காக்கள் போன்றவை சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. இதனால் நான் எளிதில் வெற்றி பெறுவது உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×