search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரவாயலில் டாக்டரை வெட்டி காரை கடத்திய வழிப்பறி கும்பல்: பச்சையப்பபா கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது
    X

    மதுரவாயலில் டாக்டரை வெட்டி காரை கடத்திய வழிப்பறி கும்பல்: பச்சையப்பபா கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது

    மதுரவாயலில் டாக்டரை வெட்டி காரை கடத்திய வழிப்பறி கும்பலில் பச்சையப்பபா கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை

    பாண்டிச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் வெற்றி விக்னேஷ். டாக்டரான இவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் விடுதியில் தங்கி மேல்படிப்பு படித்து வருகிறார்.

    நேற்று இரவு அவர் மதுரவாயல் ஏரிக்கரை சிக்னல் அருகே காரை நிறுத்தி விட்டு டீக்கடையில் நின்றார். அப்போது அங்கு வந்த 8 பேர் கும்பல் வெற்றி விக்னேசிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினர். அவர் பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கும்பல் சரமாரியாக கத்தியால் வெட்டினர்.

    பின்னர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரை கடத்தி சென்று விட்டனர். பலத்த காயம் அடைந்த வெற்றி விக்னேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கார் கடத்தல் குறித்து மதுரவாயல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உஷாரான போலீசார் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். விடிய விடிய வாகன சோதனை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை அண்ணாநகர் பகுதியில் கடத்தப்பட்ட கார் நிற்பதை சப்-இன்ஸ்பெக்டர் சுப்பையா, காவலர் ஆனந்த் ஆகியோர் கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து காரில் இருந்த 4 பேரை அவர்கள் பிடிக்க முயன்றனர். அவர்களில் 2 பேர் மட்டும் சிக்கினர். மற்ற இருவரும் காரில் தப்பி சென்று விட்டனர்.

    விசாரணையில் பிடிபட்டவர்கள் திருமங்கலம் அண்ணா தெருவை சேர்ந்த விக்னேஷ், அயனாவரத்தை சேர்ந்த மற்றொரு விக்னேஷ் என்பது தெரிந்தது.

    இதில் திருமங்கலத்தை சேர்ந்த விக்னேஷ் கல்லூரி மாணவர் ஆவார். அவர் பச்சையப்பா கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அயனாவரம் விக்னேஷ் மீது 2013-ம் ஆண்டு ஒரு கொலை வழக்கும் உள்ளது.

    கார் கடத்தல் வழக்கில் புகார் தெரிவித்து 6 மணி நேரத்தில் 2 குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை, போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் பாராட்டினார். தலைமறைவானவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×