search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் காரை வழிமறித்து கடத்தல்: ஹவாலா பணம் கொள்ளையில் மேலும் 2 போலீசார் கைது
    X

    சென்னையில் காரை வழிமறித்து கடத்தல்: ஹவாலா பணம் கொள்ளையில் மேலும் 2 போலீசார் கைது

    சென்னையில் இருந்து கேரள மாநிலம் மலப்புரம் நோக்கி சென்ற காரை கடத்தி ரூ.3.90 கோடி ஹவாலா பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக 2 போலீசார் கைது செய்யப்பட்டனர்
    கோவை:

    கோவை மதுக்கரை அருகே கடந்த மாதம் 25-ந் தேதி அதிகாலை சென்னையில் இருந்து கேரள மாநிலம் மலப்புரம் நோக்கி சென்ற காரை கடத்தி ரூ.3.90 கோடி ஹவாலா பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

    போலீஸ் உடையில் வந்த 3 பேர் இந்த துணிகர செயலில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் கேரளாவை சேர்ந்த சாகித், சுபாஷ், சுதிர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் கரூர் மாவட்டம் பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், ஏட்டு தர்மேந்திரன் ஆகியோருக்கு இந்த கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முத்துகுமார் உள்பட 3 போலீசாரும் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் நடந்த கார் கடத்தலிலும் தொடர்பு இருப்பதும், கரூர் மாவட்டம் க.பரமத்தி போலீஸ் ஏட்டு பழனிவேல், தென்னிலை போலீஸ் ஏட்டு அர்ஜூனன் ஆகியோருடன் சேர்ந்து காரை கடத்தியதும் தெரியவந்தது.

    இதையடுத்து ஏட்டுகள் பழனிவேல், அர்ஜூனன் ஆகியோரை விசாரணைக்காக கோவை தனிப்படை போலீசார் அழைத்து வந்தனர். இன்ஸ்பெக்டர் முத்துகுமார் கூறியதாலேயே அவருடன் வந்து காரை கடத்தியதாகவும், ஒரு நம்பர் மாறியதால் வேறு காரை கடத்தியது பின்னர் தெரிய வரவே காரை கரூரில் விட்டு சென்றதாகவும் அவர்கள் கூறினர்.

    இதையடுத்து ஏட்டுகள் பழனிவேல், அர்ஜூனன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவினாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று இரவு கோவை ஜெயிலில் அடைத்தனர்.

    தொடர்ந்து நடந்த விசாரணையில் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஹவாலா பணம் கடத்தல் கும்பல் தலைவன் கோடாலி ஸ்ரீதருடன் கரூர், திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் பலரும் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது.

    கைதான இன்ஸ்பெக்டர் முத்துகுமார் பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    முத்துகுமார் கன்னியாகுமரி மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது ஒரு ஹவாலா பணம் கடத்தல் வழக்கில் சிலரை கைது செய்தார்.

    அப்போது கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஹவாலா பணம் கடத்தல் கும்பல் தலைவன் கோடாலி ஸ்ரீதருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

    ஒரு கட்டத்தில் ஸ்ரீதரின் கையாளாக மாறிய இன்ஸ்பெக்டர் முத்துகுமார் அவர் கொடுத்த தகவலின்பேரில் ஹவாலா பணம் கொண்டு செல்லும் கார்களை மடக்கி பணத்தை கொள்ளையடித்து கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளார்.

    இந்த கும்பல் கணக்கில் காட்டப்படாமல் சட்ட விரோதமாக ஹவாலா பணம் கொண்டு செல்பவர்களிடம் மட்டுமே கைவரிசை காட்டி வந்ததால் இதுவரை போலீசில் சிக்கவில்லை. தற்போது மதுக்கரை சம்பவத்தில் கார் மட்டும் திருட்டு போனதாக கொடுத்த புகாரின் பேரில் இந்த கும்பலின் பின்னணி தெரியவந்துள்ளது.

    கொள்ளை பணத்தில் இன்ஸ்பெக்டர் முத்துகுமார் ரூ.50 கோடி வரை சொத்து சேர்த்ததாக கூறப்படுகிறது. மேலும் கரூர் மாவட்டத்தில் உள்ள தொழில் அதிபர்கள் மற்றும் பைனான்சியர்களிடம் பணத்தை கொடுத்து வட்டியாக மேலும் பல லட்சங்களை சம்பாதித்துள்ளார்.

    இதேபோல சப்-இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு மணல் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருந்துள்ளது. அவர் இதற்காக 2 லாரிகளை வாங்கி மணல் கடத்தலுக்கு பயன்படுத்தி உள்ளார்.

    இந்த லாரிகள் மூலம் கரூரில் இருந்து மணல் லோடு ஏற்றி பாதுகாப்பாக கேரளா மற்றும் பெங்களூருக்கு கொண்டு சென்ற வகையில் மட்டும் தினமும் ரூ.1 லட்சம் சம்பாதித்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    தற்போது மதுக்கரை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் முத்துகுமார் உள்பட 3 போலீசாரிடம் இருந்து ரூ.65 லட்சம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மீதி பணத்தை பறிமுதல் செய்வதற்காகவும், இந்த சம்பவங்களில் தொடர்புடைய போலீசார் யார்- யார்? என்பதை கண்டுபிடிக்கவும் இன்ஸ்பெக்டர் முத்துகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை திட்டமிட்டுள்ளது.

    இதற்காக இன்னும் ஓரிரு நாளில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
    Next Story
    ×