search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4-வது நாளாக ஜெயலலிதா உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பு
    X

    4-வது நாளாக ஜெயலலிதா உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பு

    மருத்துவமனையில் தொடர்ந்து 4வது நாளாக சிகிச்சைப்பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளதால் டாக்டர்களின் ஆலோசனைப் படி நாளை அவர் வீடு திரும்ப வாய்ப்பு இருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
    சென்னை:

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வியாழக்கிழமை இரவு சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து இழப்பு இருந்ததால் டாக்டர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டனர். இதில் ஜெயலலிதா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. காய்ச்சலும் குணப்படுத்தப்பட்டது.

    இதனால் அவர் வழக்கம் போல் சாப்பிட தொடங்கினார். ஆனாலும் ஜெயலலிதாவின் உடல் நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இதற்காக அவர் ஆஸ்பத்திரியிலேயே 4 நாட்களாக தங்கி இருக்கிறார். தினமும் காலை, மாலை, இரவு என அவரது உடல் நிலை பரிசோதிக்கப்படுகிறது.

    இன்று காலையும், மதியமும் அவரது உடல் நிலை டாக்டர்களால் பரிசோதிக்கப்பட்டது. இதில் அவர் நன்றாக குணம் அடைந்துள்ளது தெரியவந்தது.

    ஆனாலும் அவருக்கு மீண்டும் காய்ச்சல் வந்து விடக்கூடாது என்பதற்காக ஆஸ்பத்திரியிலேயே வைத்துள்ளனர். ஜெயலலிதாவுக்கு உதவியாக சசிகலா, இளவரசி ஆகியோர் ஆஸ்பத்திரியில் தங்கி உள்ளனர்.

    ஜெயலலிதா சாப்பிட போயஸ்கார்டனில் இருந்து உணவு கொண்டு வரப்பட்டு வழங்கப்படுகிறது.

    ஜெயலலிதா சிகிச்சை பெறும் வார்டில் உயர் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவை பார்க்க தலைமை செயலாளர் ராம மோகனராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட ஏராளமான அதிகாரிகள் வந்திருந்தனர். அவர்கள் டாக்டர்களிடம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி கேட்டறிந்தனர்.

    ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், விஜய பாஸ்கர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் ஆஸ்பத்திரிக்கு வந்து செல்கின்றனர். முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்களும் ஆஸ்பத்திரிக்கு வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண குணம் அடைய வேண்டி கோவில்களில் நடத்தப்படும் சிறப்பு பூஜை பிரசாதங்களையும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று வழங்கி வருகின்றனர்.

    ஆஸ்பத்திரி முன்பு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் ஏராளமானோர் தினமும் கூடி நிற்கின்றனர். ஆஸ்பத்திரி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு அதிகம் போடப்பட்டு உள்ளது.

    அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு செல்லும் கிரீம்ஸ் ரோடு முகப்பிலேயே போலீசார் இரும்பு தடுப்பு அமைத்து வாகனங்களை உள்ளே விட மறுப்பதால் நோயாளிகளின் வசதிக்காக 5 பேட்டரி கார்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் தங்கள் வாகனங்களை மெயின் ரோட்டிலேயே ஓரமாக நிறுத்தி விட்டு பேட்டரி காரில் அழைத்து செல்லப்பட்டு விடப்படுகின்றனர்.

    அ.தி.மு.க.வை சேர்ந்த மகளிர் அணியினர், தொண்டர்கள் சிலர் அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு தரையில் அமர்ந்து அங்கேயே முகாமிட்டுள்ளனர். முதல்-அமைச்சர் நலம் பெற மகளிரணியினர் மண்டியிட்டும் வேண்டினர்.

    ஆஸ்பத்திரிக்கு வந்த அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அப்பல்லோ ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் அம்மா உடல் நலத்துடன் நல்ல ஆரோக்கியமாக உள்ளார். ஆண்டவன் அருளால் மக்களின் பிரார்த்தனையால் குணம் அடைந்து விட்டார். நன்றாக சாப்பிடுகிறார்.

    அவர் வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற இருப்பதாக வரும் தகவல்கள் பொய்யான வதந்திகள். தவறான தகவல் ஆகும். அம்மா முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.

    அவர் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது இன்று தெரிந்துவிடும்’ என்றார்.

    ஜெயலலிதா வேகமாக குணம் அடைந்துள்ளதால் டாக்டர்களின் ஆலோசனைப் படி நாளை அவர் வீடு திரும்ப வாய்ப்பு இருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
    Next Story
    ×