search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தனி போலீஸ் நிலையம்: ஐகோர்ட்டு உத்தரவு
    X

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தனி போலீஸ் நிலையம்: ஐகோர்ட்டு உத்தரவு

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தனி போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தனி போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    சென்னை ஐகோர்ட்டில் கோயம்பேடு காய், கனி மற்றும் மலர் வியாபாரிகள் நலச்சங்கம் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது;-

    இந்த மார்க்கெட் 64 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு வியாபாரிகள் வாகனங்களோடு உள்ளே காய், கனிகளை கொண்டு வந்து விற்பதோடு குப்பைகளையும் ஆங்காங்கே போட்டுவிட்டுச் செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது.

    வாகனப் போக்குவரத்து, வாகன நிறுத்தம் போன்றவை முறைப்படுத்தப்படவில்லை. இதனால் நெரிசல் ஏற்படுகிறது. ஆட்கள் இல்லாத நேரங்களில் சட்டவிரோத சம்பவங்களும் நடக்கின்றன. இதனால் இரவு நேரங்களில் பெண் வியாபாரிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.

    சுகாதாரமான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போதிய அளவில் இல்லை. எனவே இங்கு ஒரு போலீஸ் நிலையத்தை அமைக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    கோயம்பேடு மார்க்கெட்டில் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும். அங்கு நடக்கும் சட்டவிரோத செயல்களை கண்காணித்து போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகன நிறுத்தம், குப்பைகளை வீசுவது ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். சுகாதார சீர்கேடை ஏற்படுத்துவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அந்த சந்தையை இரண்டாக பிரித்து நிர்வகிக்கலாம். அதுபோல் அங்கு தேவையான மருத்துவம் மற்றும் குடிநீர் வசதிகளை வியாபாரிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் சி.எம்.டி.ஏ. செய்து கொடுக்க வேண்டும். வழக்கு விசாரணை ஜனவரி 6-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×