search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலம் பெறும் இந்திய விமானப்படை- தலையங்கம்
    X

    பலம் பெறும் இந்திய விமானப்படை- தலையங்கம்

    இந்தியா புதிதாக நவீன ‘ரபேல்’ரக போர் விமானங்களை வாங்குவது இந்திய விமானப்படையின் பலத்தை மேலும் அதிகரிக்க உதவும்.
    சென்னை:

    இந்திய பாதுகாப்பு படைகளின் ஒரு அங்கம் இந்திய விமானப்படை ஆகும். இது எதிரி நாடுகளின் வான் வழித்தாக்குதலில் இருந்து இந்தியாவை பாதுகாத்தல் மற்றும் வான்வழித் தாக்குதலை முன்னின்று நடத்துவதையும் குறிக்கோளாக கொண்டது.

    இந்திய விமானப்படை 1932-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ந்தேதி தொடங்கப்பட்டது. அப்போது இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் இந்திய விமானப்படையை தொடங்கினார்கள். தற்போது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ந்தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா விடுதலை பெற்ற பிறகு இந்திய பாதுகாப்பு படையின் ஒரு பிரிவாக இந்திய விமானப்படை மாறியது.

    இந்திய விமானப்படை சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் வீரர்களை கொண்டது. சுமார் 1130 போர் விமானங்களும், 1700 மற்ற பயன்பாட்டு விமானங்களும் விமானப்படையில் உள்ளன. இந்திய விமானப்படை உலகில் நான்காவது பெரிய விமானப்படையாக திகழ்கிறது. இந்திய விமானப்படைக்கு ஜனாதிபதியே முதல் பெரும்படைத்தலைவர் ஆவார்.

    கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இந்திய விமானப்படைக்கு நவீன போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துடன் பேச்சு நடத்தியது. அதன்பிறகு வந்த மோடி அரசு பிரான்ஸ் நாட்டின் ‘டசால்ட்’ நிறுவனம் கோரியிருந்த விலை மிகவும் அதிகமாக இருப்பதாக கருதியது.

    அதைத் தொடர்ந்து பிரான்சில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நரேந்திர மோடி போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக பிரான்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு போர் விமானங்களின் விலையில் ரூ.5,600 கோடி குறைக்கப்பட்டது.

    இதையடுத்து பிரான்ஸ் நிறுவனத்திடம் ‘ரபேல்’ ரக போர் விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர், பிரான்ஸ் ராணுவ மந்திரி ஜீன் யூஸ் லீ டிரையன் ஆகியோர் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    நவீன தொழில்நுட்பத்தினால் ஆன ‘ரபேல்’ ரக போர் விமானங்கள் வருகிற 2019-ம் ஆண்டு முதல் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். மொத்தம் 36 ‘ரபேல்’ ரக போர் விமானங்கள் வாங்கப்படுகின்றன. இதற்கான தொகை ரூ.58 ஆயிரம் கோடி ஆகும்.

    பல்வேறு அதிநவீன வசதிகளுடன் துல்லியமாக இலக்கை தாக்கக்கூடிய வகையிலான ஏவுகணை மற்றும் பல வகையான போர் தளவாடங்கள் இதில் உள்ளன. இந்த ஏவுகணைகள் பி.வி.ஆர். எனப்படும் கண்ணுக்கு எட்டாத வெகு தொலைவில் உள்ள இலக்குகளை சென்று தாக்கும் சக்தி கொண்டவை.

    இந்த ஏவுகணை மூலம் வானத்தில் இருந்தபடியே 150 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்க முடியும். அதாவது எதிரி நாட்டின் வான் எல்லைக்குள் போகாமலேயே எதிரி நாடுகளின் மீது தாக்குதல் நடத்த முடியும்.

    இந்தியா-பாகிஸ்தான் இடையே கார்கில் போர் நடந்த போது 50 கி.மீ. தொலைவுக்கு சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணையை இந்தியா பயன்படுத்தியது.

    கார்கில் போரில் தோல்வி அடைந்த பிறகு பாகிஸ்தான் 80 கி.மீ. தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை வாங்கியது.

    இதையடுத்து இந்தியா தற்போது 150 கி.மீ. தூரம் சென்று தாக்கும் ஏவுகணையுடன் கூடிய போர் விமானங்களை வாங்குகிறது. ஏற்கெனவே உள்ள போர் விமானங்களின் ஆயுள்காலம் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இந்த நிலையில் இந்தியா புதிதாக நவீன ‘ரபேல்’ரக போர் விமானங்களை வாங்குவது இந்திய விமானப்படையின் பலத்தை மேலும் அதிகரிக்க உதவும். தற்போது பாகிஸ்தானுடனான உறவு மோசமாகி வருகிறது. இந்த நேரத்தில் நவீன போர் விமானங்கள் இந்தியாவின் வலிமைக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமையும்.
    Next Story
    ×