search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா வழக்கமான உணவு சாப்பிட்டார்: அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
    X

    ஜெயலலிதா வழக்கமான உணவு சாப்பிட்டார்: அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழக்கமான உணவை உட்கொண்டார். அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
    சென்னை:

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கு காய்ச்சல் காரணமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு நள்ளிரவு 2 மணி வரை தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் காய்ச்சல் குணமானது. இதையடுத்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியின் 2-வது தளத்தில் உள்ள அறைக்கு மாற்றப்பட்டார்.

    2 மணி நேரத்துக்கு ஒருமுறை அவரது உடல் நிலையை டாக்டர்கள் கவனித்து வருகிறார்கள். நேற்று காலை முதல் வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட வழக்கமான உணவை சாப்பிட்டார்.

    ஜெயலலிதாவுக்கு பல விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் ஒரு சில முடிவுகள் மட்டுமே வந்துள்ளது. மற்ற அனைத்து முடிவுகளும் வருவதற்கு 48 மணி நேரம் ஆகும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இன்று மொத்த பரிசோதனை முடிவுகளும் வந்து விடும். அதன் பிறகு அவர் மேற்கொண்டு சிகிச்சை பெற்று வீடு திரும்புவார் என தெரிகிறது. இன்னும் ஓரிரு நாளில் ஜெயலலிதா வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

    முதல் - அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று பகல் 11.30 மணிக்கு ஒரு அறிக்கை வெளியிட்டது.

    அதில் “முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழக்கமான உணவை உட்கொண்டார். அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

    முதல் - அமைச்சர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்து பிரதமர் மோடி, தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் அவர் குணம் அடைய வேண்டி வாழ்த்து செய்தி வெளியிட்டனர்.

    அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர்.

    வெளியூர்களில் இருந்தும் கட்சி நிர்வாகிகள் வந்து குவியத் தொடங்கினர். இதனால் ஆஸ்பத்திரி அமைந்துள்ள கிரீம்ஸ் சாலை பகுதியில் நேற்று போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் குணம் அடைந்ததாக ஆஸ்பத்திரியில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டதை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இன்றும் காலை முதல் ஆஸ்பத்திரி முன் தொண்டர்கள் கூடத்தொடங்கினர். ஆஸ்பத்திரியைச் சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    ஜெயலலிதா பூரண குணம் அடைய வேண்டி தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்களில் சர்வமத பிரார்த்தனை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×