search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் மேலும் 107 அம்மா உணவகங்கள் இன்று முதல் செயல்பட தொடங்கின
    X

    சென்னையில் மேலும் 107 அம்மா உணவகங்கள் இன்று முதல் செயல்பட தொடங்கின

    சென்னை 35-வது வார்டு எருக்கஞ்சேரியில் உள்ள மாநகராட்சி அம்மா உணவகத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மேலும் 107 அம்மா உணவகங்கள் தொடக்கவிழா இன்று நடைபெற்றது
    சென்னை:

    சென்னையில் ஏழை , எளிய மக்கள், கூலி தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள், சென்னையில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் உணவிற்காக பெரும் தொகை செலவழிக்கின்ற நிலை உள்ளது.

    அவர்கள் குறைந்த செலவில் காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளையும் வயிறார சாப்பிட வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மா உணவகத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிவைத்தார்.

    இத்திட்டத்திற்கு பொது மக்களிடம் அதிக வரவேற்பு கிடைத்ததையடுத்து அனைத்து மாநகராட்சி பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது.

    அம்மா உணவகங்களில் ஒரு ரூபாய் இட்லி பிரபலமானது. காலை உணவாக இட்லி, பொங்கலும், மதியம் லெமன், சாம்பார் சாதம், தயிர் சாதம், இரவு சப்பாத்தி பருப்பு கடைசல் போன்றவை வழங்கப்படுகிறது.

    பொங்கல் சாம்பார், லெமன், கருவேப்பிலை சாதம் போன்றவை 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இரவில் 2 சப்பாதி 3 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இதனை அந்தந்த பகுதிகளில் உள்ள முதியவர்கள், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவு பயன்படுத்துகிறார்கள்.

    அம்மா உணவகம் தரமான முறையில் உணவுகள் தயாரித்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்கிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும் வழங்கப்படுவதால் பொது மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர்.

    சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் ஆரம்பிக்கப்பட்ட அம்மா உணவகங்களில் கூட்டம் நிரம்பிவழிந்ததையடுத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் தொடங்கப்பட்டது. ராஜூவ் காந்தி அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி, எழும்பூர் குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனை உள்ளிட்ட 7 இடங்களில் அம்மா உணவகங்கள்திறக்கப்பட்டன.

    ஆஸ்பத்திரிக்கு வரும் புற நோயாளிகள், அவர்களின் உறவினர்கள், உதவியாளர்கள் அம்மா உணவகத்தில் உள்ள உணவுகளை ஆர்வத்துடன் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

    இதனால் மேலும் 93 இடங்களில் அம்மா உணவகம் படிப்படியாக தொடங்கப்பட்டது. தற்போது மாநகராட்சி வார்டுகளில் 293 இடங்களிலும் 7 அரசு ஆஸ்பத்திரிகளில் என மொத்தம் 300 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் மேலும் 107 இடங்களில் அம்மா உணவகங்கள் திறக்க மாநகராட்சி ஏற்பாடு செய்தது. மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் இதற்காக பிரத்யேக கட்டிடங்கள் கட்டப்பட்டன. சென்னை மாநகராட்சியின் விரிவாக்க பகுதிகளில் புதிய அம்மா உணவகங்கள் திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 107 அம்மா உணவகங்கள், இன்று திறக்கப்பட்டன. இதற்கான விழா 35-வது வார்டு எருக்கஞ்சேரியில் உள்ள மாநகராட்சி அம்மா உணவகத்தில் இன்று காலை நடந்தது. அமைச்சர் எஸ்.பி வேலுமணி புதிய அம்மா உணவகங்களை திறந்து வைத்தார்.

    இதையடுத்து அம்மா உணவங்களில் காலையில் இட்லி, பொங்கல், சாம்பார் வழங்கப்பட்டன. ஒவ்வொரு அம்மா உணவகத்திலும் பொதுமக்கள் காத்து நின்று உணவை வாங்கி சாப்பிட்டார்கள்.

    திறப்பு விழா நிகழ்ச்சியில் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. பி. வெற்றி வேல், மாநகராட்சி நிலைக்குழு தலைவர் லட்சுமி நாராயணன், கவுன்சிலர் டேவிட் ஞானசேகரன், நிர்வாகிகள் இளங்கோவன், ஜி.ஆர் பாபு, விஜயகுமார், பாஸ்கர், லட்சுமிபதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×