search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி பிரச்சினையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்: கருணாநிதி
    X

    காவிரி பிரச்சினையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்: கருணாநிதி

    காவிரி பிரச்சினையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    தமிழகத்துக்கு 6000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்தி வைத்துள்ளது.

    நேற்று கூடிய அனைத்துக் கட்சி கூட்டத்துக்குப்பின் கர்நாடக அரசு இந்த முடிவை எடுத்துள்ள நிலையில் தமிழகத்திலும் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாதித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடகாவில் அவசர அவசரமாக சட்டசபை சிறப்புக் கூட்டத்தை வருகின்ற 23ம் தேதி கூட்டியிருக்கிறார்கள் அதே போல தமிழகத்தில் இந்நேரத்திலாவது சட்டசபையை கூட்டியிருக்க வேண்டாமா?

    தமிழகத்துக்கு செப்டம்பர் 27-ம் தேதிவரை 6௦௦௦ கன அடி நீர் திறந்து விடும்படி உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிய கர்நாடகா அரசு வருகின்ற வெள்ளிக்கிழமை வரை தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டாம் என முடிவு செய்துள்ளது.

    காவிரி விவகாரம் தொடர்பாக அமைச்சரவை கூட்டம் மற்றும் அனைத்து கட்சி கூட்டங்களை கர்நாடக முதல்வர் சித்தராமையா நடத்தியிருக்கிறார். ஆனால் தமிழகத்தில் இதுவரையில் காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் எதுவும் கூட்டப்படவில்லை.

    6௦௦௦ கன அடி நீர் தங்களுக்கு போதாது என்று தமிழக விவசாயிகள் குரல் கொடுத்து வருகின்றனர். 110வது விதி மூலமாகவும், அறிக்கைகள் மூலமாகவும் நடைமுறைக்கு வராத திட்டங்களை அறிவித்துக் கொண்டு காலத்தையும், காகிதத்தையும் வீணடிக்காமல், அ.தி.மு.க. அரசு குறிப்பாக முதலமைச்சர் ஜெயலலிதா இனியாவது காவிரிப் பிரச்சினையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×