search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராம்குமாருக்கு தினமும் சிறையில் சித்ரவதை: ஐகோர்ட்டில் வக்கீல் பரபரப்பு வாதம்
    X

    ராம்குமாருக்கு தினமும் சிறையில் சித்ரவதை: ஐகோர்ட்டில் வக்கீல் பரபரப்பு வாதம்

    சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் தினமும் கொடுமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் சங்கரசுப்பு வாதிட்டார்.
    சென்னை:

    சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் கடந்த 18-ந்தேதி புழல் சிறையில் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 5 நாட்களாக வைக்கப்பட்டுள்ளது.

    கடந்த 19-ந்தேதி அன்று ராம்குமார் தரப்பில் ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்யும் குழுவில் எங்களது தரப்பு டாக்டர் ஒருவரும் இடம் பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அன்று அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அரசு டாக்டர்கள் 4 பேர் நியமிக்கப்பட்டனர்.

    இதையடுத்து நேற்று முன்தினம் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது 2 நீதிபதிகள் மாறுபட்ட கருத்தை தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்காக பரிந்துரைக்கப்பட்டது.

    இதன்படி ராம்குமாரின் பிரேத பரிசோதனை வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக கிருபாகரன் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை.

    இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது. நீதிபதி கிருபாகரன் வழக்கை விசாரித்தார். அப்போது ராம்குமார் தரப்பில் ஆஜரான வக்கீல் சங்கரசுப்பு பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வாதம் செய்தார்.

    ராம்குமாரின் தந்தை பரமசிவம் மகனை இழந்து விட்டார். இனி அவன் உயிருடன் வரபோவது இல்லை. ஆனால் அவனது மரணம் எப்படி நடந்தது என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

    தனது மகனின் சாவில் உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதற்காக தந்தை பரமசிவம் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

    கைது செய்யப்பட்டபோது கழுத்தை அறுத்து ராம்குமாரை கொடுமைப்படுத்தினர். இதுபற்றி செங்கோட்டை போலீசில் அவர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும் தினமும் ராம்குமார் கொடுமைப்படுத்தப்பட்டு உள்ளார். அவரை சித்ரவதை செய்த அதிகாரிகள் இப்போது தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார்கள்.

    220 வோல்ட் மின்சாரம் தாக்கி ராம்குமார் இறந்தார் என்பதை நம்பும்படி இல்லை. இ.எல்.சி.பி. (எர்த் லீக்கேஜ் சர்க்கியூட் பிரேக்கர்) கருவி பொருத்தப்பட்ட கட்டிடத்தில் 220 வோல்ட் மின்சாரம் தாக்கி யாரும் பலியாக மாட்டார்கள். இது பத்திரிகையில் செய்தியாக வெளிவந்தது.

    ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் குழுவில் டாக்டர் சம்பத்குமாரை நியமிக்க வேண்டும். அப்போதுதான் உண்மை வெளிவரும்.

    ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யலாம் என்று அரசு ஆணை போட்டுள்ளது.

    இவ்வாறு சங்கரசுப்பு வாதிட்டார்.

    இதையடுத்து கூடுதல் அட்வகேட் ஜெனரல் மணி சங்கர் வாதிட்டார். போலீஸ் காவலில் அல்லது சிறையில் ஒருவர் இறந்தால் அவரது உடலை அரசு டாக்டர்கள் மட்டுமே பிரேத பரிசோதனை செய்ய முடியும். இப்போது நியமிக்கப்படும் டாக்டர்கள் மீது மனுதாரருக்கு எந்த சந்தேகமும் இல்லை. எனவே தனியார் டாக்டர்களை நியமித்தால் பிரச்சினை வரும் என்று கூறினார். தொடர்ந்து வாதம் நடைபெற்றது.

    பிற்பகலில் வாதம் முடிந்து ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை வழக்கில் நீதிபதி கிருபாகரன் தீர்ப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×