search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சொகுசு கார் விபத்தில் தந்தை பலியானதால் பெற்றோரை இழந்து தவிக்கும் 7 வயது சிறுமி
    X

    சொகுசு கார் விபத்தில் தந்தை பலியானதால் பெற்றோரை இழந்து தவிக்கும் 7 வயது சிறுமி

    3 மாதத்துக்கு முன்னர் தாயும், தங்கையும் தீயின் கோரப்பசிக்கு இரையாகி விட்ட நிலையில் தற்போது தந்தையும் விபத்தில் உயிரிழந்து விட்டதால், 7 வயது சிறுமியான மாயிஷா தவியாய் தவிக்கிறாள். இதனால் அகூர் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.
    சென்னை:

    விதி.. எப்போது எந்த ரூபத்தில் வந்து நம்முடைய வாழ்க்கையில் விளையாடும் என்று யாராலும் கணிக்க முடியாது.

    திருத்தணி அருகே உள்ள அகூர் கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆறுமுகத்தின் குடும்பம் விதியின் விளையாட்டால் இன்று சின்னாபின்னமாகி இருக்கிறது. ஆட்டோ டிரைவரான ஆறுமுகம், அதே பகுதியை சேர்ந்த புஷ்பா என்ற பெண்ணை கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு மாயிஷா (7), ரஞ்சனா (5) ஆகிய மகள்கள்.

    மனைவியும், மகள்களும் திருத்தணி அகூரில் வசித்தனர். ஆறுமுகம் மட்டும் சென்னையில் தங்கி இருந்து ஆட்டோ ஓட்டி வந்தார்.

    இரவு பகல் பாராமல் வாடகை ஆட்டோவை ஓட்டி வந்த ஆறுமுகத்துக்கு அந்த ஆட்டோவின் உரிமையாளர் தினமும் 300 ரூபாய் கூலியாக கொடுத்து வந்தார். அளவான இந்த வருமானத்தில் சின்ன சின்ன பிரச்சினைகளுடன் சந்தோ‌ஷமாகவே நகர்ந்தது ஆறுமுகத்தின் குடும்ப வாழ்க்கை.



    நேரம் கிடைக்கும் போதெல்லாம் திருத்தணி அகூருக்கு செல்லும் ஆறுமுகம் மனைவி குழந்தைகளுக்கு பிடித்ததை வாங்கிச் செல்வார். கணவரின் வருகைக்காக புஷ்பாவும், தந்தையின் வருகையை எதிர்பார்த்து மகள்களான மாயிஷா, ரஞ்சனா இருவரும் காத்திருப்பார்கள். ஆறுமுகம் வீட்டுக்கு சென்றதும் அப்பா... என்று கட்டிப்பிடித்து ஆனந்தத்தை வெளிப்படுத்துவார்கள்.

    இந்த குடும்பத்தில் முதலில் தீயாக வந்து விதி விளையாடியது. கடந்த மே மாதம் குடும்ப பிரச்சினை காரணமாக 2-வது மகளான ரஞ்சனாவை கொன்று விட்டு புஷ்பா தீக்குளித்து பலியானார்.

    இதனை தொடர்ந்து மாயிஷா, தாயையும், சகோதரியையும் இழந்து தவித்தார். தனது பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார்.

    மனைவியையும், ஒரு மகளையும் இழந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பிய ஆறுமுகம் மகள் மாயிஷாவுக்காக கவலையை மறந்து ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்பினார்.

    சென்னைக்கு வந்து வழக்கம்போல ஆட்டோ ஓட்டி வந்தார். இரவு நேரங்களிலும் ஆட்டோ ஓட்டும் பணியில் ஈடுபட்டு வந்த ஆறுமுகம் சவாரி கிடைக்காத நேரங்களில் ஆட்டோவிலேயே படுத்து தூங்குவார்.

    கடந்த 18-ந்தேதி இரவிலும் ஆழ்வார்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களுடன் தனது ஆட்டோவையும் நிறுத்தி விட்டு ஆறுமுகம் தூங்கினார். அப்போது 2-வது முறையாக விதி விளையாடியது.

    இந்த முறை விதியின் விளையாட்டுக்கு ஆறுமுகம் பலியாகி விட்டார்.

    கார் பந்தய வீரரான விகாஸ் என்பவர் மது போதையில் சொகுசு காரை தாறு மாறாக ஓட்டிச்சென்று 12 ஆட்டோக்கள் மீது மோதினார். இதில் ஆறுமுகத்துடன் சேர்த்து 9 ஆட்டோ டிரைவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

    ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் ஆறுமுகத்தின் உயிரை மட்டும் காலன் காவு வாங்கிக் கொண்டான்.

    3 மாதத்துக்கு முன்னர் தாயும், தங்கையும் தீயின் கோரப்பசிக்கு இரையாகி விட்ட நிலையில் தற்போது தந்தையும் விபத்தில் உயிரிழந்து விட்டதால், 7 வயது சிறுமியான மாயிஷா தவியாய் தவிக்கிறாள். இதனால் அகூர் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

    18-ந்தேதி இரவில் விபத்தில் சிக்கிய ஆறுமுகம் மறுநாள் காலையில் உயிரிழந்தார். இதுபற்றி கேள்விப்பட்டதும் ஆறுமுகத்தின் உறவினர்கள் கண்ணீரில் மூழ்கினர். ஆனால் அப்பா இறந்த சோகத்தை கூட உணராமல், மாயிஷா விளையாடிக் கொண்டிருக்கிறாள்.

    சோகத்தில் அழக்கூட தெரியாத நிலையில் ‘டிசர்ட், ஸ்கட்’ அணிந்த நிலையில், என்ன நடந்திருக்கிறது என்பதை கூட முழுமையாக அறிந்து கொள்ளாமல் ‘வேலை முடிந்து அப்பா எப்போது வருவார், அப்பா எப்போது வருவார்’ என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார். இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும், உறவினர்களும் கண்கலங்குகின்றனர். பாட்டி மஞ்சுளா, மாயிஷாவை அருகில் இருந்து கவனித்து வருகிறார்.

    மாயிஷாவின் எதிர்காலம் அவளின் நம்பிக்கையான உறவினர்களின் கைகளிலேயே உள்ளது. நிச்சயமாக அவர்கள் மாயிஷாவை கைதூக்கி விடுவார்கள் என்று நம்புவோம்.
    Next Story
    ×