search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    16-ந்தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம்: விக்கிரமராஜா பேட்டி
    X

    16-ந்தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம்: விக்கிரமராஜா பேட்டி

    கர்நாடக வன்முறை சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார்.
    சென்னை :

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் பல்வேறு சங்கங்கள் மற்றும் அமைப்புகளை அழைத்து அவசர ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கே.மோகன் வரவேற்றார். மண்டலத் தலைவர் ஏ.எம்.சதக்கத்துல்லா, மாவட்ட தலைவர்கள் கே.ஜோதிலிங்கம், எம்.மாரித்தங்கம், என்.டி.மோகன், செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், கூடுதல் செயலாளர் வி.பி.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் பி.சுகுமார், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், சென்னை ஓட்டல்கள் சங்க செயலாளர் ராஜ்குமார், சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் ஏ.ஆனந்தன், தமிழ்நாடு ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.மாரிமுத்து உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தின் முடிவில் விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக தமிழகத்தை சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த பஸ்கள், லாரிகள் தீக்கிறையாக்கப்பட்டுள்ளன. ஓட்டல்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

    கன்னடர்கள் தாக்குதலால் ரூ.2 ஆயிரம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பு இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தமிழர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு கர்நாடக அரசு முழுமையான இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும்.

    கர்நாடகாவில் நடைபெற்று வரும் சம்பவத்தை கண்டித்தும், காவிரி நதிநீர் பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வருகிற 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும். அன்றைய தினம் பெரியக்கடைகள் முதல் டீக்கடை வரை சுமார் 21 லட்சம் கடைகள் அடைக்கப்படும். 11 லட்சம் லாரிகள், வேன்கள், ஓடாது. 55 ஆயிரம் மணல் லாரிகளும் ஓடாது.

    சினிமா தியேட்டர்கள், பெட்ரோல் பங்குகள், ஆட்டோக்கள், தனியார் வாகனங்கள், பேருந்துகள் போராட்டத்தில் பங்கேற்கும்படி அந்தந்த சங்க நிர்வாகிகளிடம் எங்களது நிர்வாகிகள் நேரடியாக சென்று கூறுவார்கள். அவர்கள் நல்ல முடிவை அறிவிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. பிரச்சினைக்கு முடிவு காணாத பட்சத்தில் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்று எச்சரிக்கிறோம்.

    எங்களின் போராட்டத்திற்கு தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்கும் என நம்புகிறோம். கர்நாடகாவில் நடைபெற்று வரும் சம்பவங்களை தேசிய கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ் வேடிக்கை பார்க்க கூடாது.

    தமிழகத்தில் நடைபெறும் ஒரு நாள் போராட்டத்தால் அரசுக்கு ரூ.200 கோடி வரி இழப்பு ஏற்படும். சுமார் ரூ.15 ஆயிரம் கோடிக்கு வர்த்தக பாதிப்பும் ஏற்படும். தமிழக மக்களின் உரிமைகளுக்காக நடைபெறும் போராட்டத்தில் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் ஆதரவு தர வேண்டும். போராட்டத்தை புறக்கணிப்பவர்கள் தமிழக மக்களுக்கு எதிரானவர்கள் ஆவர்.

    எந்த வகையிலும் தமிழகத்தில் வன்முறை சம்பவங்கள் நடைபெற யாரும் துணைபுரிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழக அரசு சட்டபூர்வமான நடவடிக்கையை எடுத்துள்ள நிலையில் அனைத்து கட்சி கூட்டத்தையும் கூட்டும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

    அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் தேசிய துணைத் தலைவர் என்ற முறையில் கர்நாடக வணிகர் சங்க நிர்வாகிகளை அழைத்து, அங்குள்ள தமிழர்களின் கடைகளுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்டேன் அவர்களும் உறுதி அளித்துள்ளனர்.

    அங்குள்ள நிலவரம் சற்று ஓய்ந்த பின்னர் நேரடியாக வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அளிக்க வாருங்கள் என்றும் தெரிவித்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×