search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கம் அருகே டிஜிட்டல் பேனரால் சிக்கிய எய்ட்ஸ் மாப்பிள்ளை - திருமணம் தடுத்து நிறுத்தம்
    X

    செங்கம் அருகே டிஜிட்டல் பேனரால் சிக்கிய எய்ட்ஸ் மாப்பிள்ளை - திருமணம் தடுத்து நிறுத்தம்

    செங்கம் அருகே டிஜிட்டல் பேனரால் சிக்கிய எய்ட்ஸ் மாப்பிள்ளையின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. மணப்பெண் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உறவினரை மணந்தார்.
    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது35). அவருக்கு 2014-ம் ஆண்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    செங்கம் அரசு மருத்துவ மனையில் அவர் சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதை செந்தில்குமாரிடம் டாக்டர்கள் தெரிவித்து, செங்கம் அரசு மருத்துவ மனையின் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயாளிகள் பட்டியலில் செந்தில்குமார் பெயரை சேர்த்தனர். இதையடுத்து, அவருக்கு எச்.ஐ.வி. கட்டுப்படுத்தும் மாத்திரைகள் மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்தன.

    அத்துடன், நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என உறுதியளித்து, செந்தில்குமார் கடிதம் எழுதிக் கொடுத்துள்ளார். எனினும், குடும்பத்தினருக்கு தெரிவிக்காமல், எச்.ஐ.வி. பாதிப்புக்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

    இதற்கிடையில், செந்தில் குமாருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு எடுத்தனர். கலசபாக்கம் அருகே கேட்ட வரம்பாளையத்தை சேர்ந்த கலையரசி என்ற பெண்ணை பார்த்து, பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு 22-ம் தேதி செங்கம் மண்டபத்தில் திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது.

    அப்போது, செங்கத்தில் வைக்கப்பட்டிருந்த திருமண வரவேற்பு டிஜிட்டல் பேனரில் செந்தில்குமார் படம் இருப்பதை மருத்துவத் துறையை சேர்ந்த சுகாதார ஆய்வாளர் ஒருவர் பார்த்து அதிர்ச்சியடைந்தார். செங்கம் அரசு மருத்துவ மனை தலைமை டாக்டர் செந்திலுக்கு தகவல் கொடுத்தார்.

    செந்தில்குமாரை செல்போனில் டாக்டர் செந்தில் தொடர்பு கொண்டு, திருமணம் குறித்து விசாரித்தார். அப்போது பதில் எதுவும் கூறாமல் போனை செந்தில்குமார் சுவிட்ச் ஆப் செய்தார். இதனால் டாக்டர்கள் சந்தேகமடைந்து உடனடியாக திருவண்ணாமலை கலெக்டர் (பொறுப்பு) பழனிக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து திருமண மண்டபத்துக்கு ச்ப்-கலெக்டர் உமா மகேஸ்வரி, செங்கம் டி.எஸ்.பி. ஷாஜிதா, தாசில்தார் காமராஜ் ஆகியோர் 21-ம் தேதி இரவு 11 மணிக்கு வந்தனர். அங்கு மணமகள் கலையரசியை அவர்கள் சந்தித்து, மணமகன் செந்தில் குமாருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது குறித்து கூறினர். எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் அவருடைய பெயர் இருப்பதையும் அவர்கள் காட்டினர்.

    இதைக்கேட்டு கலையரசி அதிர்ச்சியடைந்தார். அதிகாரிகள் அறிவுரையை ஏற்றுக்கொண்டு, தக்க சமயத்தில் தகவல் தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்தார். இனி இந்த திருமணம் நடக்காது என கலையரசி முடிவு செய்து பெற்றோரை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார்.

    அங்கு உறவினர் ஒருவரின் மகனை கலையரசிக்கு திருமணம் செய்ய சம்பந்தம் பேசி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கலையரசிக்கு திருமணம் நடந்தது.
    Next Story
    ×