search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவர்கள் மோதலில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டுள்ள காட்சி.
    X
    மாணவர்கள் மோதலில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டுள்ள காட்சி.

    அண்ணா சாலையில் மாணவர்கள் மோதல்: பஸ் மீது கல்வீசி தாக்குதல்

    சென்னை அண்ணா சாலையில் மாணவர்கள் நேற்று கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் பஸ் மீது கல்வீசி தாக்கப்பட்டது.
    சென்னை :

    சென்னையில் கல்லூரிகள் திறக்கப்பட்ட நாளில் இருந்து ஒரு நாள் கூட இடைவெளிவிடாமல் மாணவர்கள் அடி-தடி மோதல், பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் போன்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் தள்ளப்பட்டு, கல்லூரியில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள். இருந்தாலும் மாணவர்களின் மோதல் சம்பவம் நின்றபாடில்லை.

    கடந்த ஒருவாரத்தில் மட்டும் 7 பஸ்கள் தாக்கப்பட்டு சேதம் அடைந்துள்ளன. நேற்று காலையில் மாணவர்கள் மோதல் சம்பவம் நடக்கவில்லை. ஆனால் பிற்பகல் 2 மணி அளவில், சென்னை அண்ணாசாலை சிம்சன் பஸ் நிறுத்தத்தில் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டு, மாநகர பஸ்சை உடைத்துவிட்டனர்.

    விவேகானந்தர் இல்லத்தில் இருந்து, திரு.வி.க. நகர் நோக்கி சென்ற 38 சி மாநகர பஸ், அண்ணா சாலை பெரியார் சிலை அருகே சிம்சன் பஸ் நிறுத்ததில் நின்றது. அந்த பஸ்சில் ஏற்கனவே சில மாணவர்கள் இருந்தனர்.

    அதே பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறுவதற்கு வேறு சில மாணவர்கள் நின்றிருந்தனர். கண் இமைக்கும் நேரத்திற்குள் பஸ்சில் பயணித்த மாணவர்களும், பஸ் ஏற காத்திருந்த மாணவர்களும் அடி-தடி மோதலில் இறங்கினார்கள். இந்த மோதலில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டது. உடனே உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர். ஆனால் மோதல் மற்றும் பஸ் மீது தாக்குதல் நடத்திய மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அம்பத்தூரில் நேற்று முன்தினம் அரசு பஸ்சின் கண்ணாடிகளை உடைத்ததாக பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள், பிரசாத் (19), ஆறுமுகம் (18), அஜித்குமார் (18), ராஜேஷ் (18), பிரகாஷ் (19), மணிகண்டன் (18), சஞ்சய் (18), ஆருண்ராஜ் (18), இளவரசன் (18) ஆகிய 9 பேரையும் அம்பத்தூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்திய பிறகு புழல் சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×