search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை பொதுக்குழு கூட்டத்தில் முடிவு: 126 பேர் இடைநீக்கத்தை திரும்ப பெறும் வரை வக்கீல்கள் போராட்டம் தொடரும்
    X

    தஞ்சை பொதுக்குழு கூட்டத்தில் முடிவு: 126 பேர் இடைநீக்கத்தை திரும்ப பெறும் வரை வக்கீல்கள் போராட்டம் தொடரும்

    வக்கீல்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என்று வக்கீல்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
    தஞ்சாவூர்:

    வக்கீல்களுக்கு எதிரான புதிய சட்ட திருத்தத்தை வாபஸ்பெறக்கோரி வக்கீல்கள் கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் தொடர்ந்து கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஆர்ப்பாட்டம், நகல் எரிப்பு, மனித சங்கிலி, உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களையும் நடத்தினர்.

    இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு வளாகத்தை வக்கீல்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சுமார் 10 மணி நேரம் இந்த போராட்டம் நடந்தது.

    இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து வக்கீல்களுக்கு எதிரான புதிய சட்ட திருத்தம் நிறுத்தி வைக்கப்படும் என்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கவுல் அறிவித்தார். இந்த அறிவிப்பு குறித்து தஞ்சையில் பொதுக்குழுவை கூட்டி அறிவிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்கள் அறிவித்தனர்.

    அதன்படி தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமலைராஜன் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை விளக்கி தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமலைராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வக்கீல்களுக்கு எதிரான புதிய சட்ட திருத்தத்தை எதிர்த்து வக்கீல்கள் போராடி வரும் சூழ்நிலையில் உயர்நீதிமன்றத்தின் 3 உத்தரவுகள் எங்களை திருப்தி செய்யவில்லை. ஏமாற்றும் விதமாக உள்ளது. அதை ஏற்க மறுத்துவிட்டோம். ஏற்கனவே 43 வக்கீல்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    தற்போது இல்லாத சட்டத்தை உபயோகப் படுத்தி 126 வக்கீல்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த உத்தரவை திரும்ப பெறும் வரையிலும், மேலும் பல்வேறு வக்கீல்கள் மீதான நடவடிக்கைகளை திரும்ப பெறும் வரையிலும் எங்களின் போராட்டம் தொடரும்.

    ஏற்கனவே எங்களுடன் பேச்சு நடத்த 5 நீதிபதிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு முன்பு ஏன் ஆஜராகவில்லை என்று கேட்கிறீர்கள். இந்த குழுவில் உள்ள 3 நீதிபதிகள் வக்கீல்களுக்கு எதிரான புதிய சட்ட திருத்தத்தை கொண்டு வந்தவர்கள். அவர்களை குழுவில் நியமித்தால் எங்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்.

    தமிழகத்தில் உள்ள வக்கீல்கள் பிரச்சினைக்கு அகில இந்திய பார் கவுன்சில் துணைத்தலைவர் பிரபாகரன், தமிழக பார்கவுன்சில் தலைவர் செல்வம் தான் காரணம். இவர்கள் 2 பேரும் மெய்வழி முருகமழை என்ற சட்டக்கல்லூரியில் படித்ததாக கூறி உள்ளனர். அந்த கல்லூரி எங்கே இருக்கிறது என்பதற்கான அறிகுறி இல்லை. 2 பேரும் சட்டப்படிப்பு படித்தார்களா? என்ற சந்தேகம் உள்ளது. எனவே அகில இந்திய பார் கவுன்சில் அவர்களின் சான்றிதழ் உண்மையா? போலியா? என ஆய்வு செய்ய வேண்டும். போலியாக இருந்தால் அவர்கள் மீது கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வக்கீல்கள் மீதான இடைநீக்கம் உத்தரவை வாபஸ் பெறாவிட்டால் அனைத்து வக்கீல்களும் லைசென்சை திரும்ப ஒப்படைக்க தயார் நிலையில் உள்ளோம். இதற் காக இந்த கூட்டத்தில் 1,000 வக்கீல்கள் லைசென்சை ஒப்படைக்க தயார் என கையெழுத்திட்டுள்ளனர். எனவே தமிழகம் முழுவதும் உள்ள 65 ஆயிரம் வக்கீல்களும் லைசென்சை திரும்ப ஒப்படைக்க திட்டமிட்டுள்ளோம்.

    எங்களின் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் வருகிற 5-ந்தேதி வரை நடைபெறும். அதன் பின்னரும் எங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 6-ந்தேதி போராட்டக்குழுவின் செயற்குழு கூட்டத்தை கூட்டி முடிவு செய்ய உள்ளோம். தமிழக அரசு இந்த பிரச்சினையில் 2 தரப்பினருக்கும் பொதுவாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், வக்கீல் சங்க தலைவர்கள், செயலாளர்கள், வக்கீல்கள் கலந்துகொண்டனர்.

    இந்த நிலையில் கூட்டத்தில் உளவு பார்க்க வந்ததாக கூறி நீதிமன்ற ஊழியர் ஒருவரையும், போலீஸ் உளவுப்பிரிவின் சுருக்கெழுத்தரையும் வக்கீல்கள் தாக்கினர்.

    இந்த தகவல் அறிந்ததும் வக்கீல் சங்க நிர்வாகிகள் சிலர் அங்கு வந்து 2 பேரையும் பாதுகாப்பாக வெளியே அழைத்துக்கொண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    வக்கீல்கள் போராட்டம் காரணமாக ஐகோர்ட்டு நடவடிக்கைகளில் பாதிப்பு இருக்காது என்று கூறப்படுகிறது. ஆனால் மாவட்ட அளவிலான நீதிமன்றங்கள், மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளில் வழக்கு விசாரணை வெகுவாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே வக்கீல்கள் போராட்டம் நீடித்தால் அவர்கள் மீது நடவடிக்கை தொடரும் என்று அகில இந்திய பார் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன்குமார் மிஸ்ரா கூறியதாவது:-

    சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த சட்ட திருத்தத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 126 வக்கீல்களை இந்திய பார் கவுன்சில் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

    சட்ட திருத்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்த பின்னரும், அதற்காக ஒரு குழுவை அமைத்த பின்னரும், பேச்சுவார்த்தை மூலமாக சுமுக தீர்வு காண முன்வந்த பிறகும் ஏன் போராட்டங்கள் தொடர்கின்றது.

    போராட்டத்திற்கு காரணமான வக்கீல்கள் குறித்து பட்டியல் தயாரிக்க தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு பெறப்படும் பட்டியலில், ஆயிரம் பேர் இருந்தாலும், தேவைப்பட்டால் அவர்கள் அனைவரையும் இடைநீக்கம் செய்ய இந்திய பார் கவுன்சில் தயங்காது. ஏனென்றால், நீதித்துறையின் மாண்பு காக்கப்பட வேண்டும்.

    இந்த போராட்டத்தினால் சட்டக்கல்வி பயிலும் மாணவர்கள், சட்ட சேவை செய்ய விரும்பும் வக்கீல்கள், அப்பாவி மக்கள் போன்றோர் பாதிக்கப்படுகின்றனர். வக்கீல்களின் கல்வி சான்றிதழ்களை ஆய்வு செய்ததில், 30 சதவீதம் பேர் வக்கீல்களே இல்லை. அவர்கள் போலி சான்றிதழ்கள் மூலம் வக்கீல்களாக சேர்ந்து உள்ளனர்.

    வக்கீல்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். பார் கவுன்சில் செயற்குழு தலைவர் அபூர்ப குமார் மிஸ்ரா தலைமையில் 7 பேர் கொண்ட கமிட்டி அமைத்து, அடுத்த வாரம் தமிழகம் செல்ல உள்ளனர். பார் கவுன்சிலின் தலைவர்களையும், மாவட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்து பேசி, அதன்பின் உயர்நீதிமன்ற நிர்வாகத்திடம் சட்டத்திருத்தத்தை வாபஸ் பெறுவது குறித்து பேசுவோம். ஆனால் சட்டத்திருத்தத்திற்கு எதிராக எதிர்ப்பை காட்டுவதற்கு போராட்டம் என்பது சரியான முறையல்ல.

    இவ்வாறு மனன்குமார் மிஸ்ரா கூறினார்.
    Next Story
    ×