search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நன்னிலம் அரசு பள்ளியில் புத்தாக்க அறிவியல் கண்காட்சி: அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்
    X

    நன்னிலம் அரசு பள்ளியில் புத்தாக்க அறிவியல் கண்காட்சி: அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்

    நன்னிலம் அரசு பள்ளியில் புத்தாக்க அறிவியல் கண்காட்சி அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதுதில்லி அறிவியல் தொழில்துட்பத்துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையம் இணைந்து நடத்தும் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான அறிவியல் கண்காட்சி தொடக்க விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் மா.மதிவாணன் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் இரா.காமராஜ் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது:–

    கல்வி என்பது ஒரு கேடயம்.அதை நீங்கள் உணர்ந்து கடுமையாக முயற்சி செய்து படித்து வெற்றி பெற வேண்டும். உங்களது பெற்றோர்களுக்கும் இந்த நாட்டுக்கும் நல்லவர்களாக இருக்க வேண்டும்.வாழ்க்கை என்பது விளையாட்டல்ல இதை பொறுப்பாக உணர்ந்து வாழ வேண்டும். ஒழுக்கமாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.ஒழுக்கம் தான் உங்களை வாழ்க்கையின் உச்சத்திற்கு கொண்டு செல்லும்.

    ஓரு சிற்பி ஆயிரம் சிலைகளை வடிவமைப்பது போல் ஒரு ஆசிரியர் ஆயிரம் மாணவர்களை உருவாக்கலாம். மாணவ, மாணவிகள் படிக்கிற காலம் என்பது குறைந்த காலம் அக்காலத்தில் நன்கு புரிந்து கொண்டு பயில வேண்டும். முயற்சியின்மை இருந்தால் எந்த வெற்றியும் பெற முடியாது. கல்வி என்ற அடித்தளத்தை அமைத்துக் கொண்டால் அது ஒரு மனிதனை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். சாதாரணமாக பிறப்பவர்கள் வலிமையான உழைப்பால் வலிமையானவராக உயரலாம்.மாணவ பருவத்தில் கிடைக்கிற வாழ்க்கை எந்த பருவத்திலும் கிடைப்பதில்லை.

    இன்றைய தினம் பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களின் படைப்பு திறனை வெளிபடுத்துவதற்கு அறிவியல் கண்காட்சி ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும் இங்கு 30 உயர்நிலைப்பள்ளிகள், 23 மேல்நிலைப்பள்ளிகள், 138 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள், 6 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், 11 மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த மாணவ.மாணவியர்கள் கலந்து கொண்டு உணவு ,உடல்நலம் மற்றும் தூய்மை, மேலாண்மை வளங்கள், தொழிற்சாலை, வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை, மேலாண்மை வாழ்விற்கு கணிதத்தின் பங்கு ஆகியவைகள் குறித்து சுமார் 208 படைப்புகள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. இக்காண்காட்சியை காணும் போது மாணவ, மாணவிகளின் அறிவியல் கண்டுபிடிப்புகள் வளரும் பாரதத்திற்கு உதவும் வகையில் முன்னோடியாக இருக்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகன்ராஜ், மாவட்ட கல்வி அலுவலர் சரோஜா, வருவாய் கோட்டாச்சியர் முத்துமீனாட்சி, நன்னிலம் பாரதிதாசன் உறுப்புக்கல்லூரி முதல்வர் டாக்டர்.காமராஜ், ஒன்றியக்குழு தலைவர்கள் (குடவாசல்) பாப்பா சுப்பிரமணியன், (நன்னிலம்) சம்பத், நன்னிலம் பேரூராட்சி தலைவர் ராணிசுவாதி கோபால், மன்னார்குடி நகர்மன்ற தலைவர் சுதா அன்பு செல்வன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் உதயகுமார், தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணைய துணைத் தலைவர் சி.பி.ஜி.அன்பு, ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராமகுணசேகரன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சந்திரன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் தெய்வ பாஸ்கர், மாவட்ட அறிவியல் ஒருங்கிணைப்பாளர் பாலு மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×