search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேஸ்-புக்கில் ஆபாச படம் வெளியானதால் ஆசிரியை தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
    X

    பேஸ்-புக்கில் ஆபாச படம் வெளியானதால் ஆசிரியை தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

    வினுபிரியாவின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்தால் தான் அவரது உடலை வாங்குவோம்என்று அண்ணாதுரை மற்றும் அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை அடுத்த இடங்கணா சாலை ஸ்ரீபுவன கணபதி கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை. விசைத்தறி தொழில் செய்து வருகிறார்.

    இவரது மகள் வினுபிரியா (வயது21). பி.எஸ்.சி. படித்துள்ள இவர் இளம்பிள்ளையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி அண்ணாதுரையின் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு வினுப்பிரியா மைதிலி என்ற பேஸ்புக் ஐ.டி.யில் இருந்து நட்பு வட்டத்தில் இணைய கேட்டு ஒரு மெசேஜ் வந்தது.

    அது வினுப்பிரியாவின் ஐ.டி. என்று நினைத்த உறவினர் அதனை ஏற்றுக்கொண்டு அந்த ஐ.டி.யை திறந்து பார்த்தார். அப்போது மார்பிங் செய்யப்பட்ட வினு பிரியாவின் ஆபாச படங்கள் அதில் இருந்தது. அதிர்ச்சி அடைந்த உறவினர் இதுகுறித்து அண்ணாதுரையிடம் கூறினார்.

    இதை தொடர்ந்து அண்ணாதுரை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க எஸ்.பி. உத்தரவிட்டதை தொடர்ந்து மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வந்தார். இதற்கிடையே வினுபிரியாவின் உறவினர்கள் அந்த பேஸ்-புக் ஐ.டி.யை முடக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

    அதற்கு போலீசார் பேஸ்-புக் சர்வர் வெளிநாட்டில் உள்ளதால் உடனடியாக முடக்க முடியாது. குறைந்தபட்சம் 20 நாட்களாவது ஆகும் என்றும் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி மாலை அந்த ஐ.டி.யில் வினுப்பிரியாவின் படத்தை போட்டு தொடர்புக்கு என்று அண்ணாதுரையின் செல்போன் நம்பரும் பதிவு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் வெறுத்துபோன அண்ணாதுரை சங்ககிரி டி.எஸ்.பி.யிடம் புகார் தெரிவிப்பதற்காக நேற்று மனைவி மஞ்சுவுடன் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். அப்போது வினுப்பிரியா மற்றும் அவரது பாட்டி கந்தம்மாள் ஆகியோர் வீட்டில் இருந்தனர்.

    மதியம் வீட்டின் இரு பக்க கதவுகளும் மூடப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்த கந்தம்மாள் அக்கம் பக்கத்தினரிடம் கூறினார். அவர்கள் வந்து கதவை உடைத்து பார்த்த போது வினுப்பிரியா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    தகவல் அறிந்து பதறியடித்த படி வீட்டுக்கு வந்த கணவன்-மனைவி இருவரும் மகளின் சடலத்தை கண்டு கதறி துடித்ததால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது.

    இதற்கிடையே அங்கு விரைந்து சென்ற மகுடஞ்சாவடி போலீசார் வினுபிரியாவின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு சோதனை செய்த போது போலீசாரிடம் வினுப்பிரியாக எழுதிய கடிதம் சிக்கியது. அதில்,

    முதலில் என்னை மன்னித்து விடுங்கள், என் வாழ்க்கை முடிந்த பின் வாழ்ந்து என்ன செய்யப்போகிறேன். எனக்கு வாழ பிடிக்கவில்லை. அம்மா, அப்பாவே என்னை நம்பாத போது நான் உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம், அவர்களே என்னை பற்றி கேவலமாக பேசுகிறார்கள். சத்தியமாக சொல்கிறேன், என் போட்டோவை நான் யாருக்கும் அனுப்பவில்லை. எந்த தப்பும் நான் செய்யவில்லை என்னை நம்புங்கள், மீண்டும் ஒரு முறை சாரி, சாரி... இவ்வாறு அதில் எழுதப்பட்டிருந்தது.

    இது குறித்து மகுடஞ்சாவடி போலீசாரும், சைபர் கிரைம் போலீசாரும் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அண்ணாதுரை தனது ஸ்மார்ட் போன் வாட்ஸ் அப்பில் மகள் வினுப்பிரியாவின் படத்தை புரொபைல் படமாக வைத்துள்ளார். அந்த படத்தை தான் மர்ம நபர்கள் காப்பி செய்து மார்பிங் கில் ஆபாசமாக வெளியிட்டதும் தெரிய வந்தது.

    மேலும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வினுபிரியாவை மேட்டூர் காவேரி நகரை சேர்ந்த முகமது சித்திக் (21) என்ற வாலிபர் பெண் கேட்டு வந்தார். அவர் வேறு மதம் என்பதால் பெண் கொடுக்க அண்ணாதுரை மறுத்தார். கடந்த 14-ந் தேதியும் அண்ணாதுரையிடம் போனில் தொடர்பு கொண்டு அந்த வாலிபர் பெண் கேட்டுள்ளார்.

    இதையடுத்து வாட்ஸ்-அப்பில் ஆபாச படங்கள் பரவியதால் அவரைபிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவருக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்று தெரிய வந்ததால் அவரிடம் எழுதி வாங்கி விட்டு அனுப்பி வைத்து விட்டனர்.

    இதற்கிடையே நாமக்கல்லில் கல்லூரியில் படித்த போது வினுபிரியாவும், அதே கல்லூரியில் படித்த மைதிலியும் தோழியாகி உள்ளனர். இதில் மைதிலி அதே கல்லூரியில் படித்த ஒரு வாலிபரை காதலித்ததாகவும், அந்த வாலிபர் ஒரு தலையாக வினுபிரியாவை காதலித்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் மைதிலி தன் காதலரை தன் வசப்படுத்த வினுபிரியாவுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் மைதிலி வினுபிரியா என்ற பெயரில் பேஸ்புக் ஐ.டி.யை போலியாக உருவாக்கி வினுபிரியாவின் ஆபாச படங்களை வெளியிட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

    இதனால் தற்போது சென்னையில் பணிபுரிந்து வரும் மைதிலியை போலீசார் சேலத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். அவரிடம் விசாரித்தால் இந்த வழக்கில் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்பதால் தற்போது இதில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே முன்கூட்டியே அந்த பேஸ்-புக் ஐ.டி.யை போலீசார் முடக்கியிருந்தால் தன் மகள் இறந்திருக்க மாட்டாள் என்றும், வினுபிரியாவின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்தால் தான் அவரது உடலை வாங்குவோம், இல்லையென்றால் அவரது உடலை வாங்க மாட்டோம் என்று அண்ணாதுரை மற்றும் அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில பதட்டமான சூழல் நிலவுவதால் அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×