search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா மீண்டும் ஆட்சியை பிடித்தது சரித்திர சாதனை: மாநகராட்சி கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி பாராட்டு
    X

    ஜெயலலிதா மீண்டும் ஆட்சியை பிடித்தது சரித்திர சாதனை: மாநகராட்சி கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி பாராட்டு

    தனியாக தேர்தலை சந்தித்து ஜெயலலிதா மீண்டும் ஆட்சியை பிடித்தது சரித்திர சாதனை என்று மாநகராட்சி கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் இன்று நடந்தது.

    மாநகராட்சி கமிஷனர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார்.

    கூட்டம் தொடங்கியதும் மேயர் சைதை துரைசாமி தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்து பேசினார். அவர் கூறியதாவது:-

    1962-1967-க்குப் பிறகு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ஒரு புதிய பார்முலாவை உருவாக்கி, 234 தொகுதிகளிலும் இரட்டை இலையை நிற்க வைத்து புரட்சித்தலைவி அம்மா களம் கண்டார்.

    மக்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு ஈடாக மக்களும் மகத்தான நம்பிக்கை வைத்து அவரை மீண்டும் முதல்- அமைச்சராக்கி, மாபெரும் வெற்றியை அளித்திருக்கிறார்கள்.

    தமிழக மக்களின் செல்வாக்கை ஒருங்கே பெற்ற ஒரே தலைவி தமிழ்நாடு முதல்-அமைச்சர் அம்மாதான்.

    குறைகுடம் கூத்தாடும் என்பதைப் போல் மக்கள் தீர்ப்பு வருவதற்கு முன்னமேயே, அதிகாரிகளை தண்டிப்பேன் என்றும், தேர்தலுக்குப் பிறகு அதிகாரிகள் பதில் சொல்ல வேண்டி வரும் என்றும் ஆணவத்துடன் சொன்னது ஒரு கட்சி ஆனால், நிறைகுடம் நீர் தளும்பாது என்பது போல, அ.தி.மு.க.தான் ஆட்சி பீடம் ஏறும் என்று உறுதியாகத் தெரிந்திருந்த போதும், பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, ‘‘இன்னும் இரண்டு நாள் பொறுத்திருங்கள் தானாகவே தெரிந்துவிடும்’’ என்று அம்மா அடக்கத்தோடும் அறிவு முதிர்ச்சியுடனும் பதில் அளித்தார். தமிழக மக்கள் இதையெல்லாம் பார்த்துத்தான் சரியான தீர்ப்பை வழங்கினார்கள்.

    கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அ.தி.மு.க.விற்கு எவ்வாறு ஒரு வரலாறு காணாத வெற்றியைத் தந்தார்களோ அதே வெற்றி அளவு கோலைத்தான் இந்த சட்டமன்றத் தேர்தலிலும் மக்கள் அளித்திருக்கிறார்கள்.

    இந்த சட்டமன்றத் தேர்தலில் கூட தி.மு.க. பெற்றுள்ள கூடுதல் இடங்களாயினும் சரி, வாக்குகள் ஆயினும் சரி, அவை, கூட்டணியாலும், எதிர்த்து நின்ற மக்கள் நலக் கூட்டணி, தே.மு.தி.க, பா.ம.க கட்சிகளிடமிருந்து பெற்ற வாக்குகளே ஆகும்.

    2011 சட்டமன்ற தேர்தலிலும், தற்போதைய, 2016 சட்டமன்றத் தேர்தலிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பெற்ற வாக்குகளும், திமுக பெற்ற வாக்குகளும், மற்ற கட்சிகள் பெற்ற வாக்குகளையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே இந்த உண்மை தெள்ளத் தெளிவாகும்.

    மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க.வுக்கு 130 எம்.எல்.ஏக்கள் தான் இருக்கிறார்கள் என்றும், இதனால், ஆளுங்கட்சி பல சவால்களை சந்தித்தாக வேண்டும் என்றும், மெஜாரிட்டிக்கு மேல் 12 உறுப்பினர்களே இருப்பதாகவும், இது அ.தி.மு.க.வுக்கு தள்ளாட்டத்தை ஏற்படுத்தும் சவாலாக இருக்கும் என்றும், அதாவது கயிற்றின் மேல் நடப்பது போன்ற ஒரு நிலை ஏற்படும் என்றும் தி.மு.க. கூறுகிறது.

    தி.மு.க.விற்கு நினைவு படுத்த விரும்புகிறேன். கடந்த 2001-ம் ஆண்டில் அம்மா, இரண்டாம் முறையாக ஆட்சி பீடம் ஏறிய நேரத்தில் 132 எம்.எல்.ஏக்களே இருந்தனர். இந்த காலங்களில் எல்லாம், தி.மு.க. தான் தள்ளாட்டம் கண்டதே தவிர கழக ஆட்சி ஒரு போதும் தள்ளாட்டம் கண்டது கிடையாது.

    எத்தகைய சவாலாக இருந்தாலும். அதை நேருக்கு நேர் சந்தித்து வெற்றி கொள்கிற ஆற்றல் பெற்றுள்ள அம்மாவின் நல்லாட்சிக்கு எந்த தள்ளாட்டத்தையும் அந்த சவால்கள் ஏற்படுத்தாது என்பதை இங்கே நெஞ்சை நிமிர்த்தி எடுத்துக் கூற விழைகிறேன்.

    கடந்த 2006 ஆம் ஆண்டில் வெறும் 96 எம்.எல்.ஏக்களை மட்டுமே வைத்துக் கொண்டு மைனாரிட்டி ஆட்சி நடத்திய திமுக அறுதிப் பெரும்பான்மைக்கும் மேலாக, மொத்தம் 133 எம்.எல்.ஏக்களை வைத்துள்ள அம்மாவின் நல்லாட்சி கயிற்றின் மேல் நடப்பது போல இருக்கும் என்று கூறுவது விந்தையிலும் விந்தையாக இருக்கிறது.

    1971-ம் ஆண்டில் 184 உறுப்பினர்கள் பெற்றிருந்தது பற்றியோ, தற்போது 2016-ம் ஆண்டில் 89 உறுப்பினர்கள் பெற்றிருப்பது பற்றியோ தி.மு.க பெருமைப்பட்டுக் கொள்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன்.

    மகத்தான வெற்றியைப் பெற்று, ஒரு புதிய சரித்திரத்தை உருவாக்கி, மாபெரும் சாதனை படைத்து மீண்டும் தமிழகத்தின் முதல்-அமைச்சராக பதவியேற்றுள்ள தமிழ்நாடு முதல்-அமைச்சர் அம்மாவுக்கு இம்மாமன்றம் தனது உள மார்ந்த பாராட்டுகளை பலத்த கையொலி எழுப்பி தெரிவித்து கொள்கிறது.

    தமிழ்நாட்டின் முதல்- அமைச்சராக ஆறாவது முறையாக 23.5.2016 அன்று பதவியேற்று, தமது முதல் பணியாக அனைத்திந்திய அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து அதற்குரிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

    தமிழ்நாட்டின் முதல்- அமைச்சராக பதவியேற்ற முதல் நாளே திட்டங்களை செயல்படுத்த ஆணையிட்டு அதற்கான கோப்புகளில் கையெழுத்திட்ட முதல்- அமைச்சர் அம்மாவுக்கு பெரு நகர சென்னை மாநகராட்சி தனது உளமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.

    பெருநகர சென்னை மாநகராட்சியின் உறுப்பினர்களாக இருந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட துணை மேயர் உட்பட, வெற்றி பெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி தனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.

    தமிழகத்தில் உள்ள மாணவச் செல்வங்களின் கல்வி நலம் பேணவும், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களின் சுமையைத் தன் தோள் மீது ஏற்று அவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளை நீக்கவும் கல்வித்துறையில் தமிழகத்தை முதல் நிலை மாநிலமாக்கவும் முதல்-அமைச்சர் செயல்படுத்தி வரும் திட்டங்கள் ஏராளம்.

    சென்னை மாநகராட்சி, கல்வித்துறையின் கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள் 38 உயர்நிலைப் பள்ளிகள் 92 நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 119 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 165 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 87,567 மாணவ-மாணவியர்கள் பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் 100 மழலையர் பள்ளிகள் தொடங்கப்பட்டு சென்னை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையும் தேர்ச்சி சதவிகிதமும் அதிகரித்துள்ளது.

    இக்கல்வியாண்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய 5859 மாணவ மாணவியரில் 5051 மாணவ/மாணவியர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதம் 86.21. விழுக்காடு ஆகும். இது கடந்த ஆண்டை விட 1 சதவிகிதம் அதிகம் ஆகும்.

    2015-16-ம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 6608 மாணவ, மாணவியரில் 6273 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவிகிதம் 95 சதவிகிதம் ஆகும். இது கடந்த ஆண்டைவிட 3 சதவிகிதம் அதிகம் ஆகும்.

    வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு சென்னை மாநகராட்சியின் சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் தேர்வில் வெற்றி பெற இயலாத மாணவச் செல்வங்கள் தோல்வி அடைந்து விட்டோமே என்று மனம் கூனிக் குறுகிக் போகாமல் அதை வெற்றிக்கான படிக்கட்டாகக் கொண்டு அடுத்து வரும் தேர்வில் வெற்றி பெற்று வாழ்வில் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
    Next Story
    ×