search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 11-ந்தேதி முதல் வேலை நிறுத்தம்: ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் அறிவிப்பு
    X

    என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 11-ந்தேதி முதல் வேலை நிறுத்தம்: ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் அறிவிப்பு

    பணிநிரந்தரம் செய்யக்கோரி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் ஜூன் 11–ந்தேதி முதல் வேலை நிறுத்தம் செய்வதாக ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.
    நெய்வேலி:

    பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

    இதையடுத்து வேலை நிறுத்தம் செய்வது தொடர்பாக என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க சிறப்பு பேரவை கூட்டம் நெய்வேலியை அடுத்த மந்தாரக்குப்பத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் அந்தோணி செல்வராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார்.

    கடலூர் மாவட்ட செயலாளர் சேகர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பொதுச்செயலாளர் செல்வமணி, கல்யாணசுந்தரம், குணா மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

    பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சுரங்க சட்டப்படி பஞ்சப்படி வழங்கிட வேண்டும்.

    ஒப்பந்த தொழிலாளர்களின் பணிநிரந்தரம் குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பை என்.எல்.சி. நிர்வாகம் புறக்கணிப்பதை கண்டிப்பது.

    தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை, ஒப்பந்த தொழிலாளர்களின் பிரதிநிதிகள் சந்தித்து ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து மனு அளிப்பது.

    என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்களின் நீண்ட கால நியாயமான கோரிக்கைகளை என்.எல்.சி. நிர்வாகம் நிறைவேற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தவது.

    அரசின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் வருகிற 9-ந்தேதி காலை 10 மணிக்கு கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு வேண்டுகோள் ஈர்ப்பு போராட்டம் நடத்துவது.

    இந்த போராட்டத்திற்கு பிறகும் சுமூக பேச்சுவார்த்தையில் தீர்வு காண என்.எல்.சி. நிர்வாகம் தவறுமேயானால் அடுத்த மாதம்(ஜூன்) 11-ந்தேதி இரவு பணியிலிருந்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது, ஒப்பந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை முன்நிறுத்தி நடைபெற உள்ள இந்த போராட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் ஆதரவு அளிக்க கோருவது மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    Next Story
    ×