search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடுமலைப்பேட்டை சங்கர் கொலை: திருப்பூர் கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனு வாபஸ்
    X

    உடுமலைப்பேட்டை சங்கர் கொலை: திருப்பூர் கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனு வாபஸ்

    சங்கர் படுகொலை தொடர்பாக திருப்பூர் மாவட்ட கலெக்டர், மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு திரும்ப பெறப்பட்டது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் டி.எஸ். மணி என்ற குளத்தூர் மணி தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் சாதி ரீதியான வன்முறை அதிகம் நடக்கும் மாநிலத்தில், தமிழகம் 2-வது இடம் வகிப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    தமிழகத்தில் கலப்பு திருமணத்துக்கு பல்வேறு எதிர்ப்புகள் உள்ளன. குறிப்பாக கலப்பு திருமணம் செய்துக் கொள்ளும் தலித் வாலிபர்கள் கொடூரமாக கொலை செய்யப்படுகின்றனர்.

    தர்மபுரி இளவரசன், ஓமலூர் கோகுல்ராஜ், கோவை சிற்றரசு உள்ளிடோர் அடுத்தடுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 13-ந் தேதி உடுமலைப்பேட்டை சங்கர் என்ற வாலிபர் பட்ட பகலில் நடுரோட்டில் பொதுமக்கள் முன்னிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

    கவுசல்யா என்ற பெண்ணை இந்த சங்கர் கலப்பு திருமணம் செய்துள்ளார். கவுசல்யாவின் பெற்றோர் மிரட்டல் விடவே, உடுமலைப் பேட்டை அனைத்து மகளிர் போலீசில், சங்கரும், கவுசல்யாவும் புகார் செய்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, கவுசல்யாவை தொந்தரவு செய்ய மாட்டோம் என்று அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.
    ஆனால், அவர்களுக்கு போலீசார் தகுந்த பாதுகாப்பு வழங்கவில்லை.  இந்த நிலையில், சங்கர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
    சுப்ரீம் கோர்ட்டு ஒரு வழக்கில் பிறப்பித்த தீர்ப்பில், ‘கலப்பு திருமணம் செய்துக் கொண்டவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதை தெரிந்து இருந்தும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்காத மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யவேண்டும். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கவேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

    எனவே, சங்கர் படுகொலை தொடர்பாக திருப்பூர் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்யவேண்டும் என்றும் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சில கருத்துக்களை தெரிவித்தனர். இதையடுத்து மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பு கூறியதால், மனுவை வாபஸ் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    Next Story
    ×