search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது: கருணாநிதி - குலாம் நபி ஆசாத் ஒப்பந்தம்
    X

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது: கருணாநிதி - குலாம் நபி ஆசாத் ஒப்பந்தம்

    தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து உள்ளது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இந்த கூட்டணி ஒப்பந்தத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி குலாம் நபி ஆசாத் ஆகியோர் இன்று சென்னையில் கையொப்பமிட்டனர்.
    சென்னை:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் தி.மு.க. தலைவர் கருணாநிதியை பிப்ரவரி மாதம் 13-ந் தேதி சந்தித்து தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்தனர்.

    பின்னர் கடந்த மாதம் 25-ந் தேதி கருணாநிதியை மீண்டும் சந்தித்து தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் வியூகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதன்பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு ஆகியோர் கடந்த 30-ந் தேதி டெல்லி சென்றனர். முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரமும் தனியாக சென்றார். அங்கு 2 நாட்கள் அவர்கள் முகாமிட்டு, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி, மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

    அப்போது, ராகுல்காந்தி, ‘தி.மு.க. கூட்டணியில் 40 தொகுதிகளுக்கு மேல் பெற வேண்டும்’ என்று அவர்களிடம் கூறியதாக தெரிகிறது.

    பின்னர், இதுகுறித்து குலாம்நபி ஆசாத், தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி.யை கடந்த 31-ந் தேதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு, காங்கிரஸ் கட்சிக்கு 45 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக கூறப்பட்டது.

    இறுதியாக, 41 தொகுதிகள் தருவதாக தி.மு.க. தரப்பில் குலாம்நபி ஆசாத்திடம் கூறியதாகவும், அந்த தகவலை குலாம்நபி ஆசாத் ராகுல்காந்தியிடம் தெரிவிக்க அதற்கு, அவர் சம்மதம் தெரிவித்தார்.

    பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததை தொடர்ந்து, குலாம்நபி ஆசாத் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு 11.30 மணிக்கு சென்னை வந்தார். இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணி அளவில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்பின்போது காங்கிரசுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இந்த கூட்டணி ஒப்பந்தத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி குலாம் நபி ஆசாத் ஆகியோர் இன்று சென்னையில் கையொப்பமிட்டனர். இரு மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட தி.மு.க-காங்கிரஸ் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இறுதியாக இன்று கையெழுத்தானது. காங்கிரஸ் கட்சி எந்தெந்த தொகுதியில் போட்டியிடும் என்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

    இந்த ஒப்பந்தத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குலாம்நபி ஆசாத் இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவித்தார்.
    Next Story
    ×