search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ் கமிஷனர்–கலெக்டரை மாற்ற வேண்டும் என்ற உத்தரவு ரத்து: ஐகோர்ட்டு தீர்ப்பு
    X

    போலீஸ் கமிஷனர்–கலெக்டரை மாற்ற வேண்டும் என்ற உத்தரவு ரத்து: ஐகோர்ட்டு தீர்ப்பு

    போலீஸ் கமிஷனர்–கலெக்டரை மாற்ற வேண்டும் என்று நீதிபதி கர்ணன் பிறபித்த உத்தரவை ஐகோர்ட்டு தீர்ப்பு ரத்து செய்தது.

    சென்னை:

    பெரம்பூரில் பின்னி ஆலை செயல்பட்டபோது, அந்த ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வழங்கப்பட்டது. பின்னி ஆலை மூடப்பட்ட பிறகு, தொழிலாளர்களை குடியிருப்பில் இருந்து வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது.

    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், இளங்கோவன் உட்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.

    அதில், தொழிலாளர் குடியிருப்புகள் உள்ள நிலத்தை தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு வழங்குவதற்காக எங்களை காலி செய்ய சென்னை மாநகராட்சி உத்தரவிடுகிறது என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தொழிலாளர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கக்கூடாது. அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பை போலீஸ் கமிஷனர் வழங்க வேண்டும் என்று கடந்த 2014–ம் ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது.

    ஆனால், இதன்பின்னர் குடியிருப்பில் உள்ள 6 வீடுகள் இடிக்கப்பட்டன. இதையடுத்து, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர், சென்னை மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.எஸ்.கர்ணன், ‘கோர்ட்டு உத்தரவை மதிக்காமல் செயல்பட்ட கலெக்டர் சுந்தரவல்லி, போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரை பணியிட மாற்றம் செய்யவேண்டும் என்று தமிழக தலைமை செயலருக்கு உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து லேண்ட்மார்க் கட்டுமான நிறுவனம், ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அதேபோல, தங்களை பணியிட மாற்றம் செய்யுமாறு தமிழக அரசுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய கோரி அப்போதைய சென்னை மாவட்ட கலெக் டர் சுந்தரவல்லி, போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கவுல், நீ திபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், நீதிபதி சி.எஸ்.கர்ணன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில், இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி யிருப்பதாவது:–

    பென்னி ஆலைக்கு சொந்தமாக பெரம்பூர் பாரக்ஸ் ரோட்டில் 14 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம், அந்த ஆலையின் தொழிலாளர்களின் குடியிருப்பாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த ஆலை மூடப்பட்ட தும், மாற்று குடியிருப்பு வழங்குவதாக நிர்வாகத்துக்கும் அங்கு குடியிருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே சமூக உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது. ஆனால், சில தொழிலாளர்கள் இதை ஏற்கவில்லை. அவர்களில் சிலர் குடியிருப்பில் இருந்து தங்களை கட்டாயப்படுத்தி ஆலை நிர்வாகம் வெளியேற்றுவதாக போலீசில் புகார் செய்தனர். இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்றனர்.

    இதுகுறித்து உதவி போலீஸ் கமிஷனர் வழக்கு பதிவு விசாரித்து, பொய்யான புகார் என்று வழக்கை முடித்து வைத்து விட்டார். இதன் பின்னர் வீட்டை இடித்து விட்டதாக மீண்டும் ஒரு புகார் போலீசில் கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டன. இந்த அவமதிப்பு வழக்கில், போலீஸ் கமிஷனர், கலெக்டரை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளனர்.

    இந்த உத்தரவை பரிசீலித்த போது, வழக்கின் தகுதியின் அடிப்படையில் விரிவான விவாதம் நடைபெறவில்லை. ஐகோர்ட்டு உத்தரவின்படி போலீஸ் அதிகாரிகள் வழக்கை பதிவு செய்துள்ளனர். இந்த புகார் பொய்யானது என்று அறிக்கையையும் சம்பந்தப்பட்ட கோர்ட்டில் தாக்கல் செய்து விட்டனர்.

    எனவே, ஐகோர்ட்டு உத்தரவை அவர்கள் அமல்படுத்தி விட்டனர். கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் உயர் அதிகாரிகளை வேறு இடத்துக்கு மாற்றவேண்டும் என்று உத்தரவிட எந்த முகாந்திரமும் இல்லை. எனவே, நீதிபதி சி.எஸ். கர்ணன் உத்தரவை ரத்து செய்கிறோம்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    Next Story
    ×