search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களே குடும்ப பட்ஜெட் எகிற காரணங்கள்
    X

    பெண்களே குடும்ப பட்ஜெட் எகிற காரணங்கள்

    நீங்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய பொருட்களை பட்டியலிடுங்கள். குடும்ப பட்ஜெட் போடும் போது எது தேவை, எது தேவையற்றது என பட்டியல் போட்டு செலவு செய்ய வேண்டும்.
    - செலவை குறைக்கவேண்டும்.

    - மிச்சம் பிடிக்கவேண்டும்.

    - அதை சேமிக்கவேண்டும்.

    - சேமிப்பை எதிர்காலத்துக்கு பயன்படுத்தவேண்டும்.

    .... இவைதான் எல்லோரது ஆசையும். ஆனால் நடப்பது என்ன?

    எவ்வளவு சம்பாதித்தாலும் மிச்சம் பிடிக்க முடியவில்லை என்ற நிலை!

    இந்த நிலையை மாற்ற முடியுமா?

    - முடியும். எப்படி?

    மாத பட்ஜெட்டில் 70 சதவீதமும் சமையல் அறையோடு தொடர்புடையதாக இருக்கிறது. அங்கு முடிந்த அளவு செலவைக் குறைக்க திட்டமிடவேண்டும். சமையல் பொருட்கள் ஒவ்வொன்றும் தீர்ந்துபோகும்போது அதற்கான பட்டியல் ஒன்று ரெடி செய்து வைத்திடவேண்டும். தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் போன்று அதிக நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும் பொருட்களை கூடுதலாக ஒரே நேரத்தில் வாங்கிவைத்துக்கொள்ளலாம். பிராண்டட் பொருட்களைத்தான் வாங்கவேண்டும் என்ற எண்ணம் சரியல்ல. பிராண்டட் அரிசியில் சிறிய மூட்டை ஒன்றை அதிக விலை கொடுத்து வாங்குவதைவிட, அரிசி மொத்த வியாபாரியிடம் சென்று தரம் பார்த்து அரிசியை வாங்கி பணத்தை மிச்சப்படுத்தலாம்.

    நீங்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய பொருட்களை பட்டியலிடுங்கள். பெரும்பாலான வீடுகளில் உளுந்து, பருப்பு, பயறு, தேயிலை, காபி போன்றவை அதிக அளவில் செலவாகின்றன. அவைகளை மொத்தமாக வாங்குங்கள். பிராண்டட் கோதுமை மாவு வாங்கும் விலையில் பாதி செலவிட்டாலே, தரமான கோதுமை வாங்கி சுயமாக அரைத்து பயன்படுத்திவிடலாம்.



    ஒவ்வொரு மாதமும் பேக்கரியில் இருந்து எவ்வளவு உணவுப் பொருட்கள் வாங்குகிறீர்கள் என்று கணக்கிடுங்கள். அதற்கான செலவு அதிகமாக இருந்தால், அந்த பொருட்களை வீட்டிலே தயாரித்து சுவையுங்கள். அது ஆரோக்கியத்திற்கும், பட்ஜெட்டுக்கும் நல்லதாக அமையும். சுவையான புதிய உணவுப் பொருட்களை தயாரிக்கும்போது அருகில் இருக்கும் உறவினர்களையோ, தோழிகளையோ அழையுங்கள். அனைவருக்கும் சேர்த்து, அனைவரும் சேர்ந்து மொத்தமாக தயாரித்தால் அது வேலைபோல் இல்லாமல் பொழுதுபோக்காகி விடும். அக்கம்பக்கத்தில் உறவினர்களோ, தோழிகளோ இல்லை என்றாலும் கவலைப்படாதீர்கள். நீங்கள் ஒட்டுமொத்த குடும்பமும் உட்கார்ந்து அந்த பலகாரத்தை தயாரியுங்கள்.

    அசைவ உணவை விரும்புகிறவர்களின் வீடுகளில் இறைச்சி மற்றும் மீனுக்கு அதிக பணம் செலவாகிறது. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டும் அதை சாப்பிடுங்கள். அதையும் அளவோடு சாப்பிடுங்கள். பொதுவாக சந்தைக்கு செல்லும் மீன் பிரியர்கள், ‘பெரிய மீனாக இருந்தது. அதனால் மொத்தமாக வாங்கி வந்துவிட்டேன்’ என்பார்கள். இப்படி அடிக்கடி செய்தால் செலவு எகிறிவிடும். 

    மட்டுமல்ல, ஒரே நாளில் அதிகமாக அதை சாப்பிடுவதும் நல்லதல்ல. இரண்டு மூன்று நாட்கள் மீனை வைத்திருந்து சாப்பிடுவதும் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல. அதனால் அசைவ உணவுக்கான செலவை குறைக்க முயற்சி செய்யுங்கள். அது உங்கள் பட்ஜெட்டுக்கு பலனளிக்கும். உடலுக்கும் நன்மைதரும். சமையல் எரிவாயு செலவிலும் கவனம் செலுத்தவேண்டும். மறுநாள் என்ன சமைக்கப்போகிறீர்கள் என்பதை முதல் நாள் இரவிலே முடிவு செய்யுங்கள். காலையில் சமையல் தேவைக்கான பொருட்கள் அனைத்தையும் எடுத்துவைத்துக்கொண்டு அடுப்பை பற்றவையுங்கள். 

    அப்படி செய்தால் சமையல் எரிவாயு வீணாகுவதை தவிர்க்கலாம். பர்னருக்கு ஏற்ற விதத்தில் சமையல் பாத்திரங்களையும் பயன்படுத்தவேண்டும். முடிந்த அளவு பிரஷர் குக்கரை பயன்படுத்துங்கள். பிரஷர் குக்கர் எரிவாயுவையும், சமையல் நேரத்தையும் மிச்சப்படுத்தும். பால், தண்ணீர், டீ போன்றவைகளை அடிக்கடி சூடு செய்வதை தவிர்க்க, பிளாஸ்குகளை பயன் படுத்தும் பழக்கத்தை உருவாக்குங்கள். உணவுகளை சூடாக வைக்க ‘ஹாட் பாக்ஸ்’ பயன்படுத்தவேண்டும். குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டால் அடிக்கடி சூடு செய்வதை தவிர்த்துவிடலாம். எல்லாவற்றையும் விட முக்கியம் அதிகமாக சமைத்து உணவினை வீணாக்காதீர்கள். தேவைக்கு மட்டும் சமையல் செய்யுங்கள்.

    Next Story
    ×