search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களே நேர்முகத் தேர்வில் ஜொலிக்க டிப்ஸ்...
    X

    பெண்களே நேர்முகத் தேர்வில் ஜொலிக்க டிப்ஸ்...

    ஒரு வேலையை எட்டுவதற்கான கடைசிப் படிக்கட்டு, ‘இன்டர்வியூ’ எனப்படும் நேர்முகத்தேர்வு. நேர்முகத்தேர்வில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.
    ஒரு வேலையை எட்டுவதற்கான கடைசிப் படிக்கட்டு, ‘இன்டர்வியூ’ எனப்படும் நேர்முகத்தேர்வு. அதில் மட்டும் சிறப்பாகச் செயல்பட்டுவிட்டால் வேலை உறுதிதான்.

    நேர்முகத்தேர்வுக்குச் செல்பவர்களிடம், நிறுவனங்களின் மனிதவள அதிகாரிகள் என்னென்ன விஷயங்களை எதிர்பார்க்கிறார்கள்?

    இதோ, அவர்களே சொன்ன சில குறிப்புகள்...

    * நேர்முகத்தேர்வுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே சென்று காத்திருங்கள். அது நீங்கள் தெளிவாகவும் திடமாகவும் பதிலளிக்க உதவும். அடித்துப் பிடித்து ஓடி கடைசி நேரத்தில் வேர்த்து விறுவிறுக்க நேர்முக அறையை அடைந்தால், அந்தத் தடுமாற்றம், பதற்றம், உங்களின் பதில்களிலும் வெளிப்படலாம்.

    * நேர்முகத்தேர்வின்போது உங்கள் பதில்களில் மட்டுமின்றி, உடல்மொழியிலும் கவனம் வையுங்கள். வார்த்தைகள் மட்டுமல்லாது, நேர்முகத்தேர்வில் நீங்கள் நடந்துகொள்ளும் விதமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். எனவே, உங்கள் உடல் மொழியை கட்டுப்பாட்டில் வையுங்கள். சங்கடமான கேள்வியை எதிர்கொள்ள நேர்ந்தாலும், அமைதி காத்து, நிதானமாகப் பதில் சொல்ல முயலுங்கள். சிறிதளவு கூட முகச்சுளிப்பு போன்ற பாவங்களை வெளிக்காட்டி விடாதீர்கள்.

    * நேர்முகத்தேர்வு அறைக்குள் நுழையும்முன்பே உங்கள் செல்போனை அணைத்துவிடுவது அல்லது ‘சைலண்ட் மோடில்’ போட்டுவிடுவது நல்லது. அப்படியே செல்போனை அணைக்க மறந்து, நேர்முகத்தின்போது அது ஒலிக்கத் தொடங்கிவிட்டாலும், நேர்முகத்தேர்வு அலுவலர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, போனை அமைதியாக்கிவிடுங்கள். மாறாக, யார் அழைத்திருக்கிறார்கள், என்ன செய்தி வந்திருக்கிறது என்றெல்லாம் பார்ப்பது, நிச்சயம் உங்களுக்கு நல்ல மதிப்பைப் பெற்றுத்தராது. அது நீங்கள் மரியாதைக்குறைவையும், ஆர்வக்குறைவையும் வெளிப்படுத்துவதாகக் காட்டும்.

    * நேர்முகத்தேர்வு அலுவலர்களின் கண்களைப் பார்த்து, தெளிவாகப் பேசுங்கள். அவர்கள் வேலையைப் பற்றி விவரிக்கும்போது ஆர்வத்துடன் கவனியுங்கள். நீங்கள் ஆர்வமாக இருப்பதையும், புரிந்துகொள்வதையும் உணர்த்தும்விதமாக அவ்வப்போது தலையாட்டுங்கள்.

    * நேர்முகத்தேர்வு அதிகாரிகள் பேசிக்கொண்டிருக்கும்போது, அறையைச் சுற்றி பார்வையை ஓடவிடுவதோ, ஜன்னலுக்கு வெளியே பார்வையைப் பாய்ச்சுவதோ கூடாது.



    * குறிப்பிட்ட வேலையை மட்டுமின்றி, நீங்கள் நேர் முகத்தேர்வுக்குச் செல்லும் நிறுவனம் பற்றிய அடிப்படை விவரங்களையும் அறிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படலாம். எனவே நிறுவனம் குறித்த முக்கிய விவரங்களை அறிந்துகொள்ளுங்கள். அவை சரிதானா என்று ஒருமுறைக்கு இருமுறை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

    * நீங்கள் முன்பு பார்த்த வேலை, பணிபுரிந்த நிறுவனம் குறித்த தகவல்கள் கேட்கப்படலாம். அப்போது நேர்மறையாகவே பதில் சொல்லுங்கள். நீங்கள் முந்தைய நிறு வனத்தில் இருந்து எந்தச் சூழலிலும் விடைபெற்றிருக்கலாம். ஆனால் உங்கள் வார்த்தைகளில் கசப்பு, வெறுப்பு வெளிப்பட்டுவிடக்கூடாது. ஏற்கனவே நீங்கள் பணி புரிந்த நிறுவனத்தின் போட்டி நிறுவனத்துக்கு நேர்முகத் தேர்வுக்குச் செல்கிறீர்கள் என்றால், முந்தைய நிறுவனம் குறித்த ரகசியங்களை வெளிப்படுத்தக்கூடாது.

    * பதில் தெரியாத கேள்விகளுக்கு, நீட்டி முழக்கி மழுப்புவதைவிட, ‘தெரியாது’ என்று சொல்வதே மேல். ஒரு நிறுவனத்தினர் தேடுவது, தங்கள் பணிக்குத் தகுதியான நபரைத்தானே தவிர, உலக விஷயங்களை எல்லாம் அறிந்த ஞானியை அல்ல.

    * நேர்முகத்தேர்வு அலுவலர்கள் உங்களின் பணி அறிவு, பொது அறிவை மட்டுமின்றி, உங்களின் உணர்வு அறிவையும் பரிசோதிப்பார்கள். அந்த நோக்கிலான கேள்விகள் உங்களை நோக்கி வீசப்படலாம். அப்போது, புன்னகை மாறாமல் அவற்றை எதிர்கொண்டு பதில் சொல்வது, உங்களுக்கு நல்ல மதிப்பெண்களைப் பெற்றுத் தரும்.

    அப்படி கேட்கப்படக்கூடிய சில கேள்விகள்...

    உங்களின் பலம் என்ன? பலவீனம் என்ன?

    எந்த மாதிரியான பணிச்சூழலில் உங்களால் பொருந்திப்போக முடியும்?

    வேலையில் சர்ச்சைகள், கருத்து மோதல்கள் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?

    நெருக்கடி, அவசரம் போன்ற சிக்கலான சூழ்நிலைகளை நீங்கள் எப்படிக் கையாளுவீர்கள்?

    நீங்கள் படித்த படிப்புக்குத் தொடர்பில்லாத வேலைக்கு ஆர்வம் காட்டுவது ஏன்?

    நீங்கள் முன்பு பார்த்த வேலையை ஏன் விட்டீர்கள்?

    * உங்களின் திறமையை அளவிடும்விதமாக ஒரு பணித்திட்டத்தை உங்களிடம் அளித்து, அதுபற்றி கருத்து, அதன் நிறை, குறை குறித்த உங்களின் மதிப்பீடு கேட்கப்படலாம். அவர்கள் ஏற்கனவே அதில் உள்ள குறைபாடுகளை அறிந்திருப்பார்கள் என்பதால், அவற்றில் எத்தனை குறைபாடுகளை நீங்கள் சரியாக சுட்டுக்காட்டுகிறீர்கள் என்று கவனிப்பார்கள். உங்களுக்கு நிஜமாகவே வேலை அளிக்கப்பட்டு, குறிப்பிட்ட பணித்திட்டம் உங்களுக்கு ஒதுக்கப்பட்டது போல நினைத்துக்கொண்டு நீங்கள் அதில் கவனம் செலுத்துங்கள். உங்களுக்குச் சரியாகத் தெரியும் என்றால், சிறுசிறு மாற்று யோசனைகளையும் முன்வைக்கலாம். ஆனால் ஏதாவது கருத்துக் கூற வேண்டும் என்பதற்காக எதையும் கூற வேண்டாம்.

    இனி என்ன, வேலை உங்களுக்குத்தான்!
    Next Story
    ×