search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களே பொய் சொல்லும் ஆண்களை கண்டுபிடிக்க புதிய வழி
    X

    பெண்களே பொய் சொல்லும் ஆண்களை கண்டுபிடிக்க புதிய வழி

    ஆண்கள் அதிக பொய் சொல்ல பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஆண்கள் பொய் சொல்ல அடிக்கடி தூண்டப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.
    “ஆண்கள், பெண்களைவிட அதிகமாக பொய் சொல்லுகிறார்கள்” என்று ‘லண்டன் சயின்ஸ் மியூசியம்’ என்ற அமைப்பு செய்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஆண்கள் அதிக பொய் சொல்ல பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஆண்கள் பொய் சொல்ல அடிக்கடி தூண்டப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.

    ‘யாரிடம் ஆண்கள் அதிக பொய் சொல்கிறார்கள்?’ என்ற கேள்விக்கு, ‘மனைவியிடம்தான் அதிகமாக பொய் சொல்கிறார்கள்’ என்பது பதிலாக இருக்கிறது. மனைவி மனம் கோணாமலிருக்க, மனைவியின் பார்வையில் தன் ‘இமேஜை’ காப்பாற்றிக்கொள்ள, குடும்பத்தில் சண்டை ஏற்படாமலிருக்க, தன்மீது அன்பு வைத்திருக்கும் மனைவியின் அன்பு குறைந்து விடாமலிருக்க.. இப்படிப்பட்ட பல்வேறு காரணங்களுக்காக ஆண்கள் அதிகமாக மனைவியிடம் பொய் சொல்கிறார்கள்.

    ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று பொய்களையாவது மனைவியிடம் ஆண்கள் சொல்கிறார்கள். சில நேரங்களில் தன் தவறை மறைக்க, மனைவிக்கு ஐஸ்வைக்கும் விதத்தில் பொய் சொல்கிறார்கள். கோபமாக இருக்கும் மனைவியிடம், ‘உனக்கு இந்த டிரஸ் ரொம்ப நல்லா இருக்கு. நீ ரொம்ப அழகா இருக்கே. கொஞ்சம் உடம்பு ஒல்லியாயிட்ட மாதிரி இருக்கு..’ என்பன போன்ற பொய்களை சொல்லி மனைவியின் கோபத்திலிருந்து தப்பிக்கப் பார்க்கிறார்கள்.

    இந்த பொய் பற்றிய தகவல்களில் ஆண்களும், பெண்களும் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அவைகளை பற்றி பார்ப்போம்!



    ‘உன்னைப் போன்ற நல்ல மனைவி கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்’ என்று கணவர் சொன்னால், அவளிடமிருந்து சாதகமான விஷயம் ஏதோ ஒன்றை அவர் எதிர்பார்க்கிறார் என்று அர்த்தம். மனைவியிடம் ஒருவேளை பணம் இருக்கலாம். அதை எப்படியோ கணவர் மோப்பம் பிடித்துவிட்டார் என்றுகூட எடுத்துக்கொள்ளலாம்.

    மனைவியின் பிறந்த வீடு தொடர்புடைய விழாக்களுக்கு செல்ல பெரும்பாலான கணவர்கள் தயக்கம்காட்டுகிறார்கள். ஆனால் அவற்றை தவிர்க்கவும் முடியாது. அந்த நேரத்தில் சில ஆண்கள் பொய் பேசுவார்கள். முகத்துக்கு நேராக வர முடியாது என்று சொல்லாமல் வேறு ஏதோ நெருக்கடியான காரணத்தை தேடிப்பிடித்து சொல்வார்கள். ‘திடீரென்று ஆபீசில் பெரிய வேலையை கொடுத்துவிட்டார்கள். நீ கிளம்பு. நான் பின்னால் வந்து சேர்ந்துகொள்கிறேன்’ என்று பொய் சொல்லி தப்பிக்க பார்ப்பார்கள். அப்போது அவர்கள் சொல்லும் பொய்களில் சில வினோதமாகவும், குழந்தைத்தனமாகவும்கூட இருக்கும்.

    ஒருவகையில் பார்த்தால் ஆண்கள் திருமணத்திற்கு முன்பே பொய் சொல்லத் தொடங்கிவிடுகிறார்கள். அப்போது படிப்பு, உத்தியோகம், சம்பளம் இதையெல்லாம் கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்வார்கள். தன் குடும்பம், சொத்து விவரம் இதெல்லாமும் கொஞ்சம் நீட்டி வாசிக்கப்படும். இல்லாததை இருப்பதுபோல் காட்ட அந்த இடத்தில் ஏதாவதொரு பொய் முட்டுக் கொடுத்து நிற்க வைக்கப்படும்.

    ஆண்கள் எப்போதும் தங்களை உயர்த்திக்காட்டிக் கொள்ள விரும்புவார்கள். குறிப்பிட்ட வயதிற்கு பின்பும் தன்னை எல்லோரும் திரும்பிப் பார்க்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அதற்காக சில பொய்களை சொல்லுவார்கள். இது தவிர்க்க முடியாதது. ஆனால் இது அளவை மிஞ்சிவிடக் கூடாது.



    ஆண்கள் தினசரி சொல்லக்கூடிய பொய்களே நிறைய இருக்கின்றன. போக்குவரத்து நெரிசல், ஆபீஸ் வேலை, திடீர் பார்ட்டி, போன் சார்ஜ் செய்யப்படவில்லை, போனை எடுக்க முடியாத அளவு பிஸி, போனை சைலண்டில் வைத்துவிட்டேன் என்பது போன்ற பொய்களை பெரும்பாலும் எல்லோரும் நம்பி விடுவார்கள். வீட்டிற்கு கணவர் வந்த பின்பு அவரிடம் கேள்விமேல் கேள்வி கேட்கும் மனைவியின் கணைகளிலிருந்து தப்பிக்க இது மாதிரியான பொய்கள் உதவும்.

    எதற்கெடுத்தாலும் தன்னையே சார்ந்திருக்கும் மனைவியிடமிருந்து தப்பிக்கவும் பொய்கள் சொல்லப்படுகிறது. அளவுக்கு அதிகமான ‘பொசஸிவ்’ மனைவியை, ஆண்கள் விரும்புவதில்லை. அதை ஏதோ ஒரு சிறைச்சாலையைப் போன்று நினைக்கிறார்கள். அதில் இருந்து சுதந்திரம் பெற சில நேரங்களில் பொய்களை சொல்கிறார்கள். தன்னுடைய இந்தக் கட்டுப்பாடு கணவருக்குப் பிடிக்கவில்லை என்பது தெரிந்தும் அதைத் தன் உரிமையாக நினைக்கும் மனைவிகளின் செயல், கணவரை பொய் சொல்லத் தூண்டுகிறது என்பது இதில் கவனிக்கத்தகுந்த விஷயம்.

    கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாத நேரத்திலும் பொய் கை கொடுக்கிறது. இது வீட்டில் சண்டை ஏற்படுவதை தவிர்க்க சொல்லப்படும் பொய். தன்னை கணவர் அலட்சியப்படுத்திவிட்டார் என்று மனைவி நினைத்துவிடக்கூடாதே என்று அந்த இடத்தில் பொய் சொல்லப்படுகிறது. ஒரு சில பொய்கள் குடும்ப நலனுக்காக சொல்லப்படுகிறது என்றால் மன்னித்துவிடலாம். ஆனால் மனைவி நம்புகிறாள் என்ற காரணத்திற்காக பொய் சொல்லுவதையே பிழைப்பாக வைத்துக்கொள்ளும் ஆண்கள், குடும்பத்தில் மரியாதையை இழந்துவிடுகிறார்கள். பிறகு அவர்கள் உண்மையே பேசினாலும் எடுபடுவதில்லை.

    பெண்கள் சொல்லும் பொய்க்கும்- ஆண்கள் சொல்லும் பொய்க்கும் வித்தியாசம் உண்டா?

    உண்டு!

    பெண்கள் சொல்லும் பொய் ஒருவித பதற்றத்தோடு வெளிவரும். யாராவது கண்டுபிடித்து விடுவார்களோ என்ற தவிப்பு அதில் தென்படும். இரண்டு முறை திருப்பிக்கேட்டால் உளறிவிடுவார்கள். ஆண்கள் தான் மாட்டிக் கொள்ளாமல் பொய் சொல்லுவதில் சாமர்த்தியசாலிகள் என்று ஆய்வுகள் சொல்லுகின்றன. அதை ஒரு தனித்தகுதியாகவே நினைக்கிறார்கள். தன்னை உயர்வாக காட்டிக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே பெரும்பாலும் பொய் சொல்லுகிறார்கள். பொய் வெளிப்பட்டுவிட்டால் சமாளிக்கவும் தெரிந்துவைத்திருக்கிறார்கள்.
    Next Story
    ×