search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வீடு மற்றும் மனைகளுக்கு வங்கிகள் தரும் கடன்கள்
    X

    வீடு மற்றும் மனைகளுக்கு வங்கிகள் தரும் கடன்கள்

    வங்கிகள் மற்றும் இதர நிதி நிறுவனங்கள் பல்வேறு விதமான வீடு மற்றும் மனைகளுக்கு வேவ்வேறு விதமாக கடன்களை அளிக்கின்றன.
    சொந்த வீடு மற்றும் வீட்டு மனை வாங்கும் கனவை நிறைவேற்ற வீட்டு கடன் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், வங்கிகள் மற்றும் இதர நிதி நிறுவனங்கள் பல்வேறு விதமான வீடு மற்றும் மனைகளுக்கு வேவ்வேறு விதமாக கடன்களை அளிக்கின்றன. வங்கிகளால் தரப்படும் பல்வேறு வகையான கடன்கள் பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.

    வீட்டு மனை கடன் :

    நிலம் அல்லது மனை வாங்குவதற்கான கடனை, விண்ணப்பதாரர் வீடு கட்ட திட்டமிட்டதன் அடிப்படையில் இந்த கடன் அளிக்கப்படுகிறது.

    வீட்டுக்கடன் :

    இந்த கடன் தொகையை தனி வீடு மட்டுமல்லாமல் அடுக்குமாடி வீடு (பிளாட்) வாங்கவும் பயன்படுத்த இயலும். பொதுவாக, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், வீட்டின் சந்தை மதிப்பில், 80 முதல் 85 சதவிகிதத்தை வீட்டு கடன் தொகையாக அளிக்கின்றன.

    வீடு கட்ட கடன் :


    கடன் பெற விரும்பும் விண்ணப்பதாரர் தனக்கு சொந்தமான அல்லது இணை சொந்தமாக உள்ள நிலத்தில் வீடு கட்ட வழங்கப்படும் கடன் இதுவாகும்.

    ‘டாப் அப் லோன்’ :

    முன்னரே பெறப்பட்ட வீட்டு கடனை திருப்பி செலுத்தும் காலகட்டத்தில், அதே கடன் கணக்கில், மற்றொரு கடனை பெறும் முறை இதுவாகும். முந்தைய கடனை சரியாக திருப்பி செலுத்தி வருவதன் அடிப்படையில் இவ்வகை கடன் அளிக்கப்படுகிறது.



    வீட்டு விரிவாக்க கடன் :

    ஏற்கனவே, கட்டப்பட்ட சொந்த வீட்டின் குறிப்பிட்ட பகுதியை சீரமைக்க அல்லது விரிவாக்கம் செய்ய தரப்படும் கடன் இதுவாகும். மேல்மாடி, புதிய அறை, பால்கனி என்று அனைத்து விதமான கூடுதல் கட்டமைப்புகளுக்கும் இந்த கடனை பெற இயலும்.

    வீடு மேம்பாட்டு கடன் :

    சொந்த வீட்டை புதுப்பிக்க தரப்படும் இவ்வகை கடன் ‘ஹோம் இம்ப்ருவ்மென்ட் லோன்‘ என்று குறிப்பிடப்படுகிறது. வீட்டை பழுது பார்ப்பது, போர் வெல் அமைப்பது போன்றவை, இதில் அடங்கும். வீடுகள் பாரமரிப்பு என்ற அடிப்படையில் வெள்ளையடிப்பதற்கான ‘இம்ப்ரூவ்மென்ட்’ கடனும் வங்கிகளால் வழங்கப்படுகிறது.

    ‘ஸ்டாம்ப் டியூட்டி லோன்’ :

    வீடு அல்லது வீட்டு மனை வாங்கும் சமயங்களில், பத்திர பதிவுக்கான செலவுகளை சமாளிக்க ஸ்ட்ாம்ப் டியூட்டி செலுத்துவதற்கு இவ்வகை கடனை வங்கிகள் அளிக்கின்றன. பிறகு, வங்கி அறிவித்த தவணை காலத்துக்குள், வட்டியுடன் கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டும்.

    ‘பிரிட்ஜ் லோன்’ :

    குறுகிய காலத்திற்குள் பழைய வீட்டை விற்பனை செய்து விட்டு புதிய வீடு வாங்கும் சூழலில் பட்ஜெட் பற்றாக்குறையை சரி செய்ய வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களால் அளிக்கப்படும் கடன் திட்டம் ‘பிரிட்ஜ் லோன்‘ (ஹோம் ஷார்ட் டேர்ம் பிரிட்ஜ் லோன்) ஆகும்.



    ‘ஹோம் ரீ-மாடல் லோன்’:

    கூடுதல் வசதிகளை வீட்டில் அமைக்க வேண்டிய நிலையில் வங்கிகள் இவ்வகை கடனை தருகின்றன. பெயிண்டிங் அல்லது ஒயிட் வாஷ் செய்வது, கதவு, ஜன்னல்களை மாற்றி அமைப்பது, ‘மாடுலர் கிச்சன்‘ அமைப்பது புதிய மின்சார வசதி அல்லது ‘எலக்ட்ரானிக்‘ பொருட்கள் வாங்குவது போன்றவற்றின் அடிப்படையில் இக்கடன் கிடைக்கும்.

    வீட்டு அடமானக் கடன் :

    குடும்பத்தினர்களுக்கான மருத்துவ செலவு, பிள்ளைகள் படிப்பு மற்றும் திருமணம், வர்த்தக நிறுவனங்கள் தொடங்க அல்லது அவற்றை விரிவாக்கம் செய்ய என்று பல நிலைகளில் இவ்வகை கடன் பெறலாம்.

    வாடகை வருமான கடன் :

    சொந்த வீட்டின் வருங்கால வாடகையை அடிப்படையாக கொண்டு இவ்வகை கடன் அளிக்கப்படுகிறது. வீட்டு வாடகை ஒப்பந்த காலத்துக்கான மொத்த வாடகை மதிப்பில் 75 சதவிகிதம் வரை, பொதுவான தேவைகளுக்காக இக்கடன் தரப்படுகிறது.

    ‘ரிவர்ஸ் மார்ட்கேஜ் லோன்’ :

    சொந்த வீடு இருக்கும் நிலையில் இதர வருமானங்கள் ஏதுமற்ற நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு தரப்படும் வங்கி கடன் ‘ரிவர்ஸ் மார்ட்கேஜ் லோன்‘ ஆகும். தங்களது வீட்டை வங்கிக்கு அடமானமாக வைத்து அவர்களது ஆயுள் காலம் வரையில் குறிப்பிட்ட தொகையை வங்கியிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
    Next Story
    ×