search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வாழ வைப்போம், பெண் குழந்தைகளை
    X

    வாழ வைப்போம், பெண் குழந்தைகளை

    பெண் குழந்தைகளின் மீதான கவனத்தை பாலின பாகுபாடின்றி மதிப்புமிக்கதாக மாற்றி அவர்களின் உணர்வுகளுக்கு அங்கீகாரத்தை தர ஆண் குழந்தைகளுக்கு கற்றுத் தருவதே சிறப்பு.
    இன்று (அக்டோபர் 11) சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ஆகும்.

    உலகில் முன்னேறிய நாடுகள் முதல் பின்தங்கிய நாடுகள் வரை அந்நாட்டின் சட்டதிட்டங்கள், கலாச்சாரங்களின் ஆதிக்கத்தில் பெரிதும் பாதிப்புக் குள்ளாக்கப்படுபவர்கள் பெண் குழந்தைகள் மட்டுமே.

    பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறைவாக உள்ள நாடுகளில் முன்னணியில் இந்தியா இருப்பதை சமீபகாலங்களில் நம் நாட்டில் நிகழும் பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் மூலம் நாம் கண்கூடாக அறியலாம்.

    பெண்களின் உரிமைகளை பேணவும் அவர்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும் ஐ.நா.சபை சார்பில் 2011 ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 11 அன்று “சர்வதேச பெண் குழந்தைகள் தினம்” கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    பெண் குழந்தைகள் மீதான அடக்குமுறை, அக்குழந்தை பிறந்த உடனே “அடடா பொண்ணா போச்சே” எனும் விமர்சனத்திலே துவங்கி விடுகிறது.

    குரலை உயர்த்திப் பேசாதே, கண்களை நிமிர்த்திப் பார்க்காதே, காலை வீசி நடக்காதே, சத்தம் போட்டு சிரிக்காதே, பெண்ணாய் அடக்கமாய் இரு என்ற அறிவுரைகளுடன் வளரும் பெண் குழந்தைகள் தைரியமற்றவர்களாய் தவறுகளை தட்டிக் கேட்கும் துணிச்சலற்று வீட்டுக்குள் முடங்கிப் போகிறார்கள்.

    பெண்களின் உடல் பலவீனத்தை மட்டுமே கருத்தில் கொண்டு அவர்களின் மனோ தைரியத்தை உடைத்து விடுகின்றனர், பெண் பிள்ளைகளின் பெற்றோரும் அவர்களை சுற்றி இருக்கும் சமூகமும்.

    ஆண் குழந்தைகளுக்கு கிடைக்கும் உரிமைகள் அனைத்தும் பெண் குழந்தைகளுக்கு மறுக்கப்படுகிறது.



    பெண் கல்வியில் சமீபகாலமாக பெரும் முன்னேற்றம் இருந்தாலும் சாதிய வழியில் பெண் கல்வி கற்கும் சுதந்திரம் தடைபடுவது ஒரு புறம் என்றால் இன்றும் கிராமப்புறங்களில் பெண் வயதுக்கு வந்தவுடன் கல்வி கற்கும் உரிமை பாதியில் நிறுத்தப் படுகிறது . நகர் புறங்களிலோ வெளியே கல்வி பயில செல்லும் பெண் காதல் வயப்பட்டு குடும்ப கவுரவத்தை பாதித்து விடுவாளோ என்று எண்ணி அச்சம் கொண்டு அவளின் மேல் கல்வி ஆசைக்கு தடை விதிக்கப்படுகிறது. ஆண் குழந்தைகள் தவறு செய்தால் அது வெறும் சம்பவமாகவும் பெண் குழந்தைகள் தவறு செய்தால் அது பெரும் செய்தியாகவும் ஆக்கப்படுகிறது நம் சமூக கட்டமைப்பில்.

    பெண் குழந்தை கடத்தல்கள் மற்றும் அவர்கள் மீதான பாலியல் வன்முறைகள் அன்றாட செய்திகளில் தலைப்பு செய்தி ஆக்கப்படுவது மனதை வருந்த வைத்தாலும் அவ்வப்போது நீதிபதிகள் பெண் குழந்தைகளின் பக்கம் கருணையுடன் ஆதரவான தீர்ப்புகள் வழங்கி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது சற்றே ஆறுதல் தரும் மாற்றம் ஆகிறது.

    உலகிலேயே குழந்தை திருமணங்கள் அதிக சதவிகிதத்தில் நடைபெறும் நாடாக இந்தியா உள்ளது. 18 வயதிற்கும் முன்பே நடைபெறும் சிறு வயது திருமணங்களினால் அதிக அளவில் பாதிக்கபடுவதும் பெண் குழந்தைகளே.

    பெண் குழந்தைகளை எப்படி காப்பது?

    இதற்கான மாற்றத்தை ஆண் பிள்ளைகளை பெற்றவர்களிடம் இருந்தே துவங்குவது நல்லது.

    பெண் குழந்தைகளின் மீதான கவனத்தை பாலின பாகுபாடின்றி மதிப்புமிக்கதாக மாற்றி அவர்களின் உணர்வுகளுக்கு அங்கீகாரத்தை தர ஆண் குழந்தைகளுக்கு கற்றுத் தருவதே சிறப்பு.

    பெண்ணுக்கு நல்ல தந்தையாக, சகோதரனாக, தோழனாக, பாதுகாவலனாக, சம உரிமை தரும் கணவனாக பெண் கொண்டாடப்படும் இடத்தில் ஆண் இருப்பதை அவர்களுக்கு சிறு வயது முதலே புரிய வைக்கவேண்டும். மேலும் பெண் குழந்தைகளிடமும் அவர்களின் நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பொது வெளியில் பிரச்சனைகளை சந்திக்கும்போது மன உறுதியுடன் எதிர்த்து போராடும் வலிமையை கற்றுத்தர பெற்றோர் முன் வர வேண்டும்.

    கல்வி சுதந்திரம், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, சமூகத் திட்டங்களில் பங்கேற்பு, பாலியல் குறித்த கல்வியை இரு பாலருக்கும் அளிப்பது, அடிப்படை சட்டங்களை தெரிந்து கொள்வது, ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் சமூகத்தில் அனைத்து துறைகளிலும் முன்னேறுவது போன்றவைகளுடன் சட்டங்களும் சம்பிரதாயங்களும் ஏற்படுத்தாத மாற்றத்தை மக்கள் மனதில் பெண் குழந்தைகளின் மீதான நிலைப்பாட்டை மாற்றினால் மட்டுமே பெண் குழந்தைகள் முழுமையான சுதந்திரத்தோடு இங்கே வாழ முடியும்.

    உரிமைகளோடு கூடிய பயமற்ற பாதுகாப்பான வாழ்வை பெண் குழந்தைகள் வாழ வழி வகுப்போமா !

    - சேலம் சுபா
    Next Story
    ×