search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்
    X

    தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்

    நமது சொல்லும், செயலும், எண்ணமும், அதன் வெளிப்பாடும் அமைந்தால் எப்போதும் வெற்றியே நமக்கு சொந்தமாகும், தோல்விகள் தூரமாகும்.
    வெற்றி கிடைத்தால் கொண்டாடி மகிழ்வதும், தோல்வி அடைந்தால் துவண்டு விழுவதும் சிலரின் வாடிக்கை. வெற்றி, தோல்வி என்பது வாழ்க்கையின் அடிப்படை அம்சங்களில் ஒன்று. இதை அறிந்துகொண்டால் வெற்றி-தோல்விகளை சீராக கருதும் மனநிலையை அடைந்துவிடலாம். தோல்வி அடையும் போது அதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். மீண்டும் அந்த தோல்வியை நாம் சந்திக்காத அளவுக்கு நமது அடுத்தகட்ட நகர்வு இருக்கவேண்டும். ஆனால் அடிக்கடி தோல்வியை சந்தித்துக் கொண்டிருந்தால், அது நமது பெரிய தவறுகளில் ஒன்றாகும்.

    அதிகமாக தோல்வியை சந்திக்க, சந்திக்க நாம் அதில் இருந்து நிறைய பாடங்கள் கற்றுக்கொள்கிறோம். அவ்வாறு நாம் எந்த அளவுக்கு பாடங்கள் கற்றுக்கொள்கிறோமோ அந்த அளவுக்கு நமது வாழ்க்கையில் முன்னேற்றங்களை சந்திக்கிறோம் என்பது பொருளாகும். வாழ்வில் முன்னேற்றங்கள் அதிகரிக்க அதிகரிக்க உயர்நிலையை நோக்கி நமது வாழ்க்கை செல்கிறது என்பது பொருளாகும்.

    அதேநேரத்தில் ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்யக்கூடாது. ஒரு முறை செய்த தவறு மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஒரே தவறு அடிக்கடி நிகழ்ந்தால் அது நமது கவனக்குறைவுக்கு எடுத்துக்காட்டாக அமைந்து விடும். மேலும் அந்த தவறை திருத்திக்கொள்ள நாம் தயாராக இல்லை என்பதையும், நமது கற்றுக்கொள்ளும் திறன் குறைவாக இருப்பதையும் அது எடுத்துக்காட்டுவதாக அமையும்.



    ஒருவர் நினைத்தால், தோல்வியை வெற்றியாக மாற்ற முடியும். ஏழ்மையை ஜெயித்து பணம் நிறைந்தவராக மாறமுடியும். கோழைத்தனத்தில் இருந்து துணிச்சல் மிக்கவராக மாறமுடியும். இதற்கு தேவை, தன்னம்பிக்கையும், கடின உழைப்பும் தான்.

    மற்றவர்களிடம் உங்களைப் பற்றிய எண்ணங்கள் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் அதற்கான சாவி உங்கள் கையில் தான் உள்ளது. உங்கள் செயல்கள், நன்னடத்தைகள், பழகும் தன்மைகள், தொடர்புகளை கையாளும் விதம் போன்றவை தான் உங்களைப்பற்றிய மதிப்பை மற்றவர்களிடம் உயர்த்தவும், தாழ்த்தவும் செய்கிறது.

    இதுகுறித்து சுவாமி விவேகானந்தர் கூறும்போது, ‘ஒரு உண்மையான ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும் என்றால், ஆயிரம் மாணவர்கள் இருந்தாலும் அவர்கள் மனமும், எண்ணமும் ஒன்றிப்போகும் அளவுக்கு பேசும் திறனும், செயல்படும் திறனும் கொண்டவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட ஒருவரால்தான் சிறந்த ஆசிரியராக சிறப்பு பெற முடியும்’, என்றார்.

    அதுபோல் நமது சொல்லும், செயலும், எண்ணமும், அதன் வெளிப்பாடும் அமைந்தால் எப்போதும் வெற்றியே நமக்கு சொந்தமாகும், தோல்விகள் தூரமாகும்.
    Next Story
    ×