search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பிரச்சினைகளால் உருவாகும் வாய்ப்புகள்
    X

    பிரச்சினைகளால் உருவாகும் வாய்ப்புகள்

    பிரச்சினையை எப்படி சமாளிக்க போகிறோமோ என்று பதற்றப்படாமல் அனுபவங்களை கற்றுத்தரும் பாடமாக பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும்.
    வாழ்க்கையில் பிரச்சினைகள் எட்டிப்பார்ப்பது தவிர்க்க இயலாதது. சின்ன சின்ன விஷயங்களையும் பிரச்சினைக்குரியதாக மாற்றுவது அவரவர் மன நிலையை சார்ந்தது. சுலபமாக கையாளக் கூடிய விஷயங்களை சரியாக புரிந்து கொள்ளாமல் தடுமாறும்போது அது பிரச்சினைக்குரியதாக மாறிவிடுகிறது. அதனை எப்படி தீர்ப்பது என்பதில்தான் ஒருவரின் ஆளுமைத்திறன் வெளிப்படும். பிரச்சினையை சுமுகமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான மாற்று வழிகளை பற்றி சிந்திக்க தொடங்கினாலே பாதி பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம்.

    அதை விடுத்து பிரச்சினையை எப்படி சமாளிக்க போகிறோமோ என்று பதற்றப்படக்கூடாது. அனுபவங்களை கற்றுத்தரும் பாடமாக பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். அத்தகைய மனப்போக்கை கடைப்பிடித்தாலே பிரச்சினைகளில் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். முக்கியமாக எதையும் எதிர்கொள்ளும் மன வலிமையை பெறலாம்.

    எந்தெந்த பிரச்சினைகளை எப்படி கையாள வேண்டும் என்ற பக்குவத்தையும் பெறலாம். எந்தவொரு பிரச்சினையும் ஏதாவது ஒரு விஷயத்தை கற்றுக்கொடுக்கும் என்ற எண்ண ஓட்டத்திலேயே அதற்கு தீர்வு காண முயல வேண்டும். ஒரு பிரச்சினைக்கு காணப்படும் தீர்வு அடுத்து செய்யப்போகும் காரியங்களை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்ற வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதாக கருத வேண்டும். அதை விடுத்து பிரச்சினையை கண்டு கலங்குவது அனுபவத்தின் மூலம் கிடைக்கும் அரிய வாய்ப்புகளை இழப்பதற்கு வழிவகுத்துவிடும்.



    ஒருசிலர் சிறிய பிரச்சினையையே மலைப்பாக கருதுவார்கள். தங்களுக்கு மட்டும்தான் பிரச்சினைகள் எப்போதும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது என்று புலம்பிக்கொண்டிருப்பார்கள். அடுத்தவர்கள் பிரச்சினையின்றி சந்தோஷமான மனநிலையில் இருப்பதை பார்த்து சலித்துக்கொள்வார்கள். ஒரு சிலர் மற்றவர்களிடம் பிரச்சினைகளை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

    அடுத்தவர்களின் பிரச்சினையை கண்டு மன ஆறுதல் தேடுவதற்கோ, பிரச்சினையை தூண்டிவிடுவதற்கோ ஒருபோதும் காரணமாக இருக்கக்கூடாது. அது விரைவிலேயே எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடும். மற்றவர்களிடம் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஆலோசனை கேட்பதில் தவறில்லை. அதேவேளையில் பிரச்சினையை தீர்க்கும் மனதைரியத்தை அதிகப்படுத்துவதாக அவர்களுடைய ஆலோசனை அமைந்திருக்கிறதா என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
    Next Story
    ×