search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நேர்முகத் தேர்வின் உடல் மொழி
    X

    நேர்முகத் தேர்வின் உடல் மொழி

    வேலைக்கான நேர்முகத்தேர்வில் வெல்வது முதல், மனங்கவர்ந்த காதலன், காதலியை ஈர்ப்பது வரை எல்லாவற்றிலும் உடல் மொழிக்கு முக்கியப் பங்குண்டு.
    உலகம் முழுவதும் எவ்வளவோ மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால் யோசித்துப் பார்த்தால், பாடி லாங்வேஜ்‘ எனப்படும் உடல் மொழிதான் உலகத்திற்கு பொதுவான மொழி. வேலைக்கான நேர்முகத்தேர்வில் வெல்வது முதல், மனங்கவர்ந்த காதலன், காதலியை ஈர்ப்பது வரை எல்லாவற்றிலும் உடல் மொழிக்கு முக்கியப் பங்குண்டு என்கிறார், உடல் மொழி நிபுணரான ஆலன் பீஸ்.

    அவர் நேர்முகத் தேர்வில் எப்படி உடல்மொழி இருக்க வேண்டும் என்று சொல்கிறார். இன்டர்வியூவிற்கு செல்லும் இடத்தில் உங்கள் வாகனத்தை நிறுத்தும்போதே தன்னம்பிக்கைத் தோற்றம் காட்டுங்கள். யாராவது உங்களைக் கவனித்துக்கொண்டிருக்கலாம். பலநேரங்களில், பார்க்கிங்‘ பகுதியில் இருந்தே இன்டர்வியூ தொடங்கிவிடுகிறது.

    வரவேற்பறையில் உட்கார வேண்டாம். நின்று கொண்டிருங்கள். அது உங்களை தன்னம்பிக்கையானவராக காட்டும். நேர்முகத்துக்காக காத்திருக்கும்போது கையில் லேப்டாப்‘ மாதிரி ஏதாவது ஒன்றில் ஆழ்ந்திருங்கள். நேர்முகத்துக்கு அழைக்கப்படுகையில், இதோ ஒரு நொடியில் முடிச்சுடறேன்‘ என்று அணைத்துவிட்டு எழுந்து செல்லுங்கள். சும்மா தேமே‘ என்று இருக்க வேண்டாம்.

    நேர்முகத்தேர்வு அறை நோக்கிச் செல்கையில் ஒரே சீரான வேகத்தில் நடந்து செல்லுங்கள். வேகம் சீரற்று இருப்பதாகத் தோன்றினால், இன்டர்வியூ அறைக்கு முன் ஒரு கணம் நின்று நிதானப்படுத்திக் கொள்ளுங்கள்.



    நேர்முகத் தேர்வாளர்களுடன் சரியான விதத்தில் கைகுலுக்குங்கள். அவர்களை நெருங்கும்போதே குலுக்குவதற்காகக் கையை உயர்த்துங்கள். தள்ளுவதைப் போல கையை நீட்டாதீர்கள். எதிராளியின் அதே அழுத்தத்தை கொடுங்கள். கையை நேரே வைத்திருங்கள். கை கீழ்ப்புறமாகப் பார்த்த மாதிரி இருப்பது ஆதிக்கத்தையும், மேல்புறமாகப் பார்த்தவாறு இருப்பது தாழ்மையையும் காட்டும்.

    உங்கள் நேர்முகத் தேர்வாளரை 45 டிகிரி கோணத்தில் பாருங்கள். நேருக்கு நேராகப் பார்ப்பது, மோதல் பாவத்தைக் காட்டும். கைகளை பற்றிக் கொண்டிருப்பது, உங்களின் பாதுகாப்பின்மையை எடுத்துக்காட்டும். கைகளை குறுக்காகப் போடுவது, நீங்கள் அமுக்கமானவர் என்பதன் அடையாளம். இரு கை விரல்களையும் ஒன்றோடு ஒன்று அழுத்தியவாறு பேசலாம். உள்ளங்கையை மேலே காட்டியவாறு பேசுவது, நம்பிக்கையை உணர்த்தும்.

    ஒருவர் பொய் சொல்வதை சில அடையாளங்கள் மூலம் கண்டுபிடித்துவிடலாம் என்கிறார் ஆலன். பொய் சொல்பவர் தனது முகத்தைத் தொடுவார். ரத்தம் மூக்கை நோக்கிப் பாயும் என்பதால், மூக்கு பெரிதாகும். அதை அடிக்கடி தொட ஆரம்பிப்பார். உண்மையைச் சொல்லணும்னா‘ என்று ஒருவர் ஆரம்பித்தால், பொய் சொல்லப் போகிறார் என்று அர்த்தம்.

    ஆண்களுடன் ஒப்பிடும்போது பொய்யை கண்டுபிடிப்பதில் பெண்கள் கில்லாடிகள். ஆலன் நிறைவாகக் கூறும் ஆலோசனை, புதியவர் ஒருவரை பற்றிய பர்ஸ்ட் இம்ப்ரஷன்‘ 4 நிமிடங்களில் உருவாகிவிடுகிறது. பல வேளைகளில், பத்தே நொடிகளில் அந்த முடிவுக்கு வந்துவிட முடியும். எனவே அதற்குள் மற்றவர்களை கவர்ந்துவிட வேண்டும் என்பதுதான்.
    Next Story
    ×