search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வீடுகளில் விளையும் காய்கறிகள் - கிச்சன் கார்டன்
    X

    வீடுகளில் விளையும் காய்கறிகள் - கிச்சன் கார்டன்

    கிச்சன் கார்டன் என்றவாறு வீட்டில் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தும் கீரைகள், காய்கறிகள், மூலிகை செடிகள் மட்டும் வீட்டில் வளர்க்கப்படுகின்றன.
    நமது வீட்டின் சமையலறையில் பயன்படுத்த கூடிய காய்கறி, கீரைகள் மற்றும் மூலிகை செடிகளை வீட்டில் தொட்டிகளில் வளர்த்து நமக்கு தேவையான காய்கறிகளை தேவையான போது உடனுக்குடன் பறித்து சமைக்கும் போது அதன் சுவையும், ருசியும் தனி. அத்துடன் இயற்கையான முறையில் நாமே வளர்த்து பயன்படுத்தும் காய்கனி மற்றும் கீரைகளில் இரசாயன உரங்களின் கலப்பு தவிர்க்கப்படுகிறது.

    கிச்சன் கார்டன் என்றவாறு வீட்டில் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தும் கீரைகள், காய்கறிகள், மூலிகை செடிகள் மட்டும் வீட்டில் வளர்க்கப்படுகின்றன. இவற்றில் அழகு மற்றும் பூச்செடிகளின் கலப்பு அறவே இல்லை. ஏனெனில் அழகு மற்றும் பூச்செடிகள் எனும் போது அதிக பயன்பாடு இல்லை. எனவே பிரத்யோகமான கிச்சன் கார்டன் என்றவாறே அமைக்கப்படுகின்றன.

    கிச்சன் கார்டனின் பிரதான விளைபொருட்கள் :

    அனைத்து விதமான கீரைகள் அதாவது தண்டுகீரை, பாலக், சீமை பொன்னாங்கன்னி, மனத்தக்காளி, பசலைகீரை, வெந்தய கீரை போன்றவைகளும், தக்காளி, வெங்காயம், மிளகாய், கத்திரிகாய், வெண்டைகாய், வெள்ளரிக்காய், அவரைகாய், பீட்ரூட், கேரட் போன்றவாறு பல காய்கறிகளும் விளைவிக்க முடியும். அத்துடன் கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி, துளசி, திருநீற்றுபச்சை, வாசனை தரக்கூடிய ரம்பா போன்ற செடிகளையும் வளர்க்கலாம்.

    கிச்சன் கார்டன் என்பதில் நமக்கு அன்றாட சமையலுக்கு தேவையான பல காய்கறி வகைகளை விதவிதமாக வளர்க்க முடியும். அதுபோல் தினம் ஒரு வகை உணவுக்கு ஏற்ப மாறி மாறி காய்கறிகள், கீரைகள் பயன்படுத்தும் போது அவை தினசரி நமக்கு தேவையான அளவு கிடைத்து விடுகிறது.

    சுவர் ஓரப்பகுதிகளில் கொடி வகைகளை வளர்க்கலாம் :

    கொடி வகை காய்கறி செடிகளான வெள்ளிரி, அவரை, பூசணி, பசலை கீரை போன்றவற்றை வீட்டின் சுவர் ஓரப்பகுதியில் கம்பி வலைகள் அமைத்து அதன் மீது கொடிகளை ஏற விடலாம். இதன் மூலம் கொடிகள் கம்பியில் இறுக பிடித்து நிற்பதுடன், காய்கறிகள் விரைவாக வளர ஏதுவான காற்றோட்டமும், சூரிய ஒளியும் கிடைக்கும். அது போல் கொடிகளின் வளர்ச்சி விரைவாகவும், பூச்சுகள் சேராமலும் வளரும். ஒரு கொடியின் மீது மற்றொரு கொடி படராதவாறு அவ்வபோது பிரித்து விட வேண்டும்.

    கம்பி வலை மீது கொடிகள் படரவிட்டு கட்டி விடும் போது கொடிகள் கீழே விழாது. கொடி வகைகளில் தர்பூசணி, பறங்கிகாய் போன்றவை கூட விளைவிக்கலாம். மேலும் கோவைகாய், கொத்தவரங்காய் காய்றிகளையும் விளைவிக்கலாம்.

    தொட்டிகளில் வளர கூடிய காய்கறி செடிகள் :

    கத்திரிக்காய், வெண்டைகாய், இஞ்சி, தக்காளி, மிளகாய், வெங்காயம், கேரட், பீட்ரூட், முள்ளிங்கி போன்ற காய்கறி செடிகளை வளர்க்க முடியும். மண் தொட்டிகளில் அடிபகுதியில் வைக்கோல், தேங்காய் நார் போன்றவகளை போட்டு அதன் மீது மண்கலவையை போடவும். இதன் மூலம் தொட்டி எடை அதிகரிப்பது குறையும். செடிகளின் வேர் விரைவாக வளர உதவும். மேற்கூறிய காய்றிகறி விதைகளை வாங்கி ஒரு அகலமான தொட்டியில் விதைத்து பின் ஒவ்வொரு செடியை ஒரு தொட்டியில் பிடிங்கி நட வேண்டும். ஒவ்வொரு தொட்டிக்கும் சற்று இடைவெளி விட்டு வைக்கவும். தினசரி நமது வீட்டில் கிடைக்கும் காய்கறி மற்றும் உணவு கழிவுகளை செடிகளுக்கு உரமாக பயன்படுத்தலாம். வீட்டிலேயே செய்த பஞ்சகவ்யம், வேப்ப எண்ணெய் கரைசல் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

    கீரைகளை பயிர் செய்ய உதவும் பெட்டி அமைப்புகள் :

    கீரைகள் வளர அதிக மண் தேவையில்லை. எனவே நாலுபக்கமும் சட்டம் மூலம் இணைத்த உயரமற்ற பெட்டி அமைப்பில் மணலை பரப்பி அதில் கீரை விதைகளை தூவி விட்டால் போதும். கீரைகள் ஒவ்வொன்றிற்கு ஒரு தொட்டி அமைப்பு என்றவாறு பிரித்து விதைக்கும் போது சிறப்பான கீரை வளர்ச்சி கிடைக்கும். பெட்டி அமைப்புகளில் தண்ணீர் தெளிப்பான் மூலம் தெளித்தால் போதுமானது. பாலக், பசலை, வெந்தயகீரை, பொன்னாங்கன்னி, காசினிகீரை, மனத்தக்காளி போன்றவைகளை பெட்டி அமைப்பில் வளர்க்கலாம்.

    சமையலறையின் உட்பகுதியில் சிறு சிறு, தொட்டிகளில் புதினா, கொத்தமல்லி, துளசி, போன்றவைகளை வளர்த்து கொள்ளலாம். சமையலறையின் அழகை மேம்படுத்தும் விதமாக அமைப்பதுடன், தேவையான போது உடனே பறித்து பயன்படுத்தி கொள்ளலாம்.

    கிச்சன் கார்டன் என்பதை ஏற்படுத்தி தரும் நிறைய நிறுவனங்கள் உள்ளன. நமது வீட்டின் வெளிபுற பகுதி, பால்கனி, மொட்டை மாடி, போன்றவற்றின் நீள அகல அளவிற்கு ஏற்ப பெட்டி அமைப்புகள், ராக் அமைப்புகள், தொட்டி அமைப்புகள், பிளாஸ்டிக் பெட்டி அமைப்புகள் கொண்ட அழகிய கிச்சன் கார்டனை உருவாக்கி தருகிறார்கள். தினசரி வீட்டு சமையலுக்கு காய்கறிகள் நமது வீட்டிலேயே வளரும் போது கடைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.
    Next Story
    ×