search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நிதானத்தை கடைபிடித்தால் இலக்கை எட்டிப்பிடிக்கலாம்
    X

    நிதானத்தை கடைபிடித்தால் இலக்கை எட்டிப்பிடிக்கலாம்

    பரபரப்பும், வேகமும் எவருக்கும் சுலபமாக வெற்றியை தாரைவார்த்து கொடுத்துவிடுவதில்லை. நிதானமாக செயல்படும் பயணமே இலக்கை நோக்கி சுமுகமாக இயங்க வைக்கும்.
    இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு ஈடுகொடுக்க ஒருசிலர் தங்களை எப்போதும் பரபரப்பாக செயல்படுபவர்களை போல காண்பித்துக்கொள்வார்கள். எப்போதும் சுறு சுறுப்பானவர்களாக, வேகமாக செயல்படுபவர்களாக சுழன்று கொண்டிருப்பார்கள். அவர்களிடத்தில் ஒருவித பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்கும். அப்படி பரபரப்பாக இருந்தால்தான் காரியங்களை சாதிக்க முடியும் என்றில்லை.

    நிதானமாக செயல்படுபவர்களால் இலக்கை எளிதில் எட்டிப்பிடிக்க முடியாது என்று எண்ணுவது தவறானதாகும். உண்மையில் வேகத்தை விட விவேகம் முக்கியம். அதைபோலவே, எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க நிதானமும், அமைதியும் மிக அவசியம். பரபரப்புடன் இயங்குபவர்களிடத்தில் ஒருவித பதற்றம் இருந்து கொண்டிருக்கிறோம். எப்படி இலக்கை எட்டப்போகிறோம் என்ற சிந்தனை ஒரு கட்டத்தில் அவர்களிடம் அச்ச உணர்வை உண்டாக்கி விடும். அது ஆக்கப்பூர்வமாக சிந்தித்து செயல்படுவதற்கான ஆற்றலுக்கு தடையாகவும் அமைந்து விடும்.

    நிதானத்துடன் செயல்படுபவர்களிடம் பொறுமையும், படிப்படியாக காரியத்தை நிறைவேற்றுவதற்கான திட்டமிடலும் இணைந்தே பயணிக்கும். இலக்கை நோக்கி கண்ணும், கருத்துமாக இருப்பதால் சிறு சிறு தடுமாற்றங்களையும் சாதுரியமாக எதிர்கொண்டு சமாளித்துவிடுவார்கள். நிதானமும், அமைதியும் மனதை தெளிந்த நீரோடைபோல் பயணிக்க வைக்கும்.

    ஆனால் பரபரப்பும், வேகமும் இலக்கை நோக்கி விரைந்து செல்வது போன்ற மாய தோற்றத்தையே உருவாக்கும். அவர்களுடைய செயல்பாடுகளை பார்ப்பவர்களும், ‘எவ்வளவு வேகமாக செயல்படுகிறான் பார்?’ என்று பாராட்டுவார்கள். அந்த பாராட்டை தக்கவைக்க வேகமாக இயங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிடும். நெருக்கடிகளுக்கு மத்தியில் காரியங்களை கச்சிதமாக செய்து முடிக்கமுடியாமல் அவர்கள் மனக்குழப்பங்களுக்கு ஆளாக நேரிடும்.

    எந்த வேலையையும் சிறப்பாக செய்து முடிக்கும் திறமைசாலிகளிடம் நிதானமும், அமைதியும் நிச்சயம் குடிகொண்டிருக்கும். பரபரப்பும், வேகமும் எவருக்கும் சுலபமாக வெற்றியை தாரைவார்த்து கொடுத்துவிடுவதில்லை. விரைந்து வெறுமனே வேகத்தோடு இயங்குபவர்கள் ‘பிரேக்’ இல்லாமல் தறிகெட்டு ஓடும் வாகனத்தை போல எடுத்த காரியத்தில் தங்களை நிலைநிறுத்த முடியாமல் தடுமாறுவார்கள். நிதானமாக செயல்படும் பயணமே இலக்கை நோக்கி சுமுகமாக இயங்க வைக்கும்.
    Next Story
    ×