search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மற்றவர்களின் செய்கையால் பொறுமையை இழக்கக்கூடாது
    X

    மற்றவர்களின் செய்கையால் பொறுமையை இழக்கக்கூடாது

    ‘என்ன நேர்ந்தாலும் பொறுமையாக செயல்படுவேன்’ என்பதில் தீர்மானமாக இருக்க வேண்டும். நாளடைவில் பொறுமையாகவும், சாதுரியமாகவும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் ஏற்பட்டுவிடும்.
    பொறுமையை இழக்கும்போது நிம்மதியை தொலைக்க நேரிடும். எந்தவொரு காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிக்க முனைப்பு காட்டுபவர்கள் பொறுமையை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும். எடுத்த எடுப்பிலேயே வெற்றிக்கனியை பறிப்பது சாத்தியமில்லை. ஒரு விதையை மண்ணில் ஊன்றினால் அது முளைத்து, செடியாகி, மரமாகி, கிளைகளை படரவிட்டு பூப்பூத்து குலுங்கி, காயாகி, கனியாகி பலன் கொடுக்க அதன் பயணம் நெடியது.

    அதுவரை பொறுமை காக்க வேண்டியது அவசியம். அவசரப்பட்டு முளைத்து, சட்டென்று வீழ்ந்து விடாமல், தனக்கான அடித்தளத்தை அமைத்துக்கொள்ள விதை காக்கும் பொறுமையே மரமாகி பலன் கொடுக்கிறது. மரம் போல் பொறுமையை கடைப்பிடிக்காது அவசரப்பட்டால் தோல்விதான் பின்தொடரும். பொறுமை இல்லாதவர்கள் வாழ்க்கையில் ஏமாற்றத்தையே அதிகம் சந்திப்பார்கள்.

    அலுவலகம் செல்லும் நிறைய பேர் காலையில் வீட்டில் இருந்து புறப்படுவதற்கு காட்டும் அவசரத்தில் பொறுமையை இழந்துவிடுவார்கள். அவர்கள் வழக்கமாக பயணிக்கும் பேருந்தை தவறவிட்டாலோ, அது வருவதற்கு தாமதமானாலோ பொறுமையை இழக்கிறார்கள். அதுபோல் மோட்டார் சைக்கிளிலோ, காரிலோ பயணிப்பவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கினால் நிதானத்தை இழந்துபோய்விடுவார்கள்.

    அப்படி பொறுமையை இழப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை. அவசரப்பட்டாலும், ஆத்திரப்பட்டாலும் அலுவலகத்திற்கு தாமதமாகத்தான் செல்லவேண்டியிருக்கும். பொறுமையை இழப்பதால் எதுவும் மாறப்போவதில்லை. தவிர்க்க முடியாத சூழலை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இனி அப்படி நடக்காமல் இருக்க, முன்கூட்டியே புறப்படுவதற்கு தயாராகிக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் செய்கையாலும் நாம் பொறுமையை இழக்கக்கூடாது.

    அவர்கள் ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொண்டாலும் சகிப்பு தன்மையை வளர்த்து கொள்ள வேண்டும். அவர்கள் அறியாமையால் அப்படி செய்கிறார்கள் என்ற எண்ணம் உருவானால் பொறுமையை இழக்க வேண்டிய அவசியம்இருக்காது. பொறுமையை சோதிக்கும் பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தால் உணர்ச்சிவசப்படாமல் மனதை சாந்தப்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த சமயத்தில், ‘என்ன நேர்ந்தாலும் பொறுமையாக செயல்படுவேன்’ என்பதில் தீர்மானமாக இருக்க வேண்டும். நாளடைவில் பொறுமையாகவும், சாதுரியமாகவும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் ஏற்பட்டுவிடும்.
    Next Story
    ×