search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கடன் கழுத்தைப் பிடிக்காமல் இருக்க...
    X

    கடன் கழுத்தைப் பிடிக்காமல் இருக்க...

    அவசியம் என்றால் தவிர, கடன் வாங்குவதால் கஷ்டம்தான் நேரும். ஆனால் பலருக்கு, கடன் வாங்குவது இயல்பான விஷயம். அது ஒரு கட்டத்தில் கழுத்தை நெரிக்கும்.
    இந்தியா இளமையான தேசம் என்ற பெயரை நம் நாட்டில் பெரும்பான்மையாக உள்ள இளைஞர் சமுதாயம் பெற்றுத் தந்திருக்கிறது. இது பெருமை என்றால், இந்த இளைஞர் கூட்டம், கடன் என்ற சுமையால் முதுகெலும்பு வளைந்து கிடக்கிறது என்பது கவலை தரும் சேதி. ஆம், இந்தியாவில் சுமார் 20 முதல் 35 வயது வரையுள்ள இளைஞர்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் கடன் வாங்கியிருக்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு.

    அவசியம் என்றால் தவிர, கடன் வாங்குவதால் கஷ்டம்தான் நேரும். ஆனால் பலருக்கு, கடன் வாங்குவது இயல்பான விஷயம். ‘அம்பானிக்குக் கூடத்தான் கடன் இருக்கு’ என்று விளக்கம் சொல்லியபடி, கிடைக்கும் இடமெல்லாம் கடன் வாங்கிக்கொண்டே இருப்பார்கள். அது ஒரு கட்டத்தில் கழுத்தை நெரிக்கும்.

    ஓர் ஆய்வின்படி, இந்தியாவில் 20-ல் இருந்து 35 வயது வரையுள்ள இளைஞர்களில் 52 சதவீதம் பேர் தனிநபர் கடனும், 27 சதவீதம் பேர் தொழில் கடனும் வாங்கியுள்ளனர். வங்கி அல்லாத கடன்களையும் இந்த வயதினர் வாங்கிக் குவித்திருக்கிறார்கள். இப்படி ஏதோ ஒரு வகையில் இளைஞர்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் கடனாளிகளாக இருக்கின்றனர்.

    குறைந்த வருவாய் உள்ளவர்கள், அதிக வருவாய் உள்ளவர்கள் எல்லோருமே கடனில் ஆர்வம் காட்டுகின்றனர்.

    அதிலும், வீட்டுக் கடன், கல்விக் கடன், தனிநபர் கடன், வாகனக் கடன், சிறு தொழில் கடன், விவசாயக் கடன் என பல கடன்கள் இருந்தாலும், தனிநபர் கடன் மட்டுமே அதிகளவில் வாங்கப்பட்டிருக் கிறது.

    அதற்கு, ஆடம்பர மோகம்தான் காரணம். பிறர் தங்களை மதிக்கும் வகையில் படாடோபமாகக் காட்சியளிக்க வேண்டும் என்று இன்றைய இளைஞர்கள் பலர் எண்ணு கிறார்கள். சேமிப்பு என்ற ஒரு வார்த்தையே அவர்கள் அகராதியில் இல்லை.

    பெரும்பாலான இளைஞர்கள் கடனாளிகளாக ஆவதற்கு மிக முக்கியக் காரணம் இந்த ஆடம்பரம்தான். இன்றைய நவீன வாழ்க்கை முறையும் நுகர்வோர் கலாசாரமும் ஆடம்பரத்தை கவுரவத்தின் அடை யாளமாகக் கருதுகிறது. ஆடம்பரச் செலவு செய்துவிட்டு, பின்னர் அதனால் நெருக்கடி ஏற்படும்போது அதைச் சமாளிக்க மறுபடி கடன் வாங்குவது. இப்படியே ஒரு விஷச் சுழலுக்குள் விழுந்துவிடுகிறார்கள்.

    தனிநபர் கடன்

    கடன் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்க முக்கியக் காரணம், ‘பெர்சனல் லோன்’ எனப்படும் தனிநபர் கடன்தான். இக்கடனையே அதிகமான பேர் நாடு கிறார்கள். காரணம், தனிநபர் கடன்களுக்கு செக்யூரிட்டி தேவையில்லை, யாருடைய கியாரண்டியும் வேண்டாம்.

    எளிதில் வாங்குவதற்கும், நம் தேவைக்கேற்ப அந்தப் பணத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் வசதியாக உள்ளதால் தனிநபர் கடனை பலரும் தயங்காமல் வாங்கிவிடுகிறார்கள். அதை அவசியமான செலவுக்கு அன்றி, ஆடம்பரச் செலவுக்குப் பயன்படுத்துவதால் பின்னர் பிரச்சினையாகி விடுகிறது.

    சரி, கடன் நமது கழுத்தைப் பிடிக்காமல் இருக்க என்ன செய்வது? இதோ, நிதி ஆலோசகர்கள் சொல்லும் சில ஆலோசனைகள்...

    ‘கவுரவத்துக்காக’ செலவு வேண்டாம்

    தற்போது கவுரவத்துக்காக செலவு செய்யும் போக்கு அதிகரித்திருக்கிறது. ஒரு பொருள் நம்மிடம் இருந்தால்தான் மரியாதை என்று எண்ணி அதை வாங்குகிறார்கள். இது ஆபத்தான போக்கு. மற்றவர்களுடன் போட்டி போட்டு கடன் வாங்கிச் செலவு செய்வதற்குப் பதில், வரவுக்கு ஏற்ப எப்படி செலவுகளை அமைத்துக்கொள்ளலாம் என்று யோசித்துச் செயல்பட்டால், கடன் வாங்கும் நிலை ஏற்படாது.



    முன்னுரிமை விஷயங்கள்

    கல்வி, திருமணம் போன்ற விஷயங்களுக்காக சேமித்து வைத்திருக்கும் பணத்தை, திடீர் ஆசையால் ஏதாவது ஆடம்பரச் செலவு செய்துவிடுவது சிலரின் இயல்பு. இப்படிச் செலவு செய்கிறபோது, அத்தியாவசிய விஷயங்களுக்கு கடன் வாங்கும் நிலை ஏற்படும். எனவே, முக்கியமான, அவசியமான செலவுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

    அச்சம் அவசியம்

    மாதச் சம்பளம் போன்ற தொடர் வருமானம் வருகிறவர் களுக்கு, ‘அதுதான் அடுத்த மாதச் சம்பளம் வந்துவிடுமே, பார்த்துக்கொள்ளலாம்’ என்ற எண்ணம் ஏற்படுவது இயற்கை. அதுதான் தேவையற்ற செலவுகளை நாட வைக்கும். அதுவும் கையில் எதிர்பாராமல் ஒரு தொகை வரும்போது அதை ‘தாம் தூம்’ என்று செலவு செய்துவிட்டு ஓய்வது சிலரின் வாடிக்கை. மாறாக, கையில் இருக்கிறது என்று செலவு செய்கிறோமே, திடீரென வருவாய் நின்றுவிட்டால், வேலை போய்விட்டால் என்ன செய்வது என்ற அச்சம் தோன்றினால், இயற்கையாகவே கை கட்டுப் படும்.

    எல்லை தாண்டக்கூடாது

    குறிப்பிட்ட வருவாய் பெறும் ஒருவர், அதைத் தாண்டிய ஒரு பொருள் அல்லது விஷயத்தை கடன் பெற்றாவது நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று கருதக்கூடாது. இன்று தவணை முறை வசதி கிடைக்கிறதுதான். ஆனால், மாதாந்திரச் செலவுகளுடன், கடன் தவணையும் வந்து நிற்கும்போதுதான் நமக்கு வலிக்கும். அதிலும் ஏற்கனவே ஒரு பொருள் இருக்கும்போது, கடன் பெற்று அந்தப் பொருளை புதிதாக வாங்க நினைப்பது முற்றிலும் தவறு.

    ‘பட்ஜெட்’ போட வேண்டும்

    வருமானம், அன்றாடச் செலவு, எதிர்காலச் செலவு மற்றும் அவசர காலச் செலவு என ஒரு பட்ஜெட் போட்டுச் செயல்படுவது மிகவும் நல்லது. வருமானத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து, ஒரு பங்கை அன்றாடச் செலவுகளுக்கும், இரண்டாம் பங்கை சேமிப்புக்கும், மூன்றாம் பங்கை அவசரகாலத் தேவைகளுக்கும் என திட்ட மிடுங்கள். ஏற்கனவே கடன், ஈ.எம்.ஐ. என ஏதேனும் இருக்கும் பட்சத்தில் இந்த அவசரகால பங்கிலிருந்துதான் பணத்தை எடுத்து நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும்.

    சேமிப்பே சிறப்பு

    பண விஷயத்தில் கட்டுப்பாடு... கட்டுப்பாடு என்று துறவு வாழ்க்கை வாழ வேண்டுமா என்று கேட்கத் தோன்றும். ஆனால் நாம் எதற்கும் ஆசைப்படலாம், அதற்குரிய பணத் தகுதியை வளர்த்துக்கொண்டால் போதும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு பொருளுக்கு ஆசைப்படும்போதே அதற்கான சேமிப்பைத் தொடங்கிவிட வேண்டும். வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை கட்டாயம் சேமிக்க வேண்டும். இளைஞர்கள் சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டால், சேமித்த பணத்தை வைத்தே எதிர்காலத்தில் தமது ஆசைகளைக் கடன் வாங்காமலே நிறைவேற்றிக்கொள்ளலாம்.

    சரி, ஏற்கனவே கடன் வாங்கியிருந்தால், அதிலிருந்து எப்படி மீண்டு வருவது?



    திருப்பிச் செலுத்தும் விதம்


    என்னதான் சம்பாதித்தாலும், கடன் வாங்குவதைத் தவிர்ப்பது பலருக்கு பொருளாதார ரீதியில் சாத்தியமில்லாமல் இருக்கிறது. அப்படி கடன் வாங்கும்போது, எவ்வளவு தொகை கடன் வாங்கினால் நம்மால் திருப்பிச் செலுத்த முடியும் என்று யோசிக்க வேண்டும். வாங்கும் கடனை மாதத் தவணையாகவோ அல்லது மொத்தமாகவோ திருப்பி செலுத்தத் திட்டமிட வேண்டும். வருமானத்துக்கு ஏற்ற வகையில் கடனை திருப்பி செலுத்தும் வழியையும் தொகையையும் முடிவு செய்தபிறகே கடனைப் பெறுவதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும்.

    திட்டமிடுதல்

    கடன் வாங்கும் இளைஞர்களில், குறிப்பிட்ட சதவீதத்தினர் மட்டுமே வாங்கிய கடனை என்ன செய்வது, எப்படி முதலீடு செய்வது என்று நிதி ஆலோசகர்களிடம் ஆலோசிக்கின்றனர். குறைந்த சதவீத இளைஞர்கள், முதலீடு குறித்த தகவல் களுக்கு சமூக வலைதளங்களை நாடு கிறார்கள். மீதமுள்ளவர்கள் கடன் வாங்கும்முன்பும் யோசிப்பதில்லை, வாங்கிய பிறகும் யோசிப்பதில்லை. இதனால் வாங்கிய கடனை இஷ்டத்துக்கு எடுத்துச் செலவு செய்துவிட்டுப் பின்னர் அதைக் கட்ட முடியாமல் செலவுகளையும் குறைக்க முடியாமல் திண்டாடுகின்றனர்.

    கணக்கு போட்டு கடன்

    கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது, நமது வருமானம் மற்றும் செலவுகளைப் பட்டியலிடுவது. வரவில் இருந்து செலவு போக மீதம் எவ்வளவு தொகை இருக்கிறது, சேமிப்பிலோ, முதலீட்டிலோ ஏதேனும் தொகை இருக் கிறதா என்று பார்க்க வேண்டும். அவற்றைப் பொறுத்தே கடன் தொகையை முடிவு செய்ய வேண்டும். அந்தக் கணக்குப்படி, உங்களால் கடனில்லாமல் சமாளிக்க முடியும் என்றால் கடன் என்கிற வார்த்தையை மறந்துவிடுங்கள்.

    நீங்கள் கடன் வாங்கும் நோக்கம் என்னவோ, அதற்காக உள்ள கடனை வாங்க முயற்சி செய்யுங்கள். உங்கள் தேவைக்கேற்ப குறைந்த வட்டியில் கடன் வாங்குங்கள். எளிதில் கிடைக்கிறது என்பதற்காக தனிநபர் கடன் மாதிரியான ஒரு கடனை வாங்கிவிட்டுப் பின்னர் தவிக்க வேண்டாம்.

    ‘சிபில்’ பற்றி அறியுங்கள்

    நம் நாட்டில் கடன் வாங்கும் பலருக்கு, கடன் கட்ட முடியாமல் போனால் என்னென்ன விளைவுகள் உண்டாகும் என்பது பற்றியும், கடன் வாங்கிய நபருடைய நம்பகத்தன்மை மதிப்பிடப்படுகிறது, அதன் பெயர் ‘சிபில்’ (CI-B-IL) என்றும் தெரியாது. இந்த சிபில், கடன் வாங்கியவர்களின் விவரத்தைச் சேகரித்து வைத்திருக்கும். வங்கிகளுக்கு கடன் வாங்குபவர்களின் நம்பகத்தன்மையை பற்றி தெளிவாகக் கூறிவிடும். வாங்கிய கடனை சரியாக திருப்பி செலுத்தாவிட்டால் மீண்டும் வேறு கடன் வாங்கும்போது பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டிவரும்.

    செலவுகள் என்ற குதிரையின் கடிவாளத்தை நம் கையில் வைத்திருந்தால், என்றும் வாழ்க்கைப் பயணம் சுகமாக இருக்கும்!
    Next Story
    ×