search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களுக்கு தங்கக்கூண்டு தேவையில்லை.. பலமான சிறகுகள்தான் தேவை..
    X

    பெண்களுக்கு தங்கக்கூண்டு தேவையில்லை.. பலமான சிறகுகள்தான் தேவை..

    பெண் குழந்தைகளுக்கு பெற்றோரே முழுநேரமும் காவலாக இருக்க முடியாது. அவர்கள் சுயமாகவே தங்களை பாதுகாக்க பழகிக்கொள்ளவேண்டியது அவசியம்.
    பெண் குழந்தைகளுக்கு பெற்றோரே முழுநேரமும் காவலாக இருக்க முடியாது. அவர்கள் சுயமாகவே தங்களை பாதுகாக்க பழகிக்கொள்ளவேண்டியது அவசியம். அப்படியென்றால் அவர்கள் சிலம்பம், கராத்தே போன்றவைகளை கட்டாயம் கற்றுக் கொள்ளவேண்டும் என்பது அர்த்தம் இல்லை. தற்காப்புத் திறன் தன்னம்பிக்கையின் வழியாக பிள்ளைகளின் மனதில் விதைக்கப்பட வேண்டும். அதற்கு பெற்றோர் வழிகாட்டிகளாகத் திகழவேண்டும்.

    பெண் குழந்தைகள், தாங்கள் வாழும் உலகை புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களால் தங்களை முழுமையாக தற்காத்துக் கொள்ள முடியும். இந்த உலகை புரிந்துகொள்ள அவர் களுக்கு கல்வியறிவு மட்டும் அதற்குப் போதாது. வெளியுலக அனுபவமும் தேவை. தாங்கள் செல்லும் பாதை சரியானதுதானா? என்பதை சீர்தூக்கிப் பார்க்க பழக்க வேண்டும். அதற்கு பெற்றோர் அவர்களிடம் மனம் விட்டுப் பேச வேண்டும். நட்புணர்வோடு பழக வேண்டும். பெற்றோரோடு மனம்விட்டு பேசுவதுதான் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு என்பதை புரிய வைக்க வேண்டும்.

    அவர்கள் வாழும் இந்த உலகில் அவர்களைச் சுற்றி பல போலியான விஷயங்கள் இருக்கும். அதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். எது உண்மையான நட்பு? எது போலியானது? என்று தெரிந்து கொள்ள உதவி செய்ய வேண்டும். அவர்களை சுற்றி இருக்கும் மனிதர்கள் அவர்களுடைய, செயல்பாடுகள் எல்லாவற்றையும் உற்றுக் கவனிக்க வேண்டும். அதில் ஏதேனும் வித்தியாசமான மாற்றம் தெரிந்தால் விழிப்புணர்வோடு செயல்பட அறிவுறுத்த வேண்டும்.

    வீட்டில் பெண் குழந்தை என்றாலே எல்லோருடைய ஆதரவும் இருக்கும். அளவுக்கு மீறி புகழ்வார்கள். அளவுக்கு மீறி பாதுகாப்பளிப்பார்கள். அளவிற்கு அதிகமான ஆதரவு தேவையில்லை. நல்ல வழிகாட்டுதல் மட்டும் போதுமானது. வெளியில் ஏதாவது தொந்தரவு இருந்தால் அதை தயங்காமல் வீட்டில் சொல்ல அனுமதி அளியுங்கள். வெளியில் செல்லும் பெண்களுக்கு வீட்டிலுள்ளவர்களின் ஆதரவு தேவை. அதை விட்டுவிட்டு நீங்களும் அவர்களை சந்தேகப்பட்டு வதைக்காதீர்கள்.

    இந்தக் கால பெண்கள் சிந்திக்கும் திறன் பெற்றவர்கள். அவர்கள் சிந்தனை ஓட்டத்தை தடை செய்ய வேண்டாம். பழமையான விஷயங்களைக் கொண்டு அவர்களுடைய சிந்தனைக்கு முட்டுக்கட்டை போடாமல் புதுமையாக சிந்திக்கத்தூண்டுங்கள். அவர்களுக்கு வேண்டிய தேவைகளை அவர்களே முடிவு செய்யட்டும். அதில் ஏதாவது தவறு இருந்தால் மட்டும் எடுத்துச் சொல்லலாம். அவர் களுக்கான விஷயங்களை அவர்களை மீறி பெற்றோர் முடிவு செய்யக்கூடாது. அது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தராது. அது அவர் களுக்கு வளர்ச்சியையும் தராது.



    அவர்களைப் பற்றி மற்றவர்களிடம் விசாரிப்பது, சந்தேகப்படுவது, அவர்களை நம்மிடமிருந்து விலகச் செய்துவிடும். அதைவிட அவர்களைப் பற்றி அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். பெண்கள் சுதந்திரமாக வளர வேண்டும் என்று நினைப்பவர்கள். அந்த சுதந்திரம் எந்த அளவு இருக்க வேண்டும் என்பதையும் சொல்லித் தர வேண்டும். அளவுக்கு மீறிய சுதந்திரம் அவர்களுக்கு ஆபத்தை தேடித்தரும் என்பதால் சுதந்திரத்தின் தன்மையை தெளிவாக புரிய வைக்க வேண்டும்.

    சிந்திக்கவும், முடிவெடுக்கவும் சுதந்திரம் அளிக்கப்படலாம். ஆனால் சமூக கட்டுப்பாட்டுக்குள் வாழ கற்றுத்தர வேண்டும். ஒரு பெண் பாதுகாப்பாக இருக்க வேண்டியது மிக அவசியம். வீட்டில் இருக்கும் வரை அந்த பாதுகாப்பை பெற்றோர் தரலாம். வெளியே போகும்போது அந்த பாதுகாப்பை அவர்களாகத்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். சுதந்திரம் என்ற பெயரில் எல்லைமீறிவிட்டு அவப்பெயரை சுமந்து எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கிக் கொள்ளக்கூடாது.

    வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்திலும் நேரடியாக செயல்படும் போதுதான் அதில் இருக்கும் சிக்கல்கள் புரியவரும். அதை, தானே சிந்தித்து நிவர்த்தி செய்யும்போது அது அனுபவமாக மாறும். அந்த அனுபவம்தான் அவர்களை நல்வழி நடத்தும். எந்த ஒரு பிரச்சினை என்றாலும் அதை அவர்களே சிந்தித்து சமாளிக்க பழக்கப்படுத்துங்கள். எந்தப் பிரச்சினைக்கும் அவர்கள் பயந்து ஓடிவிடக் கூடாது. அது அவர்களை பலவீனமாக்கிவிடும்.

    சமூகத்தில் ஏற்படும் வன்முறைகள், பாலியல் கொடுமைகள் இவற்றையெல்லாம் காட்டி பெண்களை பலவீனப்படுத்தக் கூடாது. மாறாக இதுபோன்ற செயல்களை எப்படி சமாளிப்பது? எப்படி பாதுகாப்பாக நடந்து கொள்வது? என்பதை கற்றுக் கொடுங்கள்.

    சில சமயங்களில், உங்கள் மனது ஒப்புக் கொள்ளாத வகையில், பெண் பிள்ளைகள் சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்டாலும் கூட அவர்களை தனிமைப்படுத்தி கேள்வி கேட்காதீர்கள். மாறாக அவர்களின் தவறை உணர வாய்ப்பளியுங்கள். வீட்டில் உள்ளவர் களிடம் நேர்மையாக இருப்பதுதான் பாதுகாப்பு என்பதை எடுத்து கூறுங்கள். அவரவர் செயல்கள் தான் அவர்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது. அதனால் நல்ல செயல்களால் எதிர்காலத்தை வளப்படுத்தச் சொல்லுங்கள்.



    பெற்றோரை நம்புவது ஒரு பாதுகாப்பான விஷயம். அதுவும் வெளியே போக நேரிடும்போது அவ்வப்போது பெற்றோரிடம் தகவல் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அவ்வப்போது நடக்கும் விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். அதன் மூலம் பெற்றோரிடம் ஆலோசனைகேட்டு, எங்காவது தவறு நடக்க வாய்ப்பிருந்தால் அதை சரிபடுத்தலாம்.

    பெண்களுக்கு இந்த சமூகம் பல கொடுமைகளை இழைப்பது தொடர்கதையாகத் தான் உள்ளது. ஆனாலும் இந்த கொடிய சம்பவங்களால் பெண்களின் திறமைகள் முடங்கிவிடக் கூடாது. பெண்களின் பிரச்சினைகளுக்கு பெண்களே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    இப்பொழுதெல்லாம் கிராமப்புற பெண்கள்கூட விழிப்புடன் இருக்கிறார்கள். வெளியில் வேலைக்குப் போகிறார்கள். வெளியுலக அனுபவங்களைப் பெறுகிறார்கள். அது அவர்களை பலசாலிகளாக்குகிறது. அனுபவங்கள் அவர்களை வழிநடத்துகிறது. இதுதான் தேவை.

    வெளிநாடுகளில் டீன்ஏஜ் பெண்கள் பகுதி நேர வேலைக்குச் சென்று பணம் சம்பாதிக்கிறார்கள். நம் நாட்டில் திருமணமான பிறகுகூட அம்மா-அப்பாவின் தயவில் வாழ வேண்டியுள்ளது. சொந்தக் காலில் நிற்கும் பலத்தை அவர்களுக்கு நாம் தரவில்லை. அதில் மாற்றம் உருவாக வேண்டும்.

    பெண்கள் உயர்வதால் வீடும் உயரும். நாடும் நலம்பெறும். அவர்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்பளியுங்கள். பறவைக்கு தங்கக்கூண்டு தேவையில்லை. சிறகுகள்தான் வேண்டும். பறந்து போய் மகிழ்ச்சியாக வாழட்டும். தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளட்டும். யாராவது ஒருவர் அவர்களை காப்பாற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. அது எப்போதும் முடியவும் முடியாது. பெண் குழந்தைகள், சமூகத்தில் தன்னம்பிக்கையுடன் நடைபோட பெற்றோராகிய நீங்கள் வழிகாட்டுங்கள். தற்காப்புத் திறனை தாங்களாகவே வளர்த்துக் கொள்ளட்டும்!
    Next Story
    ×