search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஐ.டி.நிறுவனங்களில் தாக்குப்பிடிப்பது எப்படி..?
    X

    ஐ.டி.நிறுவனங்களில் தாக்குப்பிடிப்பது எப்படி..?

    ஐ.டி. நிறுவனங்களில் பணி புரிகின்ற ஊழியர்களானாலும் சரி, புதிதாக ஐ.டி. வேலையைத் தேடுபவர்களும் சரி ஐந்து விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் ஐ.டி. நிறுவனங்களில் தாக்குப்பிடிப்பது கடினமாகிவிடும்.
    1990 களில் புற்றீசல் போல புறப்பட்டு, படிப்படியாக வளர்ச்சியடைந்து பிரமிப்பூட்டும் வகையில் நிமிர்ந்து நின்ற ஐ.டி. துறை சமீப காலமாக சரிவைச் சந்தித்து வருகிறது. இந்தச் சரிவு பெரும் பின்னடைவாகி ஐ.டி. நிறுவனங்களை முழுமையாய் அழித்து விடுமோ எனும் அச்சம் மாணவர்களிடையேயும், ஐ.டி. ஊழியர்களிடையேயும் நிலவு கிறது. ஐ.டி. ஊழியர்களை கொத்து கொத்தாக வெளியேற்றும் செய்திகள் அடிக்கடி எதிரொலித்தப்படியே இருக்கின்றன.

    அதற்கு காரணம் ‘ஆட்டோமேஷன்’ தொழில்நுட்பம் தான். பத்து பேர் தேவைப்பட்ட வேலைக்கு, ஆட்டோ மேஷன் நுட்பம் தெரிந்த ஒன்றோ... இரண்டோ... நபர்கள் போதும் என்பதே நிலைமை..! ‘கடினமாய் வேலை செய்யுங்கள்’ எனும் தாரக மந்திரத்திலிருந்து, ‘ஸ்மார்ட்டாக வேலை செய்யுங்கள்’ எனும் ஒரு புதிய மந்திரத்தினூடாக ஐ.டி. பயணிக்கிறது. இந்த சவாலான சூழலில் ஐ.டி. நிறுவனங்களில் பணி புரிகின்ற ஊழியர்களானாலும் சரி, புதிதாக ஐ.டி. வேலையைத் தேடி வரும் இளைஞர்களானாலும் சரி ஐந்து விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் ஐ.டி. நிறுவனங்களில் தாக்குப்பிடிப்பது கடினமாகிவிடும். அவை...

    1. நவீன நுட்பங்களில் பரிச்சயம் :

    ‘ஒன்றை செய், அதை நன்றே செய்’ எனும் கூற்று ஐ.டி. துறையில் கொஞ்சம் கொஞ்சமாய் விலகி வருகிறது. தெரிந்து வைத் திருக்கும் ஒரு விஷயம் சட்டென காலாவதியாகி விட, அதை மட்டுமே தெரிந்த நபர் செய்வதறியாது திகைக்க வேண்டிய சூழல் உருவாகிறது. ‘பன்முகத் தன்மை’ இன்றைய மிக முக்கியமான தேவை. நவீன தொழில் நுட்பங்களான டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேஷன், இன்டர்நெட் ஆப் திங்க்ஸ், பிக் டேட்டா, ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ், ரோபோட்டிக்ஸ், ஆகுமென்டர் ரியாலிடி, மொபிலிடி போன்றவற்றில் குறைந்த அளவு பரிச்சயமேனும் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது அவசியம். கூடவே நவீன தொழில் நுட்பங்கள் சிலவற்றையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    புதிதாக வேலை தேடுபவர்கள் இத்தகைய நுட்பங்களில் சான்றிதழ் பெறுவது அவசியம். ஏற்கனவே பணியில் இருப்பவர்கள் தங்களுடைய திறமையை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டியது மிக அவசியம்.

    2. சூழலுக்கு ஏற்ப பணியாற்றும் தன்மை :

    ஐ.டி. துறையின் சவாலான பயணத்தில், ‘ப்ளக்ஸிபிளிட்டி’ மிகவும் அவசியம். அதாவது ரொம்ப பிடிவாதமாக இருக்காமல், நிறுவனத்தின் தேவைக்கு ஏற்ப தங்களுடைய விருப்பு வெறுப்புகளை மாற்றிக்கொள்ளும் குணாதிசயம் இருக்க வேண்டும்.

    உதாரணமாக காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தான் வேலை செய்வேன். இந்த குறிப்பிட்ட வேலையை மட்டும் தான் செய்வேன். இந்த இடத்திலிருந்து மட்டும் தான் செய்வேன். என்னுடைய வேலையை மட்டும் தான் செய்வேன், அதை எனக்குப் பிடித்த வகையில் தான் செய்வேன்.. போன்ற பிடிவாதங்கள் உடையவர்கள் நிறுவனங்களில் நிலைக்க முடியாது. கொடுக்கப்படும் வேலை சிறிதோ, பெரிதோ அதில் மன ஈடுபாட்டோடு முழுமையாக கவனத்தை பதித்து வேலை செய்யும் ஊழியர்களையே நிறுவனங்கள் இப்போது எதிர்பார்க்கின்றன.



    3. நல்ல குணாதிசயம் :

    ஐ.டி. நிறுவனங்களின் பார்வை மாறிவிட்டது. ‘கலைஞனுக்கு கர்வம் இருக்கும்’ என்று கலை உலகில் சொல்வது போல, ‘டெக்னி கலில் ஸ்ட்ராங்’ ஆக இருக்கும் ஊழியனுக்கு கர்வம் இருக்கும் என தொழில்நுட்ப உலகில் சொல்வார்கள். அத்தகைய மனநிலை இனிமேல் செல்லுபடியாகாது. தொழில்நுட்பங்களே சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறி வருவதால், அறிவு ஜீவிகளை விட நல்ல குணாதிசயம் உடையவர்களையே நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

    இன்றைக்கு தொழில்நுட்ப தீர்வுகள் இணையத்திலேயே கிடைக்கின்றன. கேள்விகளுக்கான விடைகளை இணையமே தேடி எடுத்துத் தரும். நல்ல குணாதிசயங்களை இணையம் மூலம் பெற்றுக் கொள்ள முடியாது. எனவே தான் இன்றைய தேவை நல்ல தொழில்நுட்ப பரிச்சயம் என்பதோடு கூடவே நல்ல குணாதிசயம் எனும் நிலையையும் எட்டியிருக்கிறது.

    ‘இவனுக்கு விஷயம் தெரியும், ஆனால் ஆள் சரியில்லை’, ‘இவனுக்கு விஷயம் தெரியாது, ஆனால் கற்றுக்கொள்வான்’ என இரண்டு விதமான கருத்துக்கள் எழுந்தால், இரண்டாவது நபரையே நிறுவனங்கள் தக்க வைத்துக் கொள்ளும் என்பதே எதார்த்தம்.

    4. மென் திறமைகள் :

    இரண்டில் ஒன்றை தேர்வு செய்யச் சொன்னால் எதைத் தேர்ந்தெடுப்பது? தொழில்நுட்ப ரீதியாக வலிமையான இருவர் இருந்தால் அவரில் ஒருவரை எப்படிப் பிரித்தெடுப்பது? அத்தகைய சூழல்களில் உதவிக்கு வருவது மென் திறமைகள். நல்ல உரையாடல் திறன், எழுத்துத் திறன், பேரம் பேசும் திறன் போன்றவையெல்லாம் இருந்தால் அந்த நபருக்கு அதிக மரியாதை கிடைக் கிறது.

    எனவே வேலையில் இருப்பவர்களானாலும் சரி, வேலைக்கு முயற்சி செய்பவர்கள் ஆனாலும் சரி மென் திறமைகளை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். அது தான் நிறுவனங்களில் ஒரு ஊழியர் இணக்கமாக இருக்க உதவி செய்யும்.

    5. இன்னோவேஷன் திறமை :

    அதாவது புதிது புதிதாக எதையாவது கண்டு பிடிப்பது. அல்லது புதிய ஐடியாக்களை வழங்குவது. வழக்கமாய் செய்து கொண்டிருக்கின்ற செயலை எப்படிச் செய்தால் அதிக லாபம் கிடைக்கும்?, வழக்கமாய் செய்யும் வேலைகளை விரைவாக செய்வது எப்படி?, வழக்கமான பணிகளை அதிக தரத்தில் செய்வது எப்படி? இந்த மூன்று நிலைகளில் புதிய புதிய ஐடியா சொல்பவர்களுக்கு நிறுவனத்தில் எப் போதுமே உயர்ந்த இடமும், மரியாதையும் கிடைக்கும்.

    ‘அவுட் ஆப் பாக்ஸ் திங்கிங்’ எனப்படும், யாரும் யோசிக்காத ஒரு கோணத்தில் யோசிக்கும் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்களுடைய இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளவும், சவாலான சூழலிலும் உயர்வை எட்டவும் உதவும்.

    வாழ்க்கை பூக்களின் பாதை மட்டுமல்ல, அது முட்களின் பாதையும் கூட. பூக்களில் நடக்கும் போது போதையடையாமலும், முட்களில் நடக்கும் போது சோர்வு அடையாமலும் இருந்தால் வாழ்க்கை இனிமையாகும். லட்சியம் கை வசமாகும். எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை இதயத்தில் கொண்டால் தோல்விகளின் முடிவில் வெற்றிகள் தொடங்கும்.
    Next Story
    ×