search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    புதிய சமுதாயத்தை உருவாக்க பெண் கல்வி அவசியம்
    X

    புதிய சமுதாயத்தை உருவாக்க பெண் கல்வி அவசியம்

    பெண் கல்வியால் நாடு வளர்ச்சி அடைவதோடு அனைத்து துறைகளிலும் பெண்கள் கோலோச்ச ஊன்றுகோலாக அமையும் என்பதே மறுக்கமுடியாத உண்மை.
    பெண்ணை அன்னை பராசக்தியின் வடிவமாக கொண்டு வணங்கி வாழ்த்தி பெண்மைக்கு பெருமை சேர்த்த நாடு நம்நாடு. பெண்ணாய் பிறத்தல் பாவம் என்று எண்ணிய காலத்தில் பெண்ணாய் பிறந்தால் பெருமை என்று பெண் பிறப்பினை பெருமையாக புகழ்ந்தனர் நம் முன்னோர்கள்.

    நாம் பிறந்த நாட்டினை தாய்நாடு என்றும், தாயகம் என்றும் பெருமையோடு போற்றியவர்கள் தமிழர்கள். கண்ணகி, வாசுகி போன்ற கற்புக்கரசிகளையும், ஆதிமந்தியார், மாதவி போன்ற கலைமணிகளையும், மங்கையர்கரசி பூசைத்தாயார், காரைக்கால் அம்மையார் போன்ற அருள்நெறி செல்வியர்களையும், மணிமேகலை, கருப்பாயி நாச்சியார் போன்று நாளும் அறம் வளர்த்த பெண்களும், ஒப்புவயர்வற்ற வீரப்பெண்மணி களையும் ஈன்றெடுத்துப் பெரும் புகழ் பெற்றது நம் நாடு.

    ஆண்டவன் படைப்பில் அரியது ஒன்று உண்டு என்றால் அது பெண் இனம் என்றார் மகாத்மா காந்தியடிகள். அடக்கம், பொறுமை, தியாகம், பிறர்நலம், இரக்கம், அழகு, ஒப்புரவு, தொண்டு முதலியன அமைந்த ஒன்றே பெண்மையாகும். பெண்கள் மகளாகத் தோன்றினார்கள், மனைவியாக வாழ்ந்தார்கள், தாயாக தொண்டு செய்தார்கள், தெய்வமாக காட்சியளிக்கிறார்கள். பெண்மை என்பது தோல் போர்த்திய உடல் மட்டும் அன்று. அவ்வுடலினுள்ளே உள்ள நுண்மை, இறைமை, பெண்மையை உணர வேண்டும். அத்தகைய பெண்மை வாழ்க எனத் திரு.வி.க பெண்மையின் சிறப்புகளைப் போற்றுவார்.



    ஒர் ஆணுக்கு கல்வி அளிப்பது குடும்பத்தில் ஒருவருக்கு கல்வி அளிப்பதாகும். அதுவே ஒரு பெண்ணுக்கு கல்வி அளிப்பது என்பது அக்குடும்பத்திற்கே கல்வி அளிப்பது போலாகும் என்றார் நேரு குடித்தனம் பேணுவதற்கும், மக்களை பேணுவதற்கும், உலகினை பாதுகாப்பதற்கும் பெண் கல்வி வேண்டும் என்று வலியுறுத்துவார் பாரதிதாசனார்.

    அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்ற நிலைமை மாறி பெண்களுக்கு கல்வி வேண்டும் என்ற நிலைமை வந்தால் தான் புதிய சமுதாயத்தை உருவாக்க முடியும். நல்லறிவு உடைய மக்களை உண்டாக்க பெண் கல்வி முக்கியம் ஆகும். ஆனால் பெண்கள் கல்விக்கு பல தடைகள் சமுதாயத்தில் உள்ளன. பெண் கல்வியை பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படவில்லை.

    பெண்களுக்கு கல்வி தேவை இல்லை என்னும் மூடநம்பிக்கை ஏழை பெற்றோர்களிடம் பெருகியுள்ளது. கல்வியில் பெண்களை கவரத்தக்க பாடத்திட்டங்கள் இல்லை. கற்பித்தல் முறைகளும் சுவையாக அமையவில்லை. வாழ்க்கைக் கல்வி பெண்களுக்கு வழங்கப்படவில்லை. பெண் கல்விக்கு மற்றொரு தடையாக திகழ்வது பெண்களின் குழந்தை திருமணம் ஆகும். பெண்களுக்கு கல்வி அறிவு வேண்டியதில்லை என்ற எண்ணம் மாற்றப்பட வேண்டும்.

    இந்திய நாடு விடுதலை பெற்றதும் பல்வேறு கல்வி குழுக்கள் பெண்களுக்காக அமைக்கப்பட்டன. மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களை பெண் கல்விக்காக தீட்டி செயல்படுத்தி வருகின்றன. இதனால் பள்ளிகளில் மாணவிகளின் சேர்க்கை அதிகமானது. பல ஐந்தாண்டு திட்டங்களை செயல்படுத்திய பின்னர், இன்று எழுத்தறிவு பெற்ற பெண்கள் எண்ணிக்கை ஆயிரத்திற்கு 394 என உயர்ந்துள்ளது.

    பெண் கல்வியால் நாடு வளர்ச்சி அடைவதோடு அனைத்து துறைகளிலும் பெண்கள் கோலோச்ச ஊன்றுகோலாக அமையும் என்பதே மறுக்கமுடியாத உண்மை. எனவே பெண்களை போற்றுவோம், பெண்களை மதிப்போம், பெண்ணியத்தை காப்போம், பெண் கல்வியை உயர்த்துவோம்.
    Next Story
    ×