search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உங்கள் மகள் காதல்வசப்பட்டிருந்தால் என்ன செய்வீர்கள்?
    X

    உங்கள் மகள் காதல்வசப்பட்டிருந்தால் என்ன செய்வீர்கள்?

    ‘டீன்ஏஜ்’ பெண்கள் காதல்வசப்படுவது அதிகரித்து வருகிறது. உங்கள் மகள் காதல்வசப்பட என்ன காரணம் என்பதையும், மகள் காதல்வசப்பட்டிருந்தால் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.
    ‘டீன்ஏஜ்’ பெண்கள் காதல்வசப்படுவது அதிகரித்து வருகிறது. உங்கள் மகள் காதல்வசப்பட என்ன காரணம் என்பதையும், மகள் காதல்வசப்பட்டிருந்தால் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ளலாமா?

    மனிதனோடு தோன்றிவிட்டது காதலும். காதல் இல்லாத மனிதர்கள் இல்லை. மூளையில் ஏற்படும் சில ரசாயன மாற்றங்களே காதல் என்ற உணர்வை மனிதர்களிடம் உருவாக்குகிறது. உணர்வு ரீதியான அன்பும், அனுசரணையும், பாதுகாப்பும், நம்பிக்கையும் ஒவ்வொருவருக்கும் தேவைபடுகிறது. அவைகளுக்கு சிறுவயதில் இருந்தே மனிதர்கள் அடிமை யாகிவிடுகிறார்கள். ‘அன்புக்கு நான் அடிமை’ என்ற வார்த்தை அதனால்தான் உருவானது.

    நீங்கள் ஒரு தாய் என்றால் அன்பு, அனுசரணை, பாதுகாப்பு அனைத்தையும் உணர்வுரீதியாக சிறுவயதில் இருந்தே உங்கள் மகளுக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். மகளும், உங்கள் அன்பிற்குள் சிக்குண்டு கிடப்பாள். குழந்தை வளர்ந்து பெரியவள் ஆகிவிட்டாலும் அன்பும், அனுசரணையும் பருவத்திற்கு ஏற்றபடி அவளுக்கு கிடைத்துக்கொண்டிருக்கவேண்டும். ஆனால் பெரும்பாலும் கிடைப்பதில்லை. கிடைக்காதபோது அவள் அதனை வெளியே தேட தொடங்கிவிடுகிறாள். அந்த தேடலில் உருவாகும் நட்பே, எதிர்பால் ஈர்ப்பு மூலம் காதலாக வலுப்பெறுகிறது. சிறுவயதில் கிடைத்தது போன்ற அன்பும், பாசமும் யாருக்கெல்லாம் அவர்களது வீட்டிலே டீன்ஏஜிலும் கிடைக்கிறதோ அவர்களெல்லாம் பெரும்பாலும் காதல் வலையில் விழுவதில்லை.

    பருவமடைந்து விட்டதும் ஒவ்வொரு பெண்ணும் ‘தானும் பெரிய மனுஷிதான்’ என்று தனித்துவம் பெற விரும்புகிறாள். உடல்ரீதியாகவும் அந்த தனித்துவத்தை தக்கவைக்க விரும்புவாள். அப்போது தன் மகளிடம் என்ன மாற்றங்கள் ஏற்படு கிறதோ, அதற்கு தக்கபடி பெற்றோர் மாறி அவளை நேசிக்க வேண்டும். நேசித்தால், அவர்களது உணர்வுக்கு தகுந்த மதிப்பு உள்ளேயே (வீட்டிலேயே) கிடைக்கும். வெளியே தேடமாட்டார்கள். எளிதாக காதல் வலையில் விழமாட்டார்கள். எல்லாவற்றையும் தாயாரிடம் மனம்திறந்து பேசவும் தயாராக இருப்பார்கள்.

    மகள் காதலில் விழுந்திருப்பதாக தெரிந்துவிட்டால் உடனே நொறுங்கிப்போகாதீர்கள். அவளை குற்றவாளியாக்கி, தனிமைப்படுத்தி தண்டிக்க முயற்சிக்காதீர்கள். ‘சரி.. இந்த வயதில் எல்லோருக்கும் வருவதுதான். உனக்கும் வந்திருக்கிறது’ என்று முதலில் அமைதிப்படுத்தி, உட்காரவைத்து பொறுமையாக பேசுங்கள். நிதானத்தையும், நம்பிக்கையையும் கொடுங்கள்.

    ‘உனது அம்மாவாகிய நான் உன்னை நம்புகிறேன். உன்னை புரிந்துகொள்கிறேன். உனக்கு எதிராக எந்த முடிவும் எடுக்கமாட்டேன். அதே நேரத்தில் நான் சில உண்மைகளை உனக்கு புரியவைக்க வேண்டும். அதை நீ அமைதியாக கவனி’ என்று கூறி, அவளுக்கு ஏற்பட்டிருப்பது காதல் அல்ல, இனக்கவர்ச்சி என்பதை உணர்த்துங்கள். படிக்கிற பருவத்தில் படித்தால்தான், சரியான வேலையில் சேர்ந்து, காதலை உன்னால் கொண்டாட முடியும். இல்லாவிட்டால் திண்டாட வேண்டியிருக்கும் என்பதை எடுத்துரையுங்கள். ஆத்திரம், அவசரம் இல்லாமல் பக்குவமாக இதை எடுத்துரைக்கவேண்டும்.



    மகளின் காதல் உங்கள் கவனத்திற்கு வந்ததும், எடுத்த யெடுப்பிலே அவளது காதலை எதிர்த்தால் அவள் உங்களை எதிரியாக நினைப்பாள். அதனால் வீட்டைவிட்டு வெளியேற முயற்சிக்கலாம். அதனால் அமைதிப்படுத்தி சிந்திக்கவைத்து, ‘உனக்கு எதிரான முடிவுகளை எடுக்கப்போவதில்லை’ என்று நம்பிக்கை கொடுங்கள். காதலை பற்றி யோசித்து முடிவெடுக்க தேவையான கால இடைவெளியையும் கொடுங்கள். கால இடைவெளியில் பலர் உண்மையை உணர்ந்து காதலை கைவிட்டிருக்கிறார்கள். காதலர் தவறானவர் என்பதை புரிந்துகொண்டு, பெற்றோர் பக்கம் சாய்ந்திருக்கிறார்கள். அதனால் நிஜத்தை புரியவைக்க எல்லா மாதிரியான முயற்சிகளையும் எடுங்கள்.

    காதல் வேறு, காமம் வேறு என்பதை மகளுக்கு புரிய வையுங்கள். காதல் என்ற பெயரில் காமத்தில் விழுந்துவிடக் கூடாது என்பதில் உறுதிகாட்டச்சொல்லுங்கள். ‘அவன் விரல் நுனிகூட என் மீது படவில்லை’ என்பது போல் பொய் சொல்ல இப்போது எந்த காதலர்களும் தயாரில்லை. காதல் இப்போது காமம் கலந்த கலப்படமாக தான் இருக்கிறது. அவர்களை சுற்றி நடக்கும் சம்பவங் களும், காட்சிகளும் அதற்கு காரணமாக இருக்கின்றன. காதலில் காமம் கலந்த பின்பு கண்டறிந்து கஷ்டப் படுவதைவிட அந்த நிலைக்கு பிள்ளைகள் செல்லாத அளவுக்கு விழிப்புணர்வை ஊட்டுவதுதான் தாயின் பணியாக இருக்கவேண்டும். மகள் காதலில் விழுந்துவிட்டால் இலைமறைவு காயாக அல்ல, அப்பட்டமாகவே எல்லா உண்மைகளையும் பேசுங்கள்.

    உங்கள் மகள் 6-ம் வகுப்புக்கு செல்லும்போதே அவளுக்கு உடல்ரீதியான வளர்ச்சியையும், மாற்றங் களையும் எடுத்துக்கூறி புரியவையுங்கள். 15 வயதில் மனந்திறந்து தாய், மகளிடம் எல்லா விஷயங்களையும் பேசவேண்டும். இன்றைய காதல் பற்றியும், அதில் செக்ஸ் கலப்பதால் ஏற்படும் விபரீதங்கள் பற்றியும் பள்ளிப்பருவம் முடியும் முன்பே புரியவைத்திடவேண்டும். சுற்றி நடக்கும் சம்பவங்களை உதாரணமாக வைத்து பல்வேறு உடலியல் சார்ந்த உண்மைகளை உணர்த்திடவேண்டும். பெண்களின் உடல் புனிதமானது. அதில் ஆளுமை செலுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை என்பது சொல்லிக்கொடுக்கப்படவேண்டும்.

    டீன்ஏஜில் உங்கள் மகளிடம் நிறைய மாற்றங்கள் ஏற்படும். அந்த மாற்றங்களை உற்சாகமாக வரவேற்றிடுங்கள். அதிக நேரம் மகள் ‘மேக்அப்’ செய்யும் போதும், கூடுதல் நேரம் கண்ணாடி முன்பு நின்று ‘ஹேர் ஸ்டைல்’ செய்யும்போதும் குறைசொல்வதுதான் பெரும்பாலான தாய்மார்களின் செயல்பாடாக இருக்கிறது. தவழ்ந்த குழந்தை, எழுந்து நின்றபோது எவ்வளவு மகிழ்ச்சியடைந்தீர்களோ அதுபோல், கண்ணாடி முன்பு நின்று அதிக நேரம் அலங்காரம் செய்வதையும் மகிழ்ச்சியோடு ஏற்று வளர்ச்சியாக பாருங்கள்.

    அந்த அலங்காரத்தை மேலும் சிறப்பாக்க என்ன வழி என்று சொல்லிக்கொடுங்கள். அப்படி செய்தால் தன்னை ரசிக்கவேண்டியவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள் என்று உங்கள் மகள் தெரிந்துகொள்வாள். தன்னை ரசித்து, பாராட்ட வெளி ஆட்கள் தேவை இல்லை என்ற எண்ணம் உருவாகிவிடும். வெளியே தன்னிடம் பேச, தன்னை ரசிக்க, தன்னை பாராட்ட எதிர்பாலினர் கிடைப்பார்களா என்ற தேடுதலே காதலின் தொடக்கமாக அமைந்துவிடுகிறது.

    டீன்ஏஜ் காதல் கவலைக்கும், கலவரத்திற்கும் உரியதல்ல! கவனிக்கத்தகுந்தது. சரியான முறையில் அணுகினால் அதில் இருந்து உங்கள் மகளை எளிதாக மீட்டுக்கொண்டுவந்து விடலாம்.
    Next Story
    ×