search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களுக்கு எதிராக தொடரும் வன்முறை
    X

    பெண்களுக்கு எதிராக தொடரும் வன்முறை

    ஒரு பெண், தனது குடும்பத்தில் உள்ள மிக நெருக்கமான மற்றும் தெரிந்தவர்களால் தான் அதிக அளவு வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறாள்.
    உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஒரு பெண், தனது குடும்பத்தில் உள்ள மிக நெருக்கமான மற்றும் தெரிந்தவர்களால் தான் அதிக அளவு வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறாள். தாம் கொடுமைக்கு ஆளாகிறோம் என்பதை அறிந்திருந்தும், அதை எதிர்த்துக் குரல் எழுப்ப முடியாதவர்களாய் பெண்கள் இருக்கிறார்கள்.

    பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பாக ஐ.நா. மற்றும் உலக உணவு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, 1000 பேரைக் கொண்ட ஒரு கிராமத்தில், 500 பேர் பெண்களாக இருக்கின்றனர். 510 பெண்கள் பிறந்திருக்க வேண்டிய இடத்தில் 500 பெண்கள் இருக்கின்றனர்.

    மீதமுள்ள 10 பேர், பெண் குழந்தை என்ற காரணத்தால் தாயின் வயிற்றிலேயே அழிக்கப்பட்டிருக்கின்றனர். 500 பெண்களில் 30 பெண்கள் ஆசியாவைச் சேர்ந்தவர்கள். 167 பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஏதோவொரு வகையான வன்முறையைச் சந்தித்தவர்களாக இருக்கின்றார்கள். 100 பேர் தமது வாழ்நாளின் ஏதோவொரு கட்டத்தில் பாலியல் வன்முறைகளை எதிர்கொண்டவர்களாக இருப்பார்கள்.

    மூன்று பெண்களில் ஒருவர், தான் நன்கு அறிந்தவர்கள், மிக நெருக்கமானவர்களால் அடித்துத் துன்புறுத்தப்பட்டோ அல்லது கட்டாயப் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படுகிறாள். கொலை செய்யப்படும் பெண்களில் 70 சதவீதத்தினர் கணவனாலேயே கொல்லப்படுகிறார்கள். இந்தக் கொடுமை கென்யாவில் அதிகம். அங்கு ஒவ்வொரு நாளும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் அவர்களின் கணவர்களால் கொல்லப்படுகிறார்கள்.



    எகிப்தில் திருமணமான பெண்களில் 35 சதவீதத்தினர் ஏதோவொரு கட்டத்தில் கணவனால் அடித்துத் துன்புறுத்தப்படுகின்றனர். அமெரிக்காவில் ஒவ்வொரு 12 வினாடிக்கும் ஒரு பெண் தனது கணவனால் அல்லது காதலனால் அடித்துத் துன்புறுத்தப்படுகிறாள்.

    பாகிஸ்தானில் 42 சதவீத பெண்கள் குடும்பத்தில் தம்மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளைத் தமது தலைவிதி என ஏற்றுக்கொள்கின்றனர். ரஷியாவில் தினமும் சுமார் 36,000 பெண்கள் கணவரால் வன்முறைக்கு உள்ளாகின்றனர். ஸ்பெயினில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி, 5 நாட்களுக்கு ஒருமுறை ஒரு பெண் தனது கணவனால் கொல்லப்படுகின்றாள்.

    ஒரு பெண்ணை கற்பழிப்பதே, பாலியல் வன்முறையின் உச்சக்கட்டமாகக் கருதப்படுகின்றது. தாம் கற்பழிப்புக்கு உட்படுத்தப்பட்டு விட்டோம் என்பது வெளியே தெரியவந்தால், சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டு விடுவோம் என்ற பயத்தில், தமக்கு நேர்ந்த அவலத்தை பல பெண்கள் வெளியே சொல்வதில்லை.

    அமெரிக்காவில் 20 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள். பிரான்சில் ஒவ்வொரு வருடமும் 25,000 பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர். தொடரும் இந்த வன்முறைகளுக்கு முடிவு கட்டுவது அறிவார்ந்த சமுதாயத்தின் கடமையாகும்.
    Next Story
    ×