search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வீட்டுமனை பாதுகாப்பில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்
    X

    வீட்டுமனை பாதுகாப்பில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்

    வாங்கிய வீட்டு மனை நமது பெயரில் இருந்தாலும், தற்போது குடியிருக்கும் வீட்டுக்கு தொலைவில் இருக்கும்பட்சத்தில் வீட்டு மனை பாதுகாப்பில் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும்.
    புறநகர் பகுதியில் ஒரு வீட்டுமனையை வாங்க நடுத்தர குடும்பங்களில் பல்வேறு ஆலோசனைகள், சிக்கல்கள் மற்றும் பொருளாதார முடிவுகள் ஆகிய தடைகளை கடந்த பிறகு வீட்டு மனை வாங்கப்படும். அதன் பிறகு, பத்திரப்பதிவு சம்பந்தப்பட்ட விஷயங்களை முடித்துவிட்டு, மீண்டும் அன்றாட வாழ்க்கையில் ‘பிசியாகி’ விடுவது பலருக்கும் வழக்கம்.

    வாங்கிய வீட்டு மனை நமது பெயரில் இருந்தாலும், தற்போது குடியிருக்கும் வீட்டுக்கு தொலைவில் இருக்கும்பட்சத்தில் வீட்டு மனை பாதுகாப்பில் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் என்று ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் வலியுறுத்துகிறார்கள். அத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பற்றி காணலாம்.

    கட்டுமான வேலை :

    முதலீட்டு அடிப்படையில் நிலத்தை வாங்காமல் சொந்தமாக வீடு கட்டவேண்டும் என்ற எண்ணத்துடன்தான் பலரும் செயல்படுகிறார்கள். இருப்பினும், வீடு கட்டும் வேலையை பத்திரப்பதிவு முடிந்தவுடன் உடனே தொடங்கிவிட இயலாது. பல்வேறு விதமான அடிப்படை தேவைகளை முடித்த பிறகு, காலியிடத்தில் வீடு கட்டும் பணிகளை தொடங்க 3 மாதத்திலிருந்து 6 மாத கால அவகாசம் தேவைப்படலாம். அந்த இடைப்பட்ட காலகட்டத்தில்கூட மனை பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று ரியல் எஸ்டேட் நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.

    பட்டா மாறுதல் :


    கட்டுமான பணிகளை தொடங்குவதற்கு முன்னர் முதலில் கவனிக்க வேண்டியது சம்பந்தப்பட்ட இடத்திற்குரிய பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதுதான். பெரும்பாலும் பத்திரப்பதிவு முடிந்தவுடன், ஓரிரு வாரங்களுக்குள் நமது பெயருக்கு மாற்றப்பட்ட பத்திரப்பதிவு ஆவணங்கள் கையில் கிடைத்துவிடும். ஆவணங்களை பெற்றவுடன் சம்பந்தப்பட்ட மனை அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலரை அணுகி பட்டா மாறுதலுக்காக ஆவண செய்து கொள்ளவேண்டும்.

    ஆதாரங்கள் :

    வாங்கப்பட்ட வீட்டு மனையின் பழைய ஆவணங்கள், மனை நமக்கு சொந்தம் என்பதற்கு ஆதாரமாக உள்ள தற்போது பதிவு செய்யப்பட்ட பத்திரத்தின் நகல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பட்டா பெயர் மாற்ற விண்ணப்பம் செய்து, அதற்கான ரசீதும் பெற்றுக்கொள்ள வேண்டும். மனையை, கிராம நிர்வாக அலுவலர் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மூலம் பெயர் மாற்றம் செய்யப்பட்ட புதிய பட்டாவானது அலுவலக நடைமுறைகளுக்குட்பட்டு வழங்கப்படும்.



    பாதுகாப்பு :

    வாங்கப்பட்ட வீட்டு மனையின் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பட்டா கைக்கு கிடைத்ததும் சில நடவடிக்கைகளை அவசியம் செய்தாக வேண்டும். மனை வாங்கும் சமயங்களில் கவனமாக இருப்பது போல, மனை வாங்கிய பின்னரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும். காரணம் ஏதாவது ஆக்கிரமிப்பு சிக்கல்கள் ஏற்படும்பட்சத்தில் சிரமம் நமக்குத்தான் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

    கம்பி வேலி :

    மனை பாதுகாப்பில் உடனடியாக செய்ய வேண்டியது கம்பி வேலி அமைப்பதுதான். இடத்தின் நான்கு எல்லைகளை கச்சிதமாக கவனித்து கம்பி வேலி அல்லது காம்பவுண்டு சுவர் அமைப்பது பாதுகாப்பானது. ஆனால், ஓரிரு வாரங்களில் வீடு கட்ட திட்டமிட்டு இருப்பவர்கள் கம்பி வேலிக்கு பதிலாக மூன்று புறமும் சுற்றுச்சுவர் கட்டி விடலாம். ஒரு புறம் உள்ள திறப்பின் வழியாக சென்று கட்டுமான வேலைகளை செய்யலாம்.

    கார்னர் கட்டமைப்பு:

    வீட்டுமனையை வாங்கியவுடன் இடத்தின் நான்கு எல்லைகளை கண்டறிந்து அவற்றின் மூலைகளில் ஆங்கில ‘எல்’ எழுத்து வடிவத்தில் இரண்டடி ஆழத்தில் செங்கல் அல்லது ‘ஹாலோ பிளாக்’ மூலமாக இரண்டடி உயர சுவர் எழுப்பிவிடலாம். மேலும் அந்த சுவரில் மனை நம்மால் வாங்கப்பட்ட விபரங்களை தெளிவாக ‘பெயிண்டு’ மூலமாக எழுதப்பட வேண்டும். இதன்மூலம் சம்பந்தப்படாத நபர்கள் அங்கு நுழைய முடியாது. அப்படி நுழைந்தால் அது சட்டப்படி குற்றமாகும். இந்த முறையானது தற்போது அனைவராலும் பின்பற்றப்படுகிறது என்பது கவனத்திற்குரியது.

    அருகில் இருப்பவர்கள் :

    நேரம் கிடைக்கும்போது மனையை நேரில் சென்று பார்த்துவிட்டு வருவதும், மனைக்கு அக்கம்பக்கம் இருப்பவர்கள் வீடு கட்டி வசித்து வந்தால், அவர்களுடன் நல்ல உறவை வைத்துக் கொள்வதும் மனையின் பாதுகாப்புக்கு உபரி வழிகளாக கொள்ளலாம்.
    Next Story
    ×