search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உணவு விடுதிகளில் கடைப்பிடிக்க வேண்டிய பண்புகள்
    X

    உணவு விடுதிகளில் கடைப்பிடிக்க வேண்டிய பண்புகள்

    நட்சத்திர அந்தஸ்து கொண்ட உணவு விடுதிகளில் அல்லது சர்வதேச தரம் மிக்க உணவு விடுதிகளில் சாப்பிடும் போது சில பண்புகளை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.
    நட்சத்திர அந்தஸ்து கொண்ட உணவு விடுதிகளில் அல்லது சர்வதேச தரம் மிக்க உணவு விடுதிகளில் சாப்பிடும் போது சில பண்புகளை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். அதுபோல சில உயர்தர விருந்து நிகழ்ச்சிகளிலும் அவை அவசியம். அந்த பண்புகள் எவை என்பது குறித்து இங்கே காண்போம்.

    விருந்து நிகழ்ச்சிக்கு செல்வது என்றால் அழகாக, சுத்தமாக உடை அணிந்து செல்ல வேண்டும். சில நிகழ்ச்சிகளில் எந்த மாதிரியான உடை அணிந்து வரவேண்டும் என்று குறிப்பு இருக்கும். உதாரணமாக சில விருந்து நிகழ்ச்சிகளுக்கு கோட்-சூட் அணிந்து செல்ல வேண்டும் என்பது அவசியம். எனவே விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்ப உடை அணிந்து செல்லவேண்டும். குறிப்பாக பாரம்பரிய அல்லது மேற்கத்திய நாகரிக உடைகள் அணிந்து செல்ல வேண்டும். லுங்கி, ஜீன்ஸ் பேண்ட்-டீ ஷர்ட் போன்ற உடைகளை தவிர்ப்பது அவசியம். அதுபோல காலணிகள் விஷயத்திலும் கவனம் அவசியம். சில நிகழ்ச்சிகளுக்கு சாதாரண செருப்பு அணிந்து செல்லக்கூடாது, ஷூ அணிவது அவசியம்.

    விருந்து நடக்கும் இடம் அல்லது உணவு விடுதிக்குள் நுழைந்ததும் நேராக உள்ளே சென்று காலியாக இருக்கும் இடத்தில் அமரக்கூடாது. விருந்து நிகழ்ச்சிக்கு அழைத்தவர் அல்லது உணவு விடுதி பணியாளர் உங்களிடம் வந்து உங்களை அழைத்துக்கொண்டு செல்லும் வரை காத்திருங்கள்.

    நட்சத்திர உணவு விடுதிகளில் மேஜையில் நாப்கின் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சிறிய துண்டு மடித்து வைக்கப்பட்டிருக்கும். இதை கழுத்தைச்சுற்றி கட்டிக்கொள்ளக்கூடாது. குழந்தைகள் சாப்பிடும் போது தான் இப்படி அவர்களது கழுத்தில் அதை சுற்றிக்கட்டிக்கொள்ள வேண்டும். பெரியவர்கள் அந்த துணியை தங்களது மடியில் விரித்து வைத்துக்கொள்ள வேண்டும். நாம் சாப்பிடும் போது உணவு சிதறினால், சிந்தினால் அது நமது மடியில் விழுந்து உடையை பாதிக்காமல் இருக்கவே மடி மீது நாப்கின் விரிக்க வேண்டும்.

    விருந்து கொடுப்பவர் தான் உணவு வகைகளை ‘ஆர்டர்’ செய்ய வேண்டும். அதற்கு முன்பு அவர் ஒவ்வொருவருக்கும் பிடித்தமான உணவு வகைகள் எவை என்று கேட்பார்.

    தண்ணீர் மற்றும் குளிர்பானங்களை கொஞ்சம் கொஞ்சமாக பருக வேண்டும். ஒரே மூச்சில் அவற்றை குடிக்க கூடாது. அதே நேரத்தில் காரமாக சாப்பிட்டு விட்டாலோ, உணவு தொண்டைக்குள் சிக்கி விக்கல் எடுத்தாலோ அதிகமாக தண்ணீர், குளிர்பானங்கள் பருகலாம்.

    குளிர்பானங்கள் பரிமாறும் போது அவை ஊற்றப்பட்டுள்ள டம்ளரில் பழங்களை சொருகி வைத்திருப்பதுண்டு. மேலும் அந்த பழச்சாறை கலக்க குச்சி அல்லது கரண்டி இருக்கும். இதுபோன்ற நிலையில் முதலில் டம்ளரில் சொருகப்பட்டுள்ள பழத்தை சாப்பிட வேண்டும். பின்னர் குச்சி அல்லது கரண்டி கொண்டு பழச்சாறு கலவையை கலக்க வேண்டும். அடுத்த அந்த குச்சி அல்லது கரண்டியை அருகில் உள்ள சிறிய தட்டில் வைக்க வேண்டும். மேஜையில் வைக்க கூடாது. அல்லது டம்ளரில் அதை வைத்தபடியே பானங்களை பருகக்கூடாது.

    உணவு மேஜையில் இடது கைப்பக்கம் முள்கரண்டி (போர்க்ஸ்) வைக்கப்பட்டிருக்கும். வலது புறம் ஸ்பூன், கத்தி போன்றவை வைக்கப்பட்டிருக்கும். இனிப்புகள் சாப்பிட தனி ஸ்பூன் தட்டில் இருக்கும். இந்த கரண்டி வகைகளை அந்தந்த உணவுக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும். குத்தி சாப்பிடும் உணவுகளை சாப்பிட முள்கரண்டியை பயன்படுத்த வேண்டும். சில அசைவ உணவுகளை கத்தியால் வெட்டி சாப்பிடும் நிலை இருக்கும். அதுபோன்ற உணவுகளை முதலில் கத்தியால் அறுத்து சிறு துண்டுகளாக்கி முள் கரண்டியில் குத்தி சாப்பிட வேண்டும். சாதம் போன்ற உணவுகளை சாப்பிட ஸ்பூன் பயன்படுத்த வேண்டும்.

    சாப்பிட வேண்டிய உணவுகளில் ஒன்று சூப். அதை குடிக்க கூடாது. அதாவது சூப் சாப்பிடும் போது அதை கோப்பையில் இருந்து அப்படியே வாயில் வைத்து குடிக்க கூடாது. ஸ்பூனால் சூப் எடுத்து உதட்டில் வைத்து சாப்பிட வேண்டும்.

    சப்பாத்தி, நாண், ரொட்டி போன்ற உணவுகளை உங்களுக்கு இடது புறம் உள்ள சிறிய தட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். இவற்றை நமது கை விரல்களை பயன்படுத்தி சாப்பிடலாம்.

    இறைச்சி வகை உணவுகளை சாப்பிட முள்கரண்டி மற்றும் கத்தியை பயன்படுத்துங்கள். முள்கரண்டியை இடது கையில் பிடித்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் இறைச்சித்துண்டை பிடித்துக்கொள்ள வேண்டும். பின்னர் கத்தி மூலம் இறைச்சியை துண்டு துண்டாக வெட்டி பின்னர் முள்கரண்டியில் குத்தி சாப்பிட வேண்டும். கத்தியை சாப்பிட்டு முடிக்கும் வரை வலது கையில் தான் வைத்திருக்க வேண்டும். இடது கையால் தான் முள்கரண்டியை பயன்படுத்தி சாப்பிட வேண்டும். சாண்ட்விச் போன்ற ரொட்டித்துண்டுகளையும் இதுபோல வெட்டி சாப்பிடலாம். அல்லது கையில் எடுத்து நேரடியாக கடித்தும் சாப்பிடலாம். நூடுல்ஸ் மற்றும் பாஸ்தா போன்ற உணவுகளை சாப்பிடும் போது முள்கரண்டியை வலது கையில் பிடித்துக்கொண்டு அதன் மூலம் நூடுல்ஸ்களை எடுத்து சுருட்டி பின்னர் சாப்பிட வேண்டும். அப்போது இடது கையில் ஸ்பூன் வைத்திருக்க வேண்டும். சாப்பிடும்போது இதை முள்கரண்டிக்கு கீழே பிடித்திருக்க வேண்டும். அதாவது முள் கரண்டியில் இருந்து உணவு சிந்தினால் அதை ஸ்பூனால் தடுக்கவே இந்த முறை கையாளப்படுகிறது.

    சாப்பிட்டு முடித்ததும் கரண்டி வகைகளை மேஜையின் ஓரத்தில் இருக்கும் தட்டில் வைக்க வேண்டும். முள்கரண்டி மற்றும் ஸ்பூன் போன்றவற்றை நிமிர்ந்து இருக்கும் வகையில் வைக்க வேண்டும். இதன் மூலம் சாப்பிட்டு முடித்துவிட்டோம் என்பது பொருளாகும்.
    Next Story
    ×