search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அவசரப்பட்டு பேசும் வார்த்தைகளில் ஆபத்து அதிகம்
    X

    அவசரப்பட்டு பேசும் வார்த்தைகளில் ஆபத்து அதிகம்

    காதலர்களுக்கு காதலித்தபோது கடைப்பிடித்த பொறுமையும், சகிப்பு தன்மையும் இல்லற வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்ததும் காணாமல் போய்விடுகிறது.
    காதல் திருமணங்கள் தற்போது அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. காதலிக்கும்போது இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து மகிழ்ச்சியாக காதல் வானில் சிறகடித்து பறக்கிறார்கள். ஆனால் அவர்களே திருமண பந்தத்தில் இணைந்ததும் முட்டி மோதிக்கொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள். காதலித்தபோது கடைப்பிடித்த பொறுமையும், சகிப்பு தன்மையும் இல்லற வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்ததும் காணாமல் போய்விடுகிறது.

    பெற்றோர் பேசி முடித்து வைக்கும் திருமண தம்பதிகளுக்குள்ளும் பிரச்சினைகள் எழத்தான் செய்கின்றன. அப்போது வீட்டு பெரியவர்கள் தலையிட்டு சுமுகமாக்க முயற்சிப்பார்கள். மீண்டும் சச்சரவுகள் தோன்ற இடம் கொடுக்காமல் அவ்வப்பொழுது ஆலோசனை வழங்கி கொண்டிருப்பார்கள். தாங்கள் சேர்த்துவைத்த ஜோடி பிரிந்துபோய் விடக்கூடாது என்பதில் பெற்றோரும் குறியாக இருந்தார்கள். ஆனால் இன்றைய தனிக்குடித்தன வாழ்க்கை பெரியவர்களின் நேரடி கண்காணிப்பிற்கு வாய்ப்பில்லாமல் செய்துவிட்டது.

    ஒருசில காதல் ஜோடிகள் தாங்கள் பிரிவதற்காக சொல்லும் காரணம் மிக சாதாரணமாக இருக்கும். அவர்கள், தாங்கள் பிரியும்போது தங்கள் குழந்தைகளின் எதிர் காலம் என்னவாகும் என்றும் சிந்தித்து பார்ப்பதில்லை. அவசர கதியில் முடிவெடுத்து பிரிந்து போவது அவர்களுடைய வாழ்க்கையை மட்டுமின்றி, குழந்தைகளின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி விடுகிறது.

    குடும்ப உறவு என்பது ஒரு முதலீடு. அதில் என்ன முதலீடு செய்கிறோமோ அது பல மடங்காக திரும்ப கிடைக்கும். நிறைய பேர் எதையுமே முதலீடு செய்ய விரும்புவதில்லை. ஆனால் வரவு மட்டுமே தொடர்ந்து இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

    நாம் தோட்டத்தில் விதைக்கும் விதை செடியாக வளரும்போது நீர் ஊற்றி உரம் போட்டால் மட்டுமே பலன் தரும். நாம் அதிக அக்கறை எடுத்து ஆர்வமாக பராமரித்தாலும் அதன் இடைஇடையே களைகளும் வளரத்தான் செய்யும். அது தவிர்க்க முடியாதது. அந்த களைகளைத்தான் பிடுங்கி எறிய வேண்டும். அதைவிடுத்து பூந்தோட்டத்தையே அழிக்க முயற்சிப்பது அபத்தமானது.

    நாம் குடும்பத்தில் அன்பை பயிரிடவேண்டும். கோபத்தையும், எரிச்சலையும் கொட்டி, குரோதத்தை வளர்த்துக்கொண்டிருக்கக்கூடாது. மனம் தவறு என்று சொல்வதை ஒருபோதும் தம்பதிகள் தொடர்ந்து செய்துகொண்டிருக்கக்கூடாது. குடும்பத்தில் நிம்மதி கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் விட்டுக்கொடுக்க தயங்கக் கூடாது. ‘விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை’ என்ற உண்மையை புரிந்துகொள்ளவேண்டும்.

    குடும்ப உறவை சிதைக்கும் முதல் அஸ்திரம், சந்தேகம்தான். தங்கள் துணை மீது சந்தேகம் கொள்ளாமல் நம்பிக்கையோடு வாழவேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலைகள் எப்பொழுதும் உண்மையை சொல்லாது. தவறான சந்தர்ப்பத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கமும் தர முடியாது. அதனால் ஏற்படும் மன சஞ்சலம் நீடித்து உறவுகளில் விரிசலை ஏற்படுத்திவிடும். அதனால் எதையுமே நிதானமாக அணுகி தீவிரமாக விசாரிக்கவேண்டும்.

    கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்றால்தான் வாழ்க்கையை நகர்த்த முடியும் என்ற இன்றைய நிலையை புரிந்து கொண்டு இருவரும் வேலைக்கு போகிறார்கள். குடும்பத்திற்காக உழைக்கிறார்கள். குடும்ப உறவு மேம்பட அது மட்டும் போதுமானதா? என்று சிந்திக்க வேண்டும். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் ‘இந்த குடும்பத்துக்காக நான் மாடாக உழைக்கிறேன்’ என்பதுபோல் பேசும் சூழ்நிலை உரு வாகிவிடக்கூடாது. அதுபோல் கோபத்தில் பேசத்துடிக் கும் விஷயங்களை உடனடியாக பேசிவிடக்கூடாது. சிறிது நேரம் ஒத்திப்போட வேண்டும். சிறிது நேரம் பேசாமல் இருந்து, கோபத்தை அடக்கிக்கொண்டால் அதுவே ஏகப்பட்ட சேதாரங்களை தவிர்க்கும். கோபத்தில் கடும் சொற்களை உதிர்த்துவிட்டு பிறகு மன்னிப்பு கேட்பதில் அர்த்தம் இல்லை.

    குடும்ப வாழ்க்கையை சிதைப்பதில் பிரச்சினைக்குரிய பேச்சுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு வார்த்தையையும் பேசுவதற்கு முன்பு நன்கு யோசிக்க வேண்டும். பதற்றத்தில் வந்து விழும் வார்த்தைகளுக்கு பக்க விளைவுகள் அதிகம். ஆத்திரமூட்டும் பேச்சால் எந்த பிரச்சினையும் தீரப்போவதில்லை. அது ஒரு வேண்டாத விருந்தாளி. அன்பை கொடுத்து அரவணைப்பையும், பாசத்தையும் பெற கற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் வாழ்க்கையின் வெற்றிக்கான திறவுகோல்.

    பல குடும்பங்களில் பிரச்சினைகள் தோன்றுவதற்கு அவர்களது உறவினர்கள் காரணமாகிவிடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களை அடையாளங்கண்டு தம்பதிகள் ஒதுக்கிவைத்திடவேண்டும். கூடவே இருந்து குழிபறிக் கிறவர்களிடம் எப்போதும் கவனமாக இருக்கவேண்டும். கணவன்-மனைவி இருவரும் பிரிந்தால் பாதிப்பு அவர் களுக்குத்தானே தவிர, உறவுகளுக்கு அல்ல. அதனால் அவர்கள் மட்டுமே அவர்கள் வாழ்க்கைக்கு எஜமானர்கள். அந்த பொறுப்பை உணர்ந்து, மனம் விட்டுப்பேசி, பிரச்சினைகளை குறைத்து மகிழ்ச்சியாக வாழ முன்வர வேண்டும். 
    Next Story
    ×