search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    திறமையை வளர்த்து கொள்ளும் பெண்கள்
    X

    திறமையை வளர்த்து கொள்ளும் பெண்கள்

    இன்று பணம் சம்பாதிக்கும் பெண்கள், அதை எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பதில் கணவருக்கே (அல்லது குடும்பத்தினருக்கே) ஆலோசனை சொல்பவர்களாக இருக்கிறார்கள்.
    வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையைப் பற்றி நன்றாக திட்டமிடுகிறார்கள். காலையில் விழிக்கும் நேரத்திலிருந்து அவர்கள் ஒவ்வொரு வேலையையும் திட்டமிட்டு அந்தந்த நேரத்தில் செய்து முடிக்கிறார்கள்.

    இதனால் திட்ட மிடுதல், சுறுசுறுப்பாக செயல்படுதல், தனது வேலைகளை முடிக்க நிறைய சிந்தித்தல் ஆகிய மூன்று சிறப்புகள் அவர்களிடம் இணைகின்றன. இவர்களது சிந்தனை - செயல் வேகத்திற்கு தக்கபடி உழைக்க உடல் ஒத்துக்கொள்ளவில்லை என்றால், தங்களுக்கு ஆரோக்கிய குறைபாடு இருப்பதை இவர்கள் விரைவாகவே உணர்ந்துகொண்டு அதற்கான சிகிச்சைகளை பெறுகிறார்கள். வேலைக்குச் செல்லும் பெண்கள் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொள்வதன் பின்னணியும் இதுதான்.

    இவர்கள் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்திலிருந்து தான் வேலை பார்க்கும் இடத்திற்கு செல்ல வேண்டியவர்களாக இருக்கிறார்கள். இதனால் பயணம், அதில் சிக்கல் ஏற்பட்டால் உடனடியாக மாற்று வழி கண்டுபிடிக்கும் ஆற்றல், பயணத்திற்கான முன்னேற்பாடுகள், நெருக்கடியான நேரத்திலும் தகவல் தொடர்பு கொள்ளும் ஆற்றல் போன்றவை இவர்களிடம் வளர்கிறது.

    வேலை பார்க்கும் இடத்தில் பலதரப்பட்ட சக பணியாளர்களோடு பழகுதல், குழுவாக உழைத்தல், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்து செல்லுதல், பல்வேறு நெருக்கடிகளில் வரும் பொதுமக்களை சந்தித்தல், உயர் அதிகாரி - தன் சமபொறுப்பில் பணியாற்றுகிறவர்கள் - தனக்கு கீழ் பணியாற்றுகிறவர்கள் ஆகிய ஒவ்வொருவரிடமும் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற பக்குவம் போன்றவை வேலை பார்க்கும் பெண்களுக்கு கிடைக்கிறது.

    இதனால் பலதரப்பட்ட மனிதர்களை புரிந்துகொண்டு அனுசரித்து வாழும் பக்குவத்தை அவர்கள் பெறுகிறார்கள். ஒரே கல்வியை கற்றுக்கொள்ளும் இரண்டு பெண்களில் ஒருவர் வேலைக்குச் செல்பவராகவும், இன்னொருவர் வீட்டிலே இருப்பவராகவும் இருந்தால் வீட்டில் இருக்கும் பெண்ணிடம் இருக்கும் அந்த உயர்ந்த கல்வி மெல்ல மெல்ல மங்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் தன் கல்வித்திறனுக்கு ஏற்ற வேலையைத் தேடிக்கொள்ளும் பெண் படித்த கல்வியை மறக்காமலும், அது தொடர்பான அனுபவக் கல்வியை கூடுதலாக பெறுபவராகவும் இருக்கிறார்.

    முன்பெல்லாம் உயர்கல்வி கற்கும் பெண்கள் சொந்த ஊரிலே வேலை கிடைக்க வேண்டும் என்று ஏங்கியதுண்டு. இப்போது மொழிப்புலமையும், கல்விச் சூழலும் அவர்களை வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரியத் தூண்டுகிறது. வெளிநாடுகளுக்குச் சென்று வேலை பார்க்கும் பெண்களின் அறிவாற்றல் எல்லை மிகப் பரந்த நிலையில் உள்ளது.

    பழைய காலத்தில் கணவர் பணம் சம்பாதித்துக் கொண்டு வருவார். அதை சிக்கனமாக செலவு செய்பவராக மட்டுமே பெண் இருந்தார். இன்று பணம் சம்பாதிக்கும் பெண்கள், அதை எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பதில் கணவருக்கே (அல்லது குடும்பத்தினருக்கே) ஆலோசனை சொல்பவர்களாக இருக்கிறார்கள். சேமிப்பு மட்டுமல்ல பணத்தை பயனுள்ள வழிகளில் செலவிட கற்றுக்கொடுப்பதிலும் இன்றைய பெண்கள் முன்னோடிதான்.
    Next Story
    ×