search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வெற்றிக்கான வழிகளை அறிந்து கொள்வது எப்படி
    X

    வெற்றிக்கான வழிகளை அறிந்து கொள்வது எப்படி

    வெற்றிக்கு என பல வழிகள் உண்டு. அதை அறிந்து நாம் வாழ்வில் கடைபிடித்து எந்த செயலை செய்தாலும், வெற்றி பெற்று நற்பெயருடன் வாழலாம்.
    மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான், கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக்கொடுக்கும், விதியை வெல்ல இயலாது என்பது போன்ற பழமொழிகள் மனிதனின் முயற்சியில்லாமையை புலப்படுத்தும். எப்படியேனும் வாழ்ந்தாக வேண்டும். அந்த வாழ்வு இனிதாக இருக்கவேண்டும்.

    இன்பமயமானதாக இருக்கவேண்டும். எளிதானதாக இருக்கவேண்டும் என்று உள்ளத்தில் எண்ணவேண்டும். அந்த எண்ணத்தில் உறுதிவேண்டும். இதை யாரும் எண்ணிப் பார்த்ததில்லை. நன்றாக வாழவேண்டும் என்றும், என்னால் முடியும் என்றும் உறுதிவேண்டும். இது வெற்றிக்கு அடிப்படை ஆதாரம்.

    வாழ்வில் வெற்றி பெற்ற பலரும் எவ்வாறு வெற்றி பெற்றனர் என்று எண்ணி பார்க்கவேண்டும். அப்போது உண்மை தெரியும். வெற்றி பெற்றதற்கான காரணம் அவருக்கு இருந்த மன உறுதியும் தளராத உழைப்பும் என்பது நமக்குத் தெரிய வரும். வசதியற்ற தாமஸ் ஆல்வா எடிசன் தன் அயராத முயற்சியால் பல மின்கருவிகளை கண்டறிந்தார். அவர் கண்டுபிடித்த கருவிகளை மனப்பாடம் செய்து திருப்பி சொல்லவே நம்மால் முடியவில்லை.

    படிக்க முடியாமல் தவித்த ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் ஜனாதிபதியானார். அது எப்படி முடிந்தது. வகுப்பில் கணக்கு பாடம் படிக்க முடியாமல் சிரமப்பட்ட ஆல்பர்ட் ஐன்ஸ்டின் பிற்காலத்தில் பெரிய விஞ்ஞானியானார். கல்வியை கற்காத பெருந்தலைவர் காமராஜர் முதல்- அமைச்சராக பதவி ஏற்று திறம்பட ஆட்சி செய்தார். இப்படி எத்தனையோ மேற்கோள்களை காட்ட முடியும். எனவே மனதில் உறுதிவேண்டும் இதை செய்வேன். அதனை இப்படி செய்வேன். வெற்றி பெறுவேன் என்று திட நம்பிக்கை வேண்டும்.

    உறுதிக்கு பின் ஒருவனுக்கு இருக்கவேண்டியது தளராத முயற்சி. நல்லது ஒன்றை செய்ய நினைத்தால் வருவது தடை தான். முள், கல் இல்லாத பாதையே இல்லை. இதை எண்ணத்தில் கொள்ளவேண்டும். துன்பங்கள் வரும். தொடர்ந்து வரும். அதை எதிர்கொள்ளும் பக்குவமும், மனபலத்தையும் நாம் உருவாக்கி கொள்ளவேண்டும். இதற்கு நம்மிடம் தளராத உழைப்பு தான் அவசியம். வெற்றிக்கு உரிய வழிகளில் முக்கியமானது சொல்லாற்றல்.

    இதில் சொல்லின் திறனறிந்து சொல்லவேண்டும். நன்றாக சொல்லவேண்டும். சுருக்கமாக சொல்ல வேண்டியதை சுருக்கமாக சொல்லவேண்டும். விரிவாக சொல்ல வேண்டியதை விரிவாக சொல்லவேண்டும். பயமில்லாமல் தைரியமாக இடமறிந்து சொல்லவேண்டும். கேட்பவர் இயல்பறிந்து சொல்லவேண்டும்.

    அப்போது தான் வாழ்வில் வெற்றி என்னும் கனியை பறிக்கலாம். வெற்றிக்கு என பல வழிகள் உண்டு. அதை அறிந்து நாம் வாழ்வில் கடைபிடித்து எந்த செயலை செய்தாலும், வெற்றி பெற்று நற்பெயருடன் வாழலாம். ஒவ்வொருவரும் வெற்றிக்கான வழிகளை தேர்ந்தெடுத்து பயணம் செய்து உயர்ந்த இடத்தை அடையவேண்டும். அது தான் உங்கள் பெற்றோரையும், ஆசிரியரையும் சந்தோஷப்படுத்தும்.
    Next Story
    ×