search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சொந்த வீடு வாங்கிய பின்னர் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்
    X

    சொந்த வீடு வாங்கிய பின்னர் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்

    சொந்த வீடு வாங்கிய பின்னர் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் உள்ளன. அவை என்னவென்று கீழே பார்க்கலாம்.
    பல்வேறு சிரமங்களுக்கு பிறகு சொந்தமாக ஒரு தனி வீடு அல்லது அடுக்குமாடி வீட்டை வாங்கியதோடு வீடு சம்பந்தப்பட்ட வேலைகள் முடிந்தது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அதற்கு பிறகும் முக்கியமாக கவனிக்க வேண்டிய பல நடைமுறைகள் இருப்பதை ரியல் எஸ்டேட் நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுனர்கள் எச்சரிக்கிறார்கள். அவர்கள் தரக்கூடிய பல்வேறு தகவல்களில் சில முக்கியமான குறிப்புகளை இங்கே பார்க்கலாம். அவற்றை நடைமுறையில் செயல்படுத்துவது நமது சொத்துக்களுக்கான பாதுகாப்பான அணுகுமுறையாக இருக்கும்.

    பெயர் மாற்றம் :

    வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியவுடன் உடனடியாக சொத்து சம்பந்தப்பட்ட பெயர் மாற்றங்களை செய்து கொள்ளவேண்டும். மின்சார இணைப்புகளுக்கான பெயர் மாற்றம் செய்வது பற்றியும் கச்சிதமாக செயல்பட வேண்டும். மேற்கண்ட வேலைகளை செய்து தருவதற்கு நகர்ப்புறங்களில் குறிப்பிட்ட ஏஜண்டுகள் இருப்பார்கள். அவர்களை அணுகும்போது வீட்டு பத்திரங்களின் நகல்களை தரவேண்டியதாக இருக்கும். அது போன்ற சமயங்களில் பத்திரங்களை ‘வாட்டர் மார்க்’ செய்யப்பட்ட நகல்களாக மாற்றம் செய்த பின்னர் தருவதுதான் பாதுகாப்பானதாக இருக்கும்.

    வேறு மாற்றங்கள் :

    ஆவணம் நமது பெயருக்கு மாறியவுடன் புதிய வீட்டு முகவரியை அனைத்து சான்றிதழ்களிலும் மாற்றுவதற்கான வழிமுறைகளை கையாளவேண்டும். மேலும், சொத்துவரி, பட்டா, குடிநீர் இணைப்பு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், ரேஷன் கார்டு உள்ளிட்ட சகல ஆவணங்களிலும் புதிய வீட்டு முகவரியை பதிவு செய்து கொள்ளவேண்டும். அதன் வாயிலாக பின்னாளில் ஏற்படும் பல சங்கடங்கள் தவிர்க்கப்படும்.

    பாதுகாப்பு அவசியம் :

    வீட்டிற்கான ஆவணங்கள் என்பது எவ்வளவு முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரியும். அதை பத்திரமாக வைப்பதற்காகத்தான் ‘பத்திரம்’ என்ற பெயரே அதற்கு வழங்கப்பட்டது. நமது தேவைகளுக்கேற்ப பத்திரங்களை இரண்டுக்கும் மேற்பட்ட ஜெராக்ஸ் நகல்கள் எடுத்து வைத்துக்கொள்வது அவசியம்.

    வங்கி கடன் :

    வங்கி கடன் பெற விண்ணப்பிக்கும்போது வங்கியால் கேட்கப்பட்ட அனைத்துவிதமான ‘டாக்குமெண்ட்களும்’ தவறாமல் சமர்ப்பிக்கப்பட வேண்டியதாக இருக்கும். பொதுவாக ஒவ்வொரு ஆவணமாக வெவ்வேறு நாட்களில் தருவதை விட, எல்லா ஆவணங்களையும் ஒரே நாளில் சமர்ப்பிப்பதுதான் நல்லது. அதற்கு முன்னர் அனைத்து ஆவணங்களுக்கான ஜெராக்ஸ் நகல்களை கைவசமாக வைத்துக்கொள்வது முக்கியமானது.

    ‘டிஜிட்டல் மயம்’ :

    இன்றைய சூழலில் சகல செய்திகளும் ‘டிஜிட்டல்’ மயமாக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த உலகமும் ‘டிஜிட்டல்’ மயத்திற்கு மாறிக்கொண்டு வருகிறது. அந்த வழிமுறையில் நம்முடைய எல்லாவித ஆவணங்களையும் ‘டிஜிட்டல்’ மயமாக மாற்றுவது அவசியமானதாக உள்ளது. நமது ஆவணங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை ‘ஸ்கேன்’ செய்து கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் பதிவு செய்து கொள்ளலாம். அவசியம் கருதி லாக்கரில்கூட வைத்துக்கொள்ளலாம். ‘டிஜிட்டல்’ முறையில் பதியப்பட்ட ஆவணங்கள் பல தலைமுறைகளுக்கும் அழியாமல் இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

    குடியிருப்பாளர் சங்கம் :

    வீடு வாங்கிய பகுதியில் அந்த ஏரியாவுக்கான குடியிருப்பாளர் சங்கம் இருக்கும்பட்சத்தில் அதில் இணைந்து கொள்வது முக்கியமானது. அதற்காக வீட்டு பத்திரத்தின் ஜெராக்ஸ் நகலை சங்க நிர்வாகிகளிடம் தந்து அதுபற்றிய மேல் விபரங்களை கேட்டு அதன்படி செய்வதும் அவசியமான ஒன்றாகும்.
    Next Story
    ×