search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வீடு - மனை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விதிமுறைகள்
    X

    வீடு - மனை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விதிமுறைகள்

    சொந்தமாக வீடு கட்டும்போது அல்லது வீட்டு மனை வாங்குவதற்கு முன்பு எந்தெந்த விஷயங்களை முக்கியமாக கவனிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
    இப்போது இருக்கும் வாழ்க்கை சூழலில் எவ்வளவோ சிரமங்களுக்கு இடையில்தான் பணத்தை சேமித்து வைக்க முடிகிறது. அவ்வாறு சிறுகச்சிறுக சேமித்த பணத்தின் மூலம் சொந்தமாக ஒரு இடம் அல்லது மனை வாங்குவது அல்லது அதில் வீடு கட்டுவது என்பதுதான் எதிர்கால வாழ்க்கைக்கான பொருளாதார பாதுகாப்பாக இருக்கும் என்பது பலரது எண்ணம். அவ்வாறு சொந்தமாக வீடு கட்டும்போது அல்லது வீட்டு மனை வாங்குவதற்கு முன்பு எந்தெந்த விஷயங்களை முக்கியமாக கவனிக்க வேண்டும் என்பதை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் தெரிவித்துள்ளது. அதன் தொகுப்பை இங்கே காணலாம்.

    1. மனையை விற்பவருக்கு அந்த சொத்தில் உரிமை உள்ளதா..? என்று ஆவணங்களை தகுந்த விதத்தில் சோதித்து அறிய வேண்டும்.

    2. வாங்கப்படும் வீட்டு மனைக்கான, உட்பிரிவு வரைபடமானது சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தால் அங்கீகாரம் அளிக்கப்பட்டு, உள்ளாட்சி மன்றத்தின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளதா..? என்பதை கவனிக்க வேண்டும்.

    3. சம்பந்தப்பட்ட வீட்டு மனை பிரிவில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள் மற்றும் பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளை உள்ளாட்சி மன்றத்திற்கு தான பத்திரம் மூலம் ஒப்படைப்பு செய்யப்பட்டு உள்ளதா..? என்று பார்ப்பது அவசியம்.

    4. குறிப்பிட்ட மனையின் போக்குவரத்து வசதிக்காக அமைக்கப்பட்ட அணுகுபாதைகள் உள்ளாட்சி மன்றத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறதா..? அல்லது அவை உள்ளாட்சி மன்றத்தின் வசம் ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளதா..? என்பதையும் தெரிந்து கொள்வது முக்கியம்.

    5. திட்ட அனுமதி பெற விண்ணப்பிக்கும் வரைபடமானது பெருநகர வளர்ச்சி கட்டுப்பாட்டு விதிகளுக்கு ஏற்றதாக உள்ளது என்பதை உறுதி செய்து கொண்ட பின்னர் கட்டுமான வேலைகளை தொடங்க வேண்டும்.

    6. திட்ட அனுமதி பெற விண்ணப்பிக்கும்போது அதனுடன், எல்லாவிதமான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் ஆகியவை கச்சிதமாக இணைக்கப்பட்டுள்ளனவா..? என்பதை சரியாக பரிசீலித்துக்கொள்வது பல சிக்கல்களை தவிர்க்கும்.

    7. சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தில் திட்ட அனுமதி பெறுவதோடு மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மன்றத்திடமும் கட்டிடம் கட்டப்படுவதற்கான உரிமமும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
    Next Story
    ×