search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வீடு கட்ட கூட்டு கடன் பெற உதவும் கிரெடிட் ஸ்கோர்
    X

    வீடு கட்ட கூட்டு கடன் பெற உதவும் கிரெடிட் ஸ்கோர்

    பழைய சேமிப்புகள் தவிர, ஒருவருக்கு தரப்படும் வீட்டு கடன் பட்ஜெட்டுக்கு போதுமானதாக இல்லை என்ற நிலையில் கணவன்-மனைவி உறவுகள் சார்ந்தும் கூட்டாக வீட்டு கடன் பெறலாம்.
    சொந்தமாக வீடு கட்டும் அனைவருக்கும் குறைந்த அளவு பட்ஜெட் போதுமானதாக இருப்பதில்லை. தமது குடும்பத்தவர்கள் வசிப்பதற்கான இடமாக இருப்பதோடு, மேல் மாடியும் கட்டி வாடகைக்கு விடலாம் என்ற பொருளாதார ரீதியான கண்ணோட்டத்தில் திட்டமிட்டு இருப்பவர்களுக்கும் கூடுதல் வங்கி கடன் தேவைப்படும். பழைய சேமிப்புகள் தவிர, ஒருவருக்கு தரப்படும் வீட்டு கடன் பட்ஜெட்டுக்கு போதுமானதாக இல்லை என்ற நிலையில் கணவன்-மனைவி, அப்பா-மகன், அப்பா-மகள் என்ற உறவுகள் சார்ந்தும் கூட்டாக வீட்டு கடன் பெறலாம். அதன் மூலம் இரண்டு கடன்களுக்கான தொகை கிடைப்பதால் பணத்தேவையை சமாளிக்கும் கச்சிதமான வழியாகவும் இந்த முறை இருக்கிறது.

    ‘கிரெடிட் ஸ்கோர்’ :

    கூட்டு கடன் பெற வங்கிகளை அணுகும்போது கடன் விண்ணப்பம் சுலபமாக பரிசீலிக்கப்படுகிறது. அதன் காரணமாக சற்று எளிதான நடைமுறைகளில் நாம் விரும்பும் கடன் தொகையை பெறுவதற்கு சிறப்பான வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு தருவதற்கு முன்பாக, வங்கிகள் உள்ளிட்ட மற்ற நிதி நிறுவனங்கள் ‘ஜாயிண்ட் லோன்’ எனப்படும் கூட்டுக்கடன் விண்ணப்பத்தை தரக்கூடிய இரு நபர்களின் ‘கிரெடிட் ஸ்கோர்’ நிலையை கவனத்தில் கொள்கின்றன. அந்த ‘ஸ்கோர்’ கடன் தருவதற்கான எல்லாவிதமான வாய்ப்புகளையும் கொண்டிருக்கிறதா..? என்பதையும் கணக்கில் கொண்டுதான், கேட்கப்பட்ட கடன் தொகையை வழங்குவது பற்றி வங்கிகள் முடிவு செய்கின்றன.

    நடைமுறைகள் :

    விண்ணப்பதாரரின் ‘கிரடிட் ஸ்கோர்’ தேவைப்பட்ட அளவை விடவும் குறைவாக இருக்கும் சமயத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவது வழக்கம். மேலும் ‘ஜாயிண்ட் லோன்’ வாங்கும்போது அதன் மூலம் கிடைக்கும் வரிச்சலுகைகள் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும், வங்கிகள் ‘ஜாயிண்ட் லோன்’ எனப்படும் கூட்டு கடன் விண்ணப்பத்தை பரிசீலிக்கும்போது ‘கே.ஒய்.சி’ எனப்படும் ‘நோ யுவர் கஸ்டமர்’ எனும் நடைமுறைகள் மூலம் விண்ணப்பதாரர்களின் ‘கிரடிட் பின்னணிகளை’ கவனத்தில் கொள்கின்றன. எனவே சரியான தகவல்களுடன் வங்கியை நாடுவது முக்கியம்.

    கடன் மீதான பொறுப்புகள் :

    கடன் வழங்கும் வங்கிகள் நமது வருவாய்க்கான வழிகள், ‘கொலாட்டரல் செக்யூரிட்டி’ மற்றும் ‘கிரெடிட் ஸ்கோர்’ அளவு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கடனை வழங்குகின்றன. கடனை திருப்பி செலுத்தும் நடைமுறைகளில் எல்லா கடன்தாரர்களுக்கும் பொறுப்பு உள்ளது என்பதுதான் வங்கிகளின் நிலைப்பாடு ஆகும். இருப்பினும் கூட்டுக்கடன் விதிமுறைகளில் கடனை திருப்பி செலுத்துவதில் முக்கிய பொறுப்பானது ‘பிரதான கடன்தாரரை’ சார்ந்ததாகும்.

    கடனுக்கான மாதாந்திர தவணைகளை சரியான தேதிகளில் அவரால் கட்ட இயலாமல் போகும் பட்சத்தில், இரண்டாவது கடன்தாரர் அதற்கான பொறுப்பு உடையவர் ஆவார். மேலும் தம்பதிகளாக இருப்பவர்கள் கடன் பெற்ற பின்னர் வாழ்க்கையில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் காரணமாக கடன் தவணைகள் தவறுவது பற்றி வங்கிகள் கவனத்தில் கொள்ளாது. கடன் பெற்றவர்களது தனிப்பட்ட வாழ்வியல் முறைகளில் வரும் சிக்கல்களை வங்கிகள் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.

    ‘ஜாயிண்ட் லோன்’ விதிகள் :

    வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் ‘ஜாயிண்ட் லோன்’ சம்பந்தமாக ஏதாவது விதிமுறைகளை மாற்றி அமைக்கும்போது அவற்றை தெரிந்துகொண்டு செயல்படுவது அவசியமானது. புதிய சேவை கட்டணங்கள் அல்லது வேறு பாக்கிகள் ஏதாவது நிலுவையில் இருப்பின் அவற்றை தக்க சமயத்திற்குள் செலுத்திவிடுவது சிறந்தது. பொதுவாக கடன் பெறுபவரது ‘கிரெடிட் ஸ்கோர்’ 300 முதல் 500 வரை இருப்பது மிகவும் பாதிப்பை தரக்கூடிய ‘ரிஸ்க்காக’ கருதப்படும். 500 முதல் 650 வரை இருப்பதும் பாதிப்பை தரக்கூடியதாகும். 650 முதல் 750 வரை இருப்பது அவ்வளவு பாதிப்பாக கருதப்படாது. மேலும், 750 முதல் 850 வரையில் ‘கிரெடிட் ஸ்கோர்’ இருப்பது நல்லது.
    Next Story
    ×