search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கதாநாயகனை நினைத்துக்கொண்டு கணவரோடு வாழும் மாய வாழ்க்கை
    X

    கதாநாயகனை நினைத்துக்கொண்டு கணவரோடு வாழும் மாய வாழ்க்கை

    பெண்களே ‘சாயலை’ பார்த்து பழகாதீர்கள். அந்த சாயம் உங்கள் மீதுபட்டு உங்கள் வாழ்க்கையில் கறையையும் ஏற்படுத்திவிடும்.
    பெண்கள் அனைவருக்குமே ஏதாவது ஒரு சினிமா நடிகரை பிடிக்கும். இளம் பெண்களை பொறுத்தவரையில் தங்களுக்கு எந்த நடிகரை பிடிக்குமோ, அந்த ‘ஹீரோ’வின் சாயலில் உள்ளவர்களை ரொம்பவே பிடித்துவிடுகிறது. அசல் ஹீரோவை போலவே நடை, உடை, பாவனைகளில் வலம் வரும் இளைஞர்களை, தங்களுக்கான நிஜ வாழ்க்கை ஹீரோவாக நிர்ணயித்துவிடுகிறார்கள்.

    அவர்களையே நினைத்து உள்ளுக்குள் காதலை வளர்த்துவிடும் பெண்கள், அவர்களோடு நட்பும் பாராட்டுகிறார்கள். தங்களுக்குள் நெருக்கம் ஏற்பட்ட நீண்ட காலத்திற்குப் பிறகுதான் அந்த மாயை புரிகிறது. சிலர் அப்போது வெளியே வர முடியாத அளவுக்கு வேதனையில் சிக்கிக்கொள்கிறார்கள். பெண்கள் ஒருபோதும் ஆண்களின் தோற் றத்தை வைத்தோ, சாயலைவைத்தோ மனதை பறிகொடுத்துவிடக்கூடாது.

    காதல், மனதைப் பார்த்துதான் வருகிறது என்று தத்துவம் பேசினாலும், ஒருவருடைய தோற்றமும் காதலுக்கு துணை புரிகிறது என்பதை மறுக்கமுடியாது. ஒரு ஆண், தனக்குப் பிடித்தமான ஹீரோவின் சாயலில் இருக்கிறார் என்கிறபோது தன்னை அறியாமலே அவர் மீது அந்த பெண்ணுக்கு ஈர்ப்பு வந்துவிடுகிறது.

    சக தோழிகளும், ‘நிஜமாகவே அவர் அப்படித்தான்டீ இருக்கிறார். ஸ்டைலும் அப்படித்தான்டீ இருக்கிறது. இவரு மட்டும் கிடைச்சுட்டார்ன்னு வைச்சுக்கோ உனக்கு அதிர்ஷ்டம்தான்’ என்று தூண்டிவிடுவார்கள். அப்போதே அந்த பெண்ணின் மனது அவரை நோக்கி சிறகடித்து பறக்கத் தொடங்கிவிடும். அவரது குணாதிசயங்கள், நடத்தை பற்றியெல்லாம் சிந்திக்கும் முன்பாகவே மனதுக்குள் ஆசையை வளர்த்து விடுவார்கள். அவர்தான் தனது வாழ்க்கைக்கு பொருத்தமானவர் என்று முடிவு செய்துவிடுகிறார்கள்.

    அந்த பெண்ணின் மோகத்தை அவர் உணர்ந்து, அவளோடு பழகத் தொடங்கிவிட்டால், அதன் பிறகு அவளது ஆசைகள் ஒவ்வொன்றையும் அவரிடம் திணிக்கத் தொடங்கிவிடுவாள். அந்த சினிமா ஹீரோவை போலவே நீங்களும் தாடி, மீசை, சிகை அலங்காரம் செய்துகொள்ளுங்கள் என்று அன்புக்கட்டளையிடுவாள். அந்த நடிகர் அணிவது போன்ற உடையை தேடிப்பிடித்து வாங்கி, பரி சளித்து மகிழ்வாள். அந்த நிழல் கதாநாயகன், நிஜ ஹீரோ செய்யும் சாகசங்களையெல்லாம் செய்வான் என்று அப்போது கற்பனை செய்துகொள்வாள்.

    சாயலுக்கும்- நிஜத்திற்கும் இடையே பெரிய இடைவெளி உண்டு. தோற்றத்தில் தனக்கு பிடித்தவர்போல இருந்தாலும், சினிமாவில் பார்த்த ஹீரோபோல வீரம், பராக்கிரமம், பழக்க வழக்கம், குணாதிசயங்கள் தனது ‘சாயல் காதலரிடம்’ இல்லை என்பது தெரிந்து விடும்போது மனம் மாயையில் இருந்து விலகி, சிந்திக்கத் தொடங்கும். அப்படி சிந்திக்கத் தொடங்கும் முன்பே சில பெண்கள் அந்த போலி கதாநாயகர்களிடம் நிறைய இழந்துவிடுகிறார்கள்.

    எல்லா நாடுகளிலும், ஏராளமான பெண்கள் இப்படி போலி கதாநாயகர்களிடம் காதல் வசப்பட்டு ஏமாற்றம் அடைகிறார்கள். இதை “டெலூஷன் ஆப் லவ்” என்ற மனோவியாதி என்று மனநல நிபுணர்கள் சொல்கிறார்கள். இது ‘இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்துக் கொள்வது. நிழலை நிஜமாக நினைத்து வாழ்க்கையை தொலைப்பது’ போன்ற மனநிலை. இந்த மனோநிலையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்.

    இது போன்ற மாய மனோநிலையில் சிக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

    “சினிமா நடிகர்கள் என்றால் அவர்களிடம் நடிப்பை மட்டுமே பார்க்கவேண்டும். சக மனிதர்களிடம் அன்பு செலுத்துவதுபோல் அவர்களிடமும் அன்பு செலுத்தலாம். அதற்கு அப்பால் சென்று விடக்கூடாது. சினிமா நடிகர்களோடு நட்பு பாராட்ட முடியாத நிலை ஏற்படும்போது, அவரைப் போன்ற சாயல் கொண்டவர்கள் மீது ஈடுபாடு ஏற்படுவது இயல்புதான்.

    ஆனால் அந்த எண்ணத்தை வளரவிடக்கூடாது. வளரவிட்டுவிட்டால் அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் செல்லவேண்டியதாகிவிடும். தனது சாயலை பார்த்துதான் ஒரு பெண் தன்னை காதலிக்கிறாள் என்பதை ஆண் ஒருவர் உணரும்போது, ‘அந்த காதல் நிரந்தரமற்றது என்பதும்- அந்த அன்பு அதிக நாள் நீடிக்காது என்பதும் அவருக்கு தெரிந்துவிடும். அதனால் முடிந்த அளவு விரைவாக அனுபவித்துவிடுவோம்’ என்ற எண்ணத்துக்கு அவர் வந்துவிடுவார். அதனால் அங்கே காதல் இல்லாமல் போய், காமம் தலைதூக்கிவிடும்.

    திருமணத்திற்கு பிறகும் சில பெண்களுக்கு பிரமை காதல் ஏற்படுவதுண்டு. அப்போது அவர்கள் தான் விரும்பும் கதாநாயகனை தங்கள் கணவர் வடிவில் பார்ப்பார்கள். அந்த காதல் நாயகனோடு வாழ்வதாக நினைத்துக்கொண்டு, கணவரோடு மாய வாழ்க்கை வாழ்வார்கள். இந்த வாழ்க்கை பலகீனமானது. விரைவிலே போரடித்துப்போய்விடும்.

    நிழலும்- நிஜமும் வெவ்வேறானவை. இரண்டும் ஒரே கோட்டில் இணையப்போவதில்லை. முரண்பாட்டை நிஜத்தோடு பொருத்தும்போது நிராசைகள் பெருகும். மனதின் அதீத எதிர்பார்ப்புகளை ஈடுசெய்ய முடியாமல் நிஜம் தள்ளாடும்போது சிக்கல்கள் ஆரம்பமாகும். தன் எதிர்பார்ப்பை வெளிப்படையாக பெண்ணால் சொல்ல முடியாதபோது, பிரச்சினைகள் வெவ்வேறு விதமாக வளர்ந்துகொண்டே போகும். அது உறவுக்கே உலைவைத்துவிடும்.

    பெண்களே ‘சாயலை’ பார்த்து பழகாதீர்கள். சாயலின் சாயம் விரைவிலே வெளுத்துவிடும். அந்த சாயம் உங்கள் மீதுபட்டு உங்கள் வாழ்க்கையில் கறையையும் ஏற்படுத்திவிடும்.
    Next Story
    ×