search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உங்கள் மொபைல் போனிலுள்ள தகவல்களை திருடும் டிஜிட்டல் திருடர்கள்
    X

    உங்கள் மொபைல் போனிலுள்ள தகவல்களை திருடும் டிஜிட்டல் திருடர்கள்

    நூறு சதவீதம் பாதுகாப்பானது என தெரிந்தாலொழிய எந்த ஆப்ஸையும் தரவிறக்கம் செய்யாமல் இருப்பது பாதுகாப்பானது.
    உங்களிடம் ஸ்மார்ட் போன் இருக்கிறதா? அப்படியென்றால் நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம், ‘உங்கள் மொபைல் போனிலுள்ள தகவல்களை எல்லாம் எப்படி சுடலாம்’ என எங்கோ ஒருவர் மென்பொருட்களால் சில்மிஷ வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது தான்.

    அவர்கள் முக்கியமாகக் குறி வைப்பது உங்கள் மொபைல் போனில் இருக்கும் நண்பர்களின் செல்போன் எண்களை. உங்கள் கணினிக்குள் வைரஸை எப்படியாவது நுழைத்து விட்டால், பின்னர் உங்கள் போனின் தகவல்கள் எல்லாம் அவர்கள் கைக்குப் போய்விடும். நீங்கள் அனுப்பாமலேயே நண்பர்களுக்கு உங்களிடமிருந்து எஸ்.எம்.எஸ் பறக்கும்.

    நீங்கள் தான் அனுப்பியிருக்கிறீர்கள் என நினைத்து உங்கள் நண்பர்கள் அதைத் திறக்கும் போது, அவர்களுடைய மொபைலின் கான்டாக்ட் விவரங்களும் திருடப்படும். அந்த நபர்களுக்கும் தகவல் பறக்கும். இப்படியே கிளைவிட்டுக் கிளைவிட்டு சட்டென ஒரு மிகப்பெரிய எல்லையை அடைந்துவிடும்.

    உங்கள் மொபைலில் ‘செட்டப்’ பகுதியில் உங்கள் ‘தெரியாத நபர்களிடமிருந்து வரும் ஆப்ஸ்களை நிறுவலாமா?’ எனும் ஒரு கேள்வி இருக்கும். அதற்கு ‘இல்லை’ என போட்டு வையுங்கள். தேவையற்ற வைரஸ்கள், உங்களை அறியாமலேயே உள்ளே நுழைவது நின்று போகும்.

    சில மென்பொருட்களை தரவிறக்கம் செய்யும் போது உங்களுடைய தொடர்பு எண்கள், படங்கள், அடையாளம் போன்றவற்றை பயன்படுத்தும் அனுமதியைக் கேட்கும். வாசித்துப் பார்க்காமல் ‘அக்ஸப்ட்’ என அமுக்காதீர்கள்.

    இந்த மென்பொருள் ஏன் இந்தத் தகவல்களை எல்லாம் கேட்கிறது என யோசியுங்கள். உதாரணமாக, ஒரு வால்பேப்பர் மென்பொருள் உங்கள் புகைப்பட கோப்பைப் பார்க்க வேண்டிய தேவை இல்லை!

    சந்தேகம் வந்தால் விட்டு விடுங்கள். நூறு சதவீதம் பாதுகாப்பானது என தெரிந்தாலொழிய இத்தகைய தகவல்களைக் கேட்கும் எந்த ஆப்ஸையும் தரவிறக்கம் செய்யாமல் இருப்பது பாதுகாப்பானது.

    பொதுவாக இத்தகைய ஆப்ஸ் அல்லது மென்பொருள் அப்டேட்ஸ் உலகக் கோப்பை கிரிக்கெட் போன்ற மெகா நிகழ்ச்சிகளின் போது சகட்டு மேனிக்கு வந்து இறங்கும். அவற்றில் பெரும்பாலானவை போலிகள். சீசன் வந்ததும் ஒரிஜினல் சரக்குடன் போலிகளை இணைத்து இறக்கும் அதே ஹைதர் கால வியாபார தந்திரம் தான். ஆனால் என்ன, இங்கே போலி என்பதுடன் அதில் வைத்திருக்கும் மால்வேர்கள் போனைக் காலி செய்துவிடும் என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம்.

    வைரஸ்கள் நமது போனைத் தாக்கும் இன்னொரு முக்கியமான இடம் ‘இலவச வை-பை’. ஷாப்பிங் மால்களிலோ, விளையாட்டுத் திடல்களிலோ, விமான நிலையம் போன்ற பொது இடங்களிலோ இலவச வை-பை கைநீட்டி அழைக்கும். இலவசமாய்க் கிடைக்கிறது என்பதற்காக அதில் நமது போனை சங்கடப்படாமல் இணைத்துக் கொள்வோம். என்னென்ன மென்பொருள் அப்டேச் செய்ய வேண்டியிருக்கிறதோ அவற்றையெல்லாம் செய்வோம். இங்கே தான் கண்ணுக்குத் தெரியாத சிக்கல் மறைந்திருக்கிறது.

    நமக்கும் வை-பைக்கும் இடையே நாம் இணைப்பு உருவாக்கிக் கொள்ள அனுமதி அளிக்கும் போது அந்த வை-பை வழியாக வருகின்ற இலவச விளம்பரங்கள், இலவச பாப் அப் செய்திகள் போன்ற அனைத்துக்கும் சேர்த்தே அனுமதி அளிக்கிறோம் என்பதையும் நினைவில் கொள்வோம். பெரும்பாலும் இத்தகைய இடங்களில் இருக்கும் நாலு மீட்டர் நீள ‘டேர்ம்ஸ் அன்ட் கன்டிஷன்களை யாரும் முழுமையாக படிப்பதில்லை?’ அந்த அலட்சியம் தான் எதிராளியின் பலம்.

    இத்தகைய இடங்களில் அடையாளத் திருட்டு அதிகம் நடப்பதாய் அமெரிக்காவின் ஸ்கை க்யூர் நிறுவன சி.ஈ.ஓ, எச்சரிக்கை விடுத்திருக்கிறார். ‘முடிந்த வரை இத்தகைய பொது இட வை-பையை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஒருவேளை பயன்படுத்த வேண்டிய தேவை வந்தால் கூட, முக்கியமான வங்கிக்கணக்கு பரிவர்த்தனைகள், மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் போன்றவற்றைச் செய்யவே செய்யாதீர்கள்’.

    ஒரு பாப் அப் செய்தியில் வரும் கன்டின்யூ பட்டனை 92 சதவீதம் பேர் என்னவென்று முழுமையாய்ப் பார்க்காமலேயே அமுக்கி விடுவதாய் ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. நம்மில் பெரும்பாலானோர் இந்த வகையில் தான் வருவோம். இதெல்லாம் எதிரிகளுக்கு அல்வா சாப்பிடுவது போல. ‘நாலு கண்டினியூ அமுக்கினோமா, ஆப்ஸை இன்ஸ்டால் பண்ணினோமா, பயன்படுத்த ஆரம்பிச்சோமான்னு’ இருந்தால் நமது தகவல்களுக்கு உத்தரவாதம் இல்லை. எனவே கன்டின்யூவிலும் கவனம் தேவை.

    ஒரு வசீகர மின்னஞ்சலின் வடிவிலும் வைரஸ் சாத்தான் வந்து அழைப்பு விடுக்கலாம். ‘இந்த நடிகையின் ரகசியம் வெளியானது’, ‘இந்த விளையாட்டு வீரரின் அந்தரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது’ போன்ற தொனியிலேயே இத்தகைய மின்னஞ்சல்கள் வரும். பார்த்ததும் உடனே ‘டிலீட்’ செய்து விட்டு நகர்ந்து போவது மட்டுமே நாம் செய்ய வேண்டிய ஒரே வேலை.

    பெரும்பாலும் இத்தகைய ‘லிங்க்’கள் இளசுகளை வசீகரிக்கும். ‘அப்படி என்னதான் செய்திருப்பாங்க?’ எனும் ஆர்வம் அவர்களை ‘கிளிக்’ செய்ய வைக்கும். உள்ளே எந்த விஷயமும் இருக்காது, ஆனால் ‘கதவைத் திற காற்று வரும்’ என்பது போல, கிளிக்கியதும் வைரஸ் வரவேற்பறைக்குள் நுழையும்.

    இத்தகைய வைரஸ்கள் வெறுமனே நமது போனை மட்டும் நாசமாக்குவதில்லை, அதிலுள்ள தகவல்களைத் திருடி நமது பணத்தையும் நம்மையறியாமல் திருடிச் செல்கின்றன என்பது நினைவில் கொள்ள வேண்டிய விஷயம்.

    உதாரணமாக ‘சப்வே சர்பர்ஸ் டிப்ஸ்’ எனும் விளையாட்டு மென்பொருள், தரவிறக்கம் செய்யப்படும் மொபைலின் பாதுகாப்பு அம்சங்களையெல்லாம் தாண்டி உள்ளே சென்று உங்களை அதன் சந்தாதாரர் ஆக்கி விடும். ‘பில்’ வரும்போது தான் நாம் ஏமாற்றப்பட்டிருக்கும் விஷயமே தெரியவரும். அப்புறம் என்ன தான் போராடினாலும், ‘அதெல்லாம் நீங்க தான் சார் பாத்துக்கணும். ‘யூஸ்’ பண்ணியிருக்கீங்க பணத்தைக் கட்டுங்க...’ என கஸ்டமர் சர்வீஸ்காரர் கடுப்படிப்பார். ‘இதுக்கு பணத்தைக் கட்டித் தொலச்சுடுவோம்’ என நம் பர்ஸை இளைக்க வைப்போம்.

    அதே போல உங்களுடைய போனின் ஜி.பி.எஸ் தகவல்களை எடுத்து வேறொரு இடத்தில் பதிவு செய்யும் மால்வேர்கள் உண்டு. அது உங்கள் போனின் இருப்பிடத் தகவல்களை எங்கோ ஒரு இடத்தில் பதிவு செய்து கொண்டே இருக்கும். இந்தத் தகவல்கள் ரகசியமாகத் திருடப்பட்டால், நீங்கள் உங்களுடைய போனில் ‘லொக்கேஷன் ஐடன்டிபையர்’ அதாவது இருப்பிட சுட்டியை ஆப் செய்து வைத்திருந்தாலும் கூட உங்கள் இடம் டிராக் செய்யப்படும்.

    இதை பிக்டேட்டா அனாலிடிக்ஸ் நுட்பத்துக்கு உட்படுத்தி நீங்கள் போகுமிடமெல்லாம் விளம்பரங்களும், உசுப்பேத்தும் அழைப்புகளும் வந்து கொண்டே இருக்கும்.

    உங்களுடைய மொபைலில் இருக்கும் மின்னஞ்சல் கணக்குகளிலுள்ள அத்தனை மின்னஞ்சல் முகவரிகளையும் ஒட்டுமொத்தமாய் துடைத்து எடுத்து வெளியாட்களுக்கு விற்று விடும் வைரஸ்கள் உண்டு.

    இத்தகைய மின்னஞ்சல்கள், போன் நம்பர்கள் போன்றவை இணைய உலகில் மதிப்பு மிக்கவை. அவற்றை மையமாகக் கொண்டு தான் இன்றைய இணைய வர்த்தகமே நடக்கிறது. இந்தத் தகவல்கள் ஒரு நிறுவனத்துக்குக் கிடைத்தால், அதைப் பயன்படுத்தி அவர்கள் பிஸினஸை சட்டென உயர்த்தி விடுவார்கள்.

    அதே போல, நமது போன் உரையாடல்களை அப்படியே இன்னொரு இடத்துக்குப் பதிவு செய்யும் மால்வேர்களும் உண்டு என்பது திடுக்கிடும் தகவல். இந்த போன் உரையாடல்களின் வீரியத்தைப் பொறுத்து அது எப்படியெல்லாம் பயன்படுத்தப்படலாம் என்பதை எதிரிகள் முடிவு செய்கிறார்கள்.

    உதாரணமாக, ஒரு உயரதிகாரி இருக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆனால் அவருக்கு இன்னொரு பெண் மீது ஈர்ப்பு. அவளுக்கு காதல் மொழிகள் அனுப்புகிறார். இருவரும் நெருக்கமாய் பேசிக்கொள்கிறார்கள், புகைப்படங்கள் பகிர்ந்து கொள்கிறார்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அந்த தகவல்களையெல்லாம் எதிரிகள் சேமித்துக் கொள்கின்றனர்.

    பின்னர் அந்த உயரதிகாரிக்கு மிரட்டல் விடத் துவங்குகின்றனர். ‘போட்டோக்களை உன் கிட்டே தரவா? அந்த பொண்ணோட புருஷன் கிட்டே தரவா? இல்லை உன்னோட மனைவி கிட்டே தரவா?’ என மிரட்டலை அதிகப்படுத்துகின்றனர். பயந்து போகும் அதிகாரியின் வங்கிக் கணக்கு சக்கையாய்ப் பிழியப்பட்டுவிடும்.

    நோயாளிக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாய் இருப்பது போல, ஒரு போனில் வைரஸ் தாக்கி விட்டால் பின்பு அதில் வேறு பல மால்வேர்களும் எளிதிலேயே வந்து தாக்கி விடுகின்றன. வீட்டிலுள்ள மதிலை உடைத்துவிட்டால் அதன்பிறகு ‘கேட்’ பூட்டியிருந்தாலும் திருடனுக்குக் கவலையில்லை அல்லவா? அது மாதிரி தான் இங்கேயும். ஒரு வைரஸ் புகுந்து உங்களுடைய பாதுகாப்பு வளையத்தை பஸ்பமாக்கி விட்டால், பின்னர் வைரஸ்கள் சகட்டு மேனிக்கு எகிறிக் குதித்து உங்கள் போனை நிரப்பிவிடும்.

    எந்த ஒரு மென்பொருளை தரவிறக்கம் செய்யும் முன்பும் அது எந்த நிறுவனத்திடமிருந்து வருகிறது என பாருங்கள். அது குறித்த வாசகர் கருத்துகளை இணையத்தில் நிச்சயம் படியுங்கள். நிறுவனங்கள் ‘பாதுகாப்பானது’ என அறிவிக்கும் பல மென்பொருட்கள் பாதுகாப்பு அற்றவையாய் இருக்க வாய்ப்பு உண்டு. இன்றைக்கு நிறைய இணைய தளங்கள் இத்தகைய ஆப்ஸ்களைக் குறித்து அக்கு வேறு ஆணி வேறாய் அலசிக் காயப்போடுகின்றன. அந்த விமர்சனங்கள் கருத்துகள் உங்களுக்கு நிச்சயம் ஒரு தெளிவைத் தரும்.

    இப்போது, ஒரு ஐந்து நிமிடம் செலவிடுங்கள். உங்களுடைய மொபைலில் என்னென்ன தேவையற்ற மென்பொருட்கள், ஆப்ஸ் நீங்கள் தரவிறக்கம் செய்திருக்கிறீர்கள் என்று பாருங்கள். தேவையற்ற மென்பொருட்களை நீக்கி விடுங்கள். தேவையற்ற பிரவுசர்களை உடனே அகற்றுங்கள். எப்போதாவது பயன்படும் என நீங்கள் தரவிறக்கம் செய்து வைத்திருக்கும் ஆப்ஸ் உண்டென்றால் அதை தயவு தாட்சண்யம் இல்லாமல் அழித்து விடுங்கள். ஒருவேளை பணம் கொடுத்து வாங்கிய பாதுகாப்பான ஆப்ஸ் எனில் விட்டு விடுங்கள். இலவச ஆப்ஸ்களை தேவையில்லையெனில் அழித்து விடுங்கள்.

    ஆப்ஸ்களை அழிக்கும்போது அதன் ‘டேட்டா’வையும் சேர்த்தே அழித்து விட வேண்டியது அவசியம். எல்லாவற்றையும் நீக்கி விட்டபின் ஒரு ஆன்டிவைரஸ் மென்பொருளைக் கொண்டு மொபைலை ஒருமுறை சோதித்து அறிவது நல்லது. சிலவேளைகளில் ஆப்ஸ் அழிக்க முடியாதபடி இம்சை செய்யும். அப்படியெனில் வேறு வழியில்லை, ‘பேக்டரி ரிசெட்’ ஆப்ஷன் வழியாக போனை முழுமையாய் அழித்து மறுபடியும் முதல்ல இருந்து ஸ்டார்ட் பண்ண வேண்டியது தான்.

    அப்படியே, உங்கள் மொபைல் ஆன்ட்ராய்டாக இருந்தால் கூகிள் பிளே, ஐ போனாக இருந்தால் ஐ டியூன்ஸ் என குறிப்பிட்ட இடங்களிலிருந்து மட்டும் ஆப்ஸ் டவுன்லோட் செய்வது போல உங்களுடைய ‘செட்டிங்ஸ்’ ஐ மாற்றி வையுங்கள். அது ரொம்பவே பயனளிக்கும். தேவையற்ற ஆப்ஸ் உங்கள் ஸ்மார்ட்போனில் நுழையாமல் அது தடுக்கும். காட்லெஸ், கன்போடர், மாஸார் போன்ற பிரபல ஆன்ட்ராய்ட் மால்வேர்களெல்லாம் ‘தர்ட் பார்ட்டி’ எனப்படும் ‘கூகிள் பிளே’ க்கு வெளியே இருந்து மொபைலில் நுழைபவை தான்.
    Next Story
    ×